Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

 

– சிறப்பு நேர்காணல் –

 

சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், ‘இந்த கைதே சட்ட விரோதமானது,’ என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.

 

அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.

 

அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஏகே-74 ரக துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்களாக சீறிப்பாய்ந்தன. சந்திப்பில் இருந்து…

 

புதிய அகராதி : எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் அவசரம் காட்டுவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

 

அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய எவ்வளவோ திட்டங்கள் இருக்கின்றன. மருத்துவம் படிக்கிற வாய்ப்பையே நம்ம பிள்ளைகள் இழந்து, தற்கொலை பண்ணிக்கிற தேசத்தில் இருக்கிறோம். நாம் நினைத்த கல்வியைக் கற்க முடியாத நிலைமை இருக்கு.

 

தலைநகர் சென்னையிலேயே மழை நீர் வழிந்து ஓடுவதற்கு கால்வாய் இருக்கான்னா இல்ல. எல்லா இடத்துக்கும் தரமான சாலை இல்லை. இவ்வளவு அவசரம் அவசரமாக எட்டு வழிச்சாலையை போடுவதற்கு என்ன தேவை இருக்கு? சென்னைக்கு போக, ஏற்கனவே பத்து வழித்தடங்கள் இருக்கு. ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போறதுக்குக்கூட இத்தனை வழித்தடங்கள் இல்ல.

 

ஒரு மாவட்டத்துக்கும் இன்னொரு மாவட்டத்துக்கும் இடையில் போறதுக்கு தொடர்வண்டி போக்குவரத்து இருக்கு. வானூர்தி தடம் இருக்கு. அவ்வளவு பேரும் சேலத்துல இருந்து சென்னைக்கு போறாங்களா? இல்ல… அங்கே இருந்து வருகிறார்களா?

 

மலைகளை தகர்த்து, காடுகளையும், நீர்தேக்கங்களையும், விளைநிலங்களையும் அழித்து எட்டு வழிச்சாலையை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன இருக்கு? சாலை போட்டால் தொழிற்சாலை வரும்னா எ ந்த மாதிரி தொழிற்சாலை வரும்? எந்த முதலாளி கொண்டு வருவார்? அவர்களுக்கு எங்கே இருந்து நிலத்தை எடுப்பீங்க?

 

இது ஒரு வளர்ச்சி என்கிறார்கள். எதை நோக்கிய வளர்ச்சி இது? கார் ஓட்டிக்கிட்டு போறவனை பற்றியே கவலைப்படுகிறீர்களே ஒழிய, உலகத்துக்குச் சோறு ஊட்டுறவனைப் பத்தி கவலைப்படவில்லை. கார் டயர் தேயறதைப் பத்தி கவலைப்படுறீங்களே ஒழிய மக்களின் வயிறு காயறதப்பத்தி கவலைப்படல.

 

விரைவான பயணம், விரைவான உணவு. விரைவான மரணம். இதை நோக்கித்தான் இந்த திட்டம் போகுது. சென்னையில் அரை கிலோமீட்டர் தூரம் போறதுக்கு ஒரு மணி நேரம் ஆகுதே.

 

எட்டு வழிச்சாலை யாருக்காக போடப்படுகிறது? தேசத்தின் மக்களுக்கா? உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிக்கா? எங்களை, எங்களின் விளை நிலங்களில் இருந்து பல தலைமுறைகளாக காட்டை திருத்தி, மேட்டை திருத்தி நிலங்களாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை, வேரோடு வெட்டி வீழ்த்துகிற மரம்போல ஒரே நாளில் ‘டக்’குனு வெளியேறுனு சொல்கின்றனர்.

 

பல ஆயிரக்கணக்கான மக்களை நிலமற்ற அகதிகளாக்கி, தாய் நிலத்தில் இருந்து வெளியேற்றி கூலிகளாக ஆக்குவது எப்படி சரியாக வரும்?

 

தஞ்சாவூர்ல இருந்து மதுரைக்கு பல ஆயிரம் ஏக்கர் பறிக்கிறீங்க. அங்கிருந்த உழைக்கும் மக்களை வேரற்ற மரமாக சாய்த்துவிடுகிறீர்கள். அவன் அங்கே அகதியாகிறான். வானூர்தி நிலையம் விரிவாக்கத்தால பல ஆயிரம் பேர் அகதியாகிறான்.

 

இப்படி எல்லாருமே நிலமற்ற கூலிகளாக வெளியேறி வெளியேறி வந்துக்கிட்டே இருக்கும்போது தொழிற்சாலை வரும்… அதுக்கான நிலம், நிலத்தடி நீர், மின்சாரம் இதெல்லாம் எங்கே இருந்து, எப்படி வரும்? இதை ஒரு வளர்ச்சி என்கிறீர்கள்.

 

இதனால் வேலைகிடைச்சிடும்கிறீங்க. வேலை கிடைச்சா சம்பளம் கிடைச்சிடும்கிறீங்க. இங்கே மனித உழைப்பு மலிவாக கிடைக்குது. நிலத்தடி நீரை எவ்வளவு வேணும்னாலும் உறிஞ்சிக்கலாம். தடையற்ற மின்சாரம் கிடைக்குது. சாலை வரி, உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி எந்த வரியும் கிடையாது.

 

இதுதான் தொழில் முதலாளிகளுக்கான கட்டமைப்புனு சொல்லி கூட்டிட்டு வர்றீங்க. ஆக, என்னுடைய உழைப்பு குறைவாக கிடைக்குது. நான் தென்கொரியாவில் போய் வேலை செய்தால் எனக்கு ரெண்டு லட்சம் கொடுக்கணும். அவனே என் ஊரில் வந்து தொழில் தொடங்கினால் ஐம்பதாயிரம் கொடுத்தால் போதும். இங்கே மனிதவளம் அதிகமாக இருக்கு.

 

வேலையற்ற இளைஞர்கள் அதிகமாக இருக்கும்போது என்னுடைய மனித உழைப்பைச் சுரண்டி சுரண்டி உற்பத்தியை பெருக்கி பெருக்கி லாபத்தை பல ஆயிரம் கோடியில் கொண்டு போகிற அந்த நாடுகள் வளருமா? வெறும் சம்பளத்தை வாங்கி சாப்பிடுகிற கூலிக்கு வேலை செய்கிற என் நாடு வளருமானு கேட்டால் தேசத்துரோகினு சொல்றீங்க.

 

புதிய அகராதி : எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடினால் சேலத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் வாய்ப்பு இருக்கு என்று மக்கள் அஞ்சுகிறார்களே?

 

ஆமா… வாய்ப்பு இருக்குல்ல. மக்களை ஒன்றிணைய விடாமல் தடுக்கின்றனர். எங்களைப் போன்றவர்களை மக்களை சந்திக்க விடமாட்டேன்கிறார்கள். மக்களை அச்சுறுத்துகின்றனர். மக்கள் கண்ணீரும் கதறுலுமாக உள்ளக்குமுறலைக் கூறும்போதே அவர்கள் கண் முன்னாடியே என்னை கைது செய்கின்றனர்.

இதன்மூலம் என் மக்களுக்கு மறைமுகமாக ஒரு மிரட்டலை விடுக்கின்றனர். உங்களையும் இதுமாதிரி தூக்கிப் போடுவோம்ங்கிறீங்க. துப்பாக்கிச்சூடு என்ன காட்டுது… இதுமாதிரி போராடினாலே சுடுவாங்க போலருக்குனு ஒரு அச்சுறுத்தல் இருக்கு.

 

எல்லாருக்கும் உயிர் பயம்தானே… தொண்டைக்குழிக்குள் துப்பாக்கிய செருகிக்கிட்டு உரிமை வேணுமா உயிர் வேணுமானு கேட்டா எதை வேணும்னு சொல்லுவான்?. எப்படியாவது எங்கேயாவது போயி பிச்சை எடுத்தாவது பொழச்சுக்கலாம்னு நினைக்கிற ஒரு கூட்டம்… எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு… இவ்வளவு காலம் இந்த நிலத்துல இருந்துட்டு இனிமேல் எங்கே போய் வாழ்வோம்னு செத்துப்போயிடலாம்னு நினைக்கிற ஒரு கூட்டம்தான் இருக்கு.

 

என்னை சந்திச்ச பெரும்பாலான மக்கள், நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணி சாவறதைத்தவிர வேறு வழியில்லைனு சொன்னாங்களே ஒழிய, புள்ளக்குட்டிகளோட போய் பொழச்சுக்கிறுவோம்னு சொல்லக்கிடையாது.

 

அந்த மாதிரி மக்களை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கி விளைநிலங்களை பறிக்கணும்னு நினைக்கின்றனர். அதை மீறி ஒன்றிணைந்து போராடினால் தூத்துக்குடி போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் சேலத்திலும் நடக்க வாய்ப்பு இருக்குது.

 

புதிய அகராதி : உள்கட்டமைப்பும், வளர்ச்சியும் முக்கியம்தானே?

 

இந்த நாட்டின் முதல் குடிமகனுக்கு கிடைக்கின்ற அத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. அப்படி இல்லையே இங்கே. நீங்கள் வளர்ச்சியை சமமாக பார்க்கவில்லை. நீங்கள் நகர்ப்புற வளர்ச்சியைத்தான் திட்டமிடுறீங்க. டிஜிட்டல் இண்டியா, ஸ்மார்ட் சிட்டி இருக்கு. ஸ்மார்ட் வில்லேஜ் எங்கே இருக்கு?

இன்னும் 80 சதவீத மக்கள் கிராமத்தில்தான் இருக்கின்றனர். தேசத்தின் வளமே கிராமங்கள்தான். கிராமத்தை விட்டு மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி நகர்கிறான். நகர்ப்புற வளர்ச்சியத்தான் கட்டமைக்கிறீங்க. அங்கே புல்லட் டிரெயின் விடுறீங்க. கிராமத்துல கட்ட வண்டிகூட சரியாக ஓடல. ஆனால், எட்டு வழிச்சாலை என்கிறீர்கள்.

 

எல்லா ஊருக்கும் முறையான பாதை போட்டுக் கொடுக்கப்பட்டுருக்கா? உங்கள் ஊரில் நல்ல சாலை போட்டுருக்கீங்களா? பேருந்துக்குள் செல்பவர் குடை பிடித்துப்போகும் நிலை உள்ளது. மேற்கூரை ஒழுகுது. இதில் வளர்ச்சி பற்றி பேசுவது வெட்கமாக இல்லையா?

 

மருத்துவமனையில் செத்துப்போன மனைவியை ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தோளில் தூக்கிப்போவதை பார்க்கும்போது எதை நோக்கிய வளர்ச்சியை எங்களுக்கு கற்பிக்கிறீங்க? 48 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்கப் போகிறான். குடிசை இல்லாத நகரமாக்குகிறோம் என்று குடிசைகளை பிரிச்சி எறிவதை வளர்ச்சி (சிரிக்கிறார்) என்கிறார்கள்.

 

புதிய அகராதி : தமிழகத்தில் மக்கள் இயல்பாகவே நகர்ப்புறங்களை நோக்கித்தானே நகர்கின்றனர்?

 

அதுதான் ஆபத்தானதுங்கறேன். கிராமப்புறத்தின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்காமல், ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை சமவிகிதத்தில் வளர்த்தெடுப்பது சாத்தியம் இல்லை.

 

தேசத்தை மனித உடலாகத்தான் பார்க்க வேண்டும். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைக்கும் எல்லாவற்றுக்கும் வளர்ச்சி இருக்கிற பயிற்சி கொடுப்பதுதான் ஆரோக்கியம். தோள்பட்டை மட்டும் வீங்கிக்கிட்டே போனால் அது வளர்ச்சி இல்லை; கட்டி. அது நோய்.

 

நகர்ப்புறத்தில் டிரெயின் இருக்கு; வேலைவாய்ப்பு இருக்கு என்றால் கிராமப்புறத்தை காலி பண்ணிட்டு நகர்ப்புறத்திற்குதானே போவான்? அப்போது நகரங்கள் பிதுங்கி வழியும். அங்கு விலைவாசி ஏறும். வீட்டுமனை விலை உயரும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்த மாதிரி வளர்ச்சி பேராபத்தானது.

 

நகரங்களுக்கான பால், முட்டை, கீரை, காய்கறி உணவுப்பொருள் கிராமங்களில் இருந்துதான் வரும். கிராமங்கள் காலியானால் இவை எல்லாம் எப்படி வரும்? நகரத்தில் என்னென்ன கிடைக்குதோ, அதை மக்களின் வாழ்விடங்களை நோக்கி நகர்த்தாதது அரசினுடைய பிழை.

 

புதிய அகராதி : அப்படி எனில் கிராமங்களும் நகரங்களாகி விடும்தானே?

 

அப்படி இல்லை. நான் கேட்பது வசதி. நகரத்தில் கிடைக்கும் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பை கிராமத்திற்கு கொண்டு வந்துவிட்டால் நான் ஏன் நகரப்போகிறேன்? நகரத்தில் அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனை, கிராமத்தில் 60 கி.மீ., தொலைவில் இருப்பது பிரச்னைதானே? அதை 20 கி.மீ., தொலைவுக்குள் கொண்டு வாருங்கள். கிராமங்களை நோக்கி அரசு போகவே இல்லை.

 

இந்த கட்டமைப்பே, எல்லா மாநிலங்களின் உரிமையும் தன்னகத்தே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு அரசு நினைக்குது. இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. உருவாக்கப்பட்டது. எல்லாமே கற்பிதம்… மாயை. இங்கு தேசப்பற்று திணிக்கப்பட்டது. வெள்ளைக்காரன் கத்தி முனையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தியாவின் தேசப்பற்று என்கிறார் மார்க்ஸ்.

 

இந்த தேசம் கல்வியை எடுத்துக்குது, மருத்துவத்தை எடுத்துக்குது. மின் உற்பத்தியை எடுத்துக்குது. எல்லாவற்றையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளையும் நிர்வாகத்தையும் பறிக்குது.

 

அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் பரவலாக்கிடுங்க. இல்லாவிட்டால் பேராபத்து வரும். ஒரு கட்டி ரொம்ப பெருத்துக்கொண்டே போனால் ஒருகட்டத்தில் வெடித்துவிடும். சென்னை மாதிரி பெருநகரம் இன்னும் பத்து ஆண்டுகளை தொடும்போது பேராபத்தை சந்திக்கும். நகர விரிவாக்கம் என்ற பெயரில் விளை நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டியது வரும்.

 

130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில் விளைநிலங்களை அழித்துக்கொண்டே வந்தால் அத்தியாவசிய பொருள்களுக்கு எங்கே போவீங்க? வெங்காயம், பருப்புக்கே இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம். நீங்கள் காரை ஏற்றுமதி செய்துட்டு சோறை இறக்குமதி செய்யும் நிலை வந்தால் இந்த நாடு சிதறி விடும்.

 

புதிய அகராதி : தவறானவர்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுப்பது மக்களின் பிழைதானே?

 

மக்களிடம் இருந்துதான் நீங்க, நான், நல்லகண்ணு, சகாயம் போன்ற எல்லா ஆளுமைகளும் வந்திருக்கிறோம். கல்வி, அதுசார்ந்த வேலைவாய்ப்பு, அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் கொடுக்கப்பட்டிருக்கா? மற்ற நாடுகள் அதை நோக்கி நகர்கின்றன. இந்த அரசு அதை நோக்கி நகராவாவது செய்திருக்கா?

 

என் மக்களுக்கு மீள முடியாத அடர்த்தியான வறுமை; அதனுடைய குழந்தையாக இருக்கின்ற அறியாமை; அந்த அறியாமையின் குழந்தையாக இருக்கின்ற மறதி. இது மூன்றைத்தவிர இத்தனை ஆண்டுகளில் என் மக்களுக்கு கொடுத்தது என்ன? இந்த மூன்றும்தான் இந்த ஆட்சியாளர்களின் முதலீடாக இருக்கிறது.

 

நான் பேசுகிற அரசியலை என் அம்மா அப்பா பேசுவார்களா? நான் புறச்சூழலை கவனிக்கிறேன். என் தாய் தந்தையால் புறச்சூழலை கவனிக்க முடியாது. அவர்கள் காலை அஞ்சரை மணிக்கெல்லாம் வயக்காட்டுல இருப்பாங்க.

 

ராத்திரி ஆக்குன பழைய கஞ்சி, பழைய வெஞ்சனத்தை எடுத்துட்டுப் போனாங்கனா பொழுது சாயற வரைக்கும் வயக்காட்டுலதான் வேலை. இப்படித்தான் 80 சதவீத மக்கள் இந்த தேசத்துல இருக்கான். நிலம் சார்ந்து… தொழிற்சாலை சார்ந்து… வாழும் தினக்கூலிகளாக இருக்கோம்.

 

இந்த நிலையில தொலைக்காட்சில செய்தி பார்த்து, அய்யய்யோ செய்யாதுரை இத்தனை ஆயிரம் கோடி அடிச்சிட்டானா? இது எப்படி வந்தது என்று சிந்திப்பதற்கெல்லாம் நேரம் இல்ல. இந்த புறச்சூழலை அவனால் கவனிக்க முடியாது.

 

கவனிக்க முடியாமல் அவனை அழுத்துவது வறுமை. கவனிக்காமல் போவதுதான் அவனுடைய அறியாமை. அதனால்தான் நேற்று இந்த தலைவன் அப்படி பேசுனானே இன்னிக்கு இப்படி பேசுறானே என்பதையெல்லாம் மறந்து விடுகின்றனர்.

 

அதனால்தான் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவோம்னு சொன்னதெல்லாம் இப்போது மறுக்கின்றனர். எலக்ஷன் ஜூம்லா என்கிறார்கள். வளர்ச்சி என்பது வெறும் கவர்ச்சியான பசப்பு வார்த்தை.

 

பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது வேளாண்மை சார்ந்ததுதான். ஜே.சி. குமரப்பா சொன்னதுதான் தற்சார்பு பொருளாதாரம். அதைத்தான் நாமும் முன்வைக்கிறோம். அப்படிப்பட்ட தாய்மை பொருளாதாரம் வேண்டும் என்கிறோம். இன்றைக்கு இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பது வாடகைத்தாய் பொருளாதாரம் அல்லது அடாவடி பொருளாதாரம்.

 

நான் உற்பத்தி செய்ததன் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட அதிகமாக ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் அடாவடியாக பறித்துக்கொண்டு போய் விடுவார்கள். நாங்கள் முன்வைக்கும் தாய்மை பொருளாதாரத்தில் உற்பத்தியாளரே லாபம் பெற முடியும்.

 

புதிய அகராதி : இங்கே துண்டு துண்டு விளைநிலங்கள்தான் அதிகம். இங்கே காந்தியின் தற்சார்பு பொருளாதாரம் இப்போது பொருத்தமாக இருக்குமா?

 

அதானிக்காக எங்கள் ஊர் கமுதியில் 5000 ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா எடுத்துக் கொடுத்தார். அங்கே ஏன் பண்ணை நிலத்தை உருவாக்க முடியவில்லை? 50 ஏக்கரில் நாட்டுக்கோழி வளர்க்கலாமே? 100 ஏக்கரில் ஆடு வளர்க்கலாமே? சின்னச்சின்னதா வேளாண்மை சார்ந்து தொழில் வாய்ப்புகள் வரும்போதுதான் எல்லாருக்குமே வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.

 

எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவனுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவோம்னு சொல்லல. முன்னுரிமை கொடுக்கிறோம்னு சொல்கின்றனர். 80 லட்சம் பேர் படிச்சிட்டு, வேலையில்லாமல் வெளியில் இருக்கிறானே அவனுக்கு முதலில் அரசு வேலை கொடு. அரசு வேலையை வெச்சிக்கிட்டு காத்திருக்கிற மாதிரி, நிலம் கொடுத்தவனுக்கு வேலையில் முன்னுரிமை என்பது வெற்று வார்த்தை.

 

தற்சார்பு என்பது எதில் செய்ய முடியாது? காரை நீங்கள் உற்பத்தி செய்ய முடியாதா? செல்போன் தயாரிக்க முடியாதா? எதற்கு கொரியன் முதலாளி வருகிறார்? துப்பாக்கி தயாரிக்க முடியாதா? எதுக்கு ரஷ்யாவில் வாங்க வேண்டும்? நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க முடியாதா? இங்குள்ள படித்த இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி, அங்கே தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு நாமே தயாரிக்க வேண்டும்.

 

இங்கே ‘மேக் இன் இந்தியா’ என்பது வாடகைத்தாய் முறைக்கு ஒப்பானது. ‘மேக் இன் இந்தியா’ என்பதில் நிலம் என்னுடையது. நாடு என்னுடையது. பொருள் அவனுடையது. அந்த தேசம் எப்படி வளரும்?

 

புதிய அகராதி : அதற்காக கிராமப்பொருளாதாரம் வெற்றி பெறும் என்று எப்படி நம்புகிறீர்கள்?

 

நீரு சோறு முட்டை பால் காய்கறி… இதெல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லா பொருளாதாரமும் கிராமத்தில்தானே இருக்கு? தமிழ்நாட்டில் பாலின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி. நீங்கள் 25 ஆயிரம் கோடிக்கு சாராயம் வித்து சாகடிச்சிட்டு இருக்கீங்களே.

 

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பால் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. ஆந்திர முதலாளிகள் ஒரே நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் ஏத்திடறாங்க. உங்கள் அரசு ஒன்றுமே பண்ண முடியல. பால் விநியோகம் பன்றவன் கதறுகிறான். அவன் பண்ணையாக மாடு வெச்சி வளர்க்கிறான். அதெல்லாம் அவமானம்னு நீங்க வளர்க்கறதில்ல. பிரச்னை அங்கதான் இருக்கு.

 

நெசவு செய்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், தேனீ வளர்த்தல், தச்சு வேலை செய்தல், மீன் வளர்த்தல் எல்லாமே பொருளாதாரம் இல்லையா? பளபளக்கும் கண்ணாடியும், விரைந்து செல்லும் சாலையும், விலையுயர்ந்த காரும்தான் வளர்ச்சி என்கிறீர்கள். வானூர்தியில் செல்வது வளர்ச்சிதான். ஆனால் அதில் செல்பவருக்கும் பசிக்கும்தானே? அவனுக்கு ரொட்டியும் பாலும் நிலத்தில் இருந்துதான் போகும் என்பதை கவனிக்க வேண்டும்.

 

நாட்டின் முக்கியமானவர்கள் பயணிக்கக்கூடிய ஒரு ஹெலிகாப்டர்கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

 

அப்புறம் ஏன் தொழில் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறீர்கள்? பருப்பு, வெங்காயத்தை எகிப்தில் இருந்து இறக்குமதி செய்கிறீர்கள். அதைக்கூட உங்களால் விளைவிக்க முடியவில்லை எனில், என்ன வெங்காயம் உங்கள் வளர்ச்சி? இதை விளைவிப்பதில்கூட தற்சார்பு அடைய முடியாதா?

 

பவானி ஆற்றில் தண்ணீர் விநியோகிக்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 3150 கோடிக்கு ஒப்பந்தம் போடுகின்றனர். என் தண்ணீரை எனக்கு கொடுப்பதற்கு இடையில் எதற்கு இன்னொருவர்? இந்த இடத்தில்கூட தற்சார்பை தகர்க்கிறீர்கள்.

 

ஒவ்வொரு இடத்திலும் ஒரு வகையான தற்சார்பு இருக்கு. எங்க அப்பத்தா ஒரு மாடு வெச்சிருப்பா. அது ஒரு லிட்டர் பால் கறக்கும். 100 மில்லி, 200 மில்லினு தெருவெல்லாம் ஊத்திட்டு வருவா.

 

அந்த தெருவின் பால் தேவையை நிறைவடைய வைப்பார். 100 மில்லி 2 ரூபாய்னு வித்துட்டு வருவா. கேஷ்லெஸ் எகானமி என்ற பெயரில் 2 ரூபாயை அட்டையில் கிழித்து தர முடியுமா? உங்கள் திட்டம் எப்படி தற்சார்புகளை தகர்க்கிறது என்பதை பார்த்தீர்களா?

 

புதிய அகராதி : இந்த மாற்றம் எல்லாமே ‘காட்’ ஒப்பந்தத்திற்குப் பிறகுதானே வந்தது?

 

ஆமாம். எதற்க அந்த ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்துப் போட்டார்கள்? சொல்லப்போனால் நீண்ட காலமாகவே இதுதான் நடக்குது. உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்து போடுவதற்கு முன்பே கல்வியையும், தண்ணீரையும் வியாபாரம் ஆக்கியாச்சு.

 

கல்வி, மருத்துவம், குடிநீர் விநியோகம், சாலை போடுதல், போக்குவரத்து, பராமரித்தல் இப்படி எதெதெல்லாம் சேவையோ அதெல்லாம் அவனுக்கு தொழில். தொழில் செய்வது அரசின் வேலை இல்லை; அது முதலாளிகளின் வேலை என்கிறான்.

 

இதையெல்லாம் முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு கமிஷன் வாங்கிட்டு சும்மா இரு என்கிறான். இங்கே முதலாளிகளுக்கான முகவர்கள் அதிகாரம்தான் உருவாக்கப்படுதே ஒழிய, மக்களுக்கான அதிகாரம் உருவாக்கப்படல.

 

புதிய அகராதி : இதற்கெல்லாம் தனித்தமிழ்நாடு தீர்வாக அமையுமா?

 

நாங்கள் தனித்தமிழ்நாடு கேட்கவில்லை. ஆனால், தன்னாட்சி அதிகாரம் கேட்கிறோம். அதற்கான சாத்தியத்தை காலம்தான் தீர்மானிக்கும். இந்தியா, பல்வேறு தேசங்களின் ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியம்போலதான் இந்தியாவும் இருந்திருக்க வேண்டும். தனித்தனி பாராளுமன்றம், தனித்தனி ராணுவம் அப்படித்தான் இந்தியா இருந்திருக்க வேண்டும்.

 

கிழக்கு தைமூர், மேற்கு தைமூர் போல நாம ஏன் வட இந்தியா, தென் இந்தியா போல இருக்கக்கூடாது என்ற கருத்து இப்போது உருவாகி வருகிறது. இந்த நாடு சரியாக இருக்க வேண்டும் என்றால் பணம் அச்சிடுதல், நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு இந்த மூன்றையும் நீயே வெச்சுக்கோ.

 

மற்றவற்றை எல்லாம் அந்தந்த மாநில மக்களின் எதிர்காலம் கருதி அவனுக்கு முழு அதிகாரத்தை கொடுக்கணும். அதற்கு அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பரவலாக்கம் செய்ய வேண்டும்.

 

என் மக்களுக்கான கல்வியை என்னிடம்தானே கொடுக்க வேண்டும். நீட் என்று எப்படி ஒரே தேர்வை வைக்க முடியும்? மின்சாரமே போய்ச்சேராத கிராமத்துல இருந்து நீட் தேர்வு எழுதி மேலே வா என்றால் எப்படி சாத்தியம் ஆகும்? அவன் எப்படி மின்னணு பரிவர்த்தனைக்குள் வர முடியும்? என் பிள்ளைக்கு எப்படி கல்வி கொடுக்கணும், எப்படி தண்ணீர் கொடுக்கணும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒவ்வொரு தேசிய இனங்களுக்கான தன்னாட்சி உரிமை வேண்டும்.

 

புதிய அகராதி : இப்போது கர்நாடகா மாநிலம் தன்னாட்சி பற்றி அதிகம் பேசுகிறது…

 

பாதிக்கப்படும்போது எல்லோருமே பேசுவார்கள்.

 

புதிய அகராதி : ஆனால் தமிழ்நாடுதான் நீண்ட காலமாக சுயாட்சி பற்றி பேசி வந்திருக்கிறது…

 

(சற்றே ஆவேசமாக) சுயாட்சி பற்றி திராவிட கட்சிகள் பேசி வருவது ஏமாற்று வேலை. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் எல்லா உரிமைகளும் பறிகொடுத்து விட்டோம். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரே கட்சி திமுக.

 

இந்திராகாந்தி ஆட்சியின்போது கல்வி பொதுப்பட்டியலுக்கு போயாச்சு. திமுக கண்டுகொள்ளவில்லை. கல்வி, மருத்துவம் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டோம். எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் வானூர்தியில்தான் போகிறார்கள். அங்கே எல்லா அறிவிப்புகளும் இந்தி, இங்கிலீஷ் மொழிகளில்தான் இருக்கின்றன.

 

இந்தியை எதிர்த்த தமிழ்நாட்டில் இந்தி மொழி இருக்கு. அதை எதிர்க்காத கேரளாவில் இந்தி மொழி இல்லை. இப்போது மீண்டும் சுயாட்சி மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை. யார் உரிமைகளை பறித்தார்களோ அவர்களுடனேயே ஆட்சி அதிகாரத்தை சுவைப்பதற்காக கூட்டணி வைத்தீர்கள். தேவையின் அடிப்படையில், தேர்தலுக்குப் பிந்தைய ஆதரவுதான் பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

 

புதிய அகராதி : சேலம் விமான நிலையம் விரிவாக்கத்தைக்கூட வளர்ச்சிக்கான அரசியலாக பார்க்கவில்லையா?

 

சேலம் விமான நிலையத்திற்கு இப்போதுள்ள 160 ஏக்கர் நிலப்பரப்பே போதுமானது. 570 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதை விரிவாக்கம் செய்வது குறித்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து சிந்திக்கலாம். இப்போது இருக்கும் இடத்திலேயே இன்னும் பத்து விமானங்கள் இயக்கலாம்.

 

புதிய அகராதி : எட்டு வழிச்சாலைபோல், விமான நிலையம் விரிவாக்கத்திலும் அரசு தீவிரம் காட்டுகிறதே?

 

இதெல்லாமே சாகர்மாலா திட்டத்தின் படிநிலைகள்தான். தொடர்வண்டி போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து, விமான போக்குவரத்து மூன்றையும் கப்பல் போக்குவரத்துடன் இணைப்பதுதான் சாகர்மாலா திட்டம்.

 

அன்னிய நாடுகளுக்கு இங்கிருந்து வளங்களை கொள்ளை அடித்துச் செல்வதற்குதான் இந்த திட்டங்களில் வேகம் காட்டுகின்றனர். வெளிநாட்டு முதலாளிகள் என் நீர் வளம், நில வளம் எல்லாத்தையும் முடிச்சிட்டு நாட்டையே காலி பண்ணிட்டு போய்டுவான்.

 

புதிய அகராதி : தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

 

ரோடு போடறதுக்கு எதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்டனர். ஆட்டுத்தோல் விற்ற செய்யாதுரை வீட்டில் இத்தனை ஆயிரம் கோடி இருக்குனா, யாருக்காக எட்டு வழிச்சாலை போடுகிறார்கள் என்பது புரிந்திருக்குமே என்றேன். காருக்குள் பணத்தை ஒளித்து வைப்பதுதான் அரசு சொல்லும் வளர்ச்சி.

 

புதிய அகராதி : உங்கள் மீதான தொடர்ச்சியான வழக்குப்பதிவுகளால் எட்டு வழிச்சாலைக்கு எதிராக களமாடுவதில் சிறிது அமைதியாகி விட்டதுபோல் தெரிந்தது…

 

பேசிக்கொண்டுதானே இருக்கிறேன். ஸ்டாலினை விட நான் அதிகம் பேசுகிறேனா இல்லையா? இந்த ரெண்டு மாசம்தான் பேசல. எனக்கு பேசறதுக்கு அனுமதி கிடையாதுங்க. அனுமதியை மறுத்து கடிதம் கொடுங்கள் என்றால் அதுவும் தர மறுக்கின்றனர்.

 

சிறைக்கு அஞ்சியோ போராட்டத்திற்கு பயந்தோ கிடையாது. இப்பவும் சொல்றேன்… எட்டு வழிச்சாலையை போட விட மாட்டோம். இப்போது மக்கள் குமைந்து கொண்டிருக்கிறார்கள். என்னை தைரியமாக விட்டார்கள் எனில், ஒரு வாரத்திற்குள் மக்கள் எல்லோரும் கிளம்பி விடுவார்கள்.

 

புதிய அகராதி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது உங்களைப்போன்ற போராளிகள், இயக்கத்தினர் போராட்டத்தில் பங்கெடுக்காதது குறித்தும் விமர்சனங்கள் வந்தனவே?

 

(கோபமாக) அப்படி சொல்வது முட்டாள்தனம். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் பங்கெடுக்க எங்களை யாரும் கூப்பிடவே இல்லை. எங்கள் மீது குற்றம் சாட்டுவது சுத்த முட்டாள்தனம். பையத்தியக்காரத்தனம். அந்தப் போராட்டம் என்பது மக்களாக முன்னெடுத்தது.

 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிகமாக வழக்கு வாங்கின ஒரே கட்சி எங்கள் கட்சிதான். ஒருத்தர் மீது 86 வழக்கும், மற்றொருவர் மீது 56 வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போதுகூட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

சீமான் வந்தோ, திருமாவளவன் வந்தோ, வேல்முருகன் வந்தோ கலெக்டரிடம் மனு கொடுப்பதாக திட்டம் இல்லை. இதுவரை எங்களை தூத்துக்குடியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

 

புதிய அகராதி : ரஜினிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கிறீர்களே?

 

ரஜினி, மக்களுக்கு எதிராகத்தானே பேசி வருகிறார்? அதனால்தான் அவருக்கு எதிராக பேசுகிறோம். அதாவது ரஜினி, பாஜக, அதிமுக சேர்ந்து கூட்டணி வைப்பதற்கான திட்டத்துடன் நகர்கின்றனர். அதனால்தான் எட்டு வழிச்சாலையை ரஜினி ஆதரிக்கிறார். அதற்கு உடனே அமைச்சர் உதயகுமார், சூப்பர் ஸ்டாரே சொல்லிவிட்டதால் அந்த சாலை சூப்பர் சாலையாக அமையும் என்கிறார்.

 

ரஜினி அவசியம் இல்லை. இங்கே மக்களை நேசிக்கக்கூடிய ஆகப்பெரும் தலைவர்கள் இருக்கின்றனர். புதிதாக ரஜினியும், கமலும் வந்து சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.

 

நான் எப்படி ஆட்சி நடத்துவேன் என்று புத்தகம் வெளியிட்டு இருக்கிறேன். அதில் இல்லாத ஒன்றை ரஜினியும், கமலையும் சொல்லச்சொல்லுங்கள். அவர்களை விமர்சிப்பதை விட்டுவிடுகிறோம்.

 

புதிய அகராதி : உங்கள் சித்தாந்தங்கள் மக்களிடம் புரிதலை ஏற்படுத்தி இருக்கிறதா?

 

இருக்கோ இல்லையோ… ஓஷோ சொன்னதுபோல விதைகளை விதைத்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் என்ன இவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள்… நான் எட்டாவது ஆண்டில் பயணிச்சிக்கிட்டு இருக்கேன். நான் ஒன்றும் ராகுல் காந்தி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் போல அரசியல் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அல்லது ரஜினி, கமல் போல ரசிகர்களை சந்தித்தும் வரவில்லை.

 

நான் ஒரு சாதாரண காட்டான்….பாமரன். எத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை நோக்கி திரும்பி இருக்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள். விதைகள் முளைக்காமல் இல்லை. ஒரே நாளில் மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. நிகழாமலும் போய்விடாது.

 

புதிய அகராதி : தேர்தல் பாதை வழியில் தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியாது என்றும் சொல்கிறார்களே?

 

தேர்தல் பாதைக்கு வராதவன் எல்லாம் திராவிட இந்திய கூட்டாளி. கடைசியாக இருக்கும் விடுதலை அரசியல் விடுதலைதான். அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான சாவி, ஆட்சி அதிகாரம் மட்டுமேதான் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.

 

தமிழ் தேசம் என்பது இந்தியாவில் இருந்து நிலத்தை துண்டாக எடுத்து தேசம் அமைப்பது அல்ல. நாங்கள் பேசுவது தமிழ் தேசிய இனத்திற்கான அரசியல். இதற்குள் பிற மொழிக்காரர்களும் இருப்பார்கள். ஆனால் தலைமை அதிகாரம் எப்போதும் தமிழர்க்கு மட்டுமே. இந்த தத்துவ நிலைப்பாட்டில் நான் உறுதியாக இரு க்கிறேன்.

 

இதைவிட்டுவிட்டு, என்னை பிரிவினை அரசியல் பேசுவதாக சொல்பவன் கேடுகெட்ட அயோக்கியன். தேசிய இனங்களின் உரிமைக்காக நிற்காதவன் கம்யூனிஸ்டுகளே இல்லை. இடதுசாரிகளில் முன்னணி தலைவனாக இருப்பவனில் எவன் தமிழன்? இந்த மாநில அரசு என்பது பாஜக அரசு. தமிழ் இனத்தைப் பற்றி பேசுவதால்தான் என்னை மட்டும் இந்த அரசு எதிர்க்கிறது.

 

புதிய அகராதி : எல்டிடிஇ தலைவர் பிரபாகரனை நீங்கள் வெறும் 8 நிமிடம்தான் சந்தித்தீர்கள் என்றும், 300 கோடி ரூபாய் பணம் வாங்கி விட்டீர்கள் என்றும், ஆமைக்கறி சாப்பிட்டது பற்றி எல்லாம் வைகோ திடீரென்று உங்களை கடுமையாக விமர்சிக்க காரணம் என்ன?

 

காங்கிரஸ் கட்சிதான் போர் நடத்தி இலங்கையில் தமிழர்களை கொன்றது. அதற்கு திமுக துணை நின்றது. இது உலக சத்தியம். இப்போது வைகோ உள்பட எல்லோருமே திமுகவை ஆதரிக்கின்றனர். இனிமேல் ஈழம், விடுதலைப்புலிகள், பிரபாகரன் பற்றி பேசும் அருகதையை அவர்கள் இழந்துவிட்டனர்.

இப்போது ஈழத்தைப் பற்றி பேச நான் மட்டும்தான் இருக்கிறேன். அதனால் என்னை களங்கப்படுத்தியாக வேண்டும். பயணம் போனது நான். பார்த்தது நான். என்ன நடந்தது என்று நான்தான் பேச வேண்டுமே ஒழிய, இங்கிருந்துக்கிட்டு ஒருத்தர் பேசக்கூடாது.

 

ஈழத்தில் அண்ணன் பிரபாகரன் வீட்டில் எனக்கு ஆமைக்கறி பரிமாறப்பட்டது. என்னோடு ஆமைக்கறி சாப்பிட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன், இன்னும் லண்டனில் இருக்கிறார்.

 

தலைவர்தான் எங்களுக்கு 28 கிலோ ஆமைக்கறி அனுப்பி வைத்திருந்தார். நாங்கள் போட்டிப்போட்டு சாப்பிட்டோம். என்னோடு இருந்தவர்கள் சோறெல்லாம் வைத்துக்கொண்டனர். நான் வெறும் ஆமைக்கறி மட்டும்தான் சாப்பிட்டேன்.

 

ஏகே-74 ரக துப்பாக்கியில் சுட கடாபி எனக்கு பயிற்சி கொடுத்தார். அப்போது அண்ணன், ஒவ்வொரு துப்பாக்கி பற்றியும் விளக்கிவிட்டு எனக்கு கையில் கொடுப்பார். ரஷ்யா ராணுவத்தில் முதலில் ஏகே-47 துப்பாக்கிதான் பயன்படுத்தினர். பின்னர் அங்கு ஏகே-74 துப்பாக்கி கொண்டு வரப்பட்டது. அதற்குப்பிறகு அந்த ரக துப்பாக்கி அண்ணனிடம்தான் இருந்தது.

 

அந்த துப்பாக்கியில் சுட எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அவரிடம், இந்தியாவிலேயே ஏகே-74 ரக துப்பாக்கியால் சுட்டவன் நான் மட்டும்தான் இருக்கேனா என்று கூட வேடிக்கையாக கூறினேன். அதற்கு அவர், ‘அதை இங்கே சொல்லாதே; இந்தியாவில் போய் சொல்லு,’ என்றார். (வெடிச்சிரிப்பு).

 

தலைவருக்கும் எனக்குமான தொடர்பை பற்றி பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு? கடந்த 2008ல் ஈழத்தில், தலைவரை சந்திக்க என்னை நடேசன் அண்ணன்தான் அழைத்துச்சென்றார். இரவில்தான் நாங்கள் சென்றோம். அங்கே ஒரு குடிசை இருந்தது. பொட்டு அண்ணன், காஸ்ட்ரோ அண்ணன், தமிழேந்தி அப்பா, தலைவர் எல்லோரும் இருந்தனர்.

 

அப்போதுதான் அவருடன் படம் எடுத்துக்கொண்டேன். அந்தப்படம் ஏற்கனவே வெளியாகியிருக்கு. மகஇக என்ன சொல்லுது, தா.பாண்டியன் என்ன சொல்றாரு, வேல்முருகன், சத்யராஜ், சாஹூல் ஹமீது, இயக்குநர் பாலா, அமீர் பத்தி எல்லாம் குறிப்பிட்டு சொல்றேன். அதன்பிறகு இரவு 9.30 மணிக்கெல்லாம் தூங்கப் போய்ட்டோம்.

 

அதுக்கப்புறம்… அடுத்த நாள் அவர் என்ன சொன்னாருனா, அவனை அப்படியே ஊருக்குள்ள விடாதீங்க. யாராவது ஊடுருவி இருப்பான். அவனை படம் எடுத்துப் போட்டுட்டா கஷ்டம். அதனால அவனுக்கு சீருடையை மாட்டிவிடுங்கனு சொன்னாரு. சீருடை அணிந்து கொண்டு நடந்து வந்தேன்.

 

என்னைப் பார்த்ததும் அண்ணன் கட்டிப்பிடித்து ஒரு தட்டு தட்டினார். அந்தப்படம் மட்டும் வெளியே வந்துச்சு… செத்தாய்ங்க எல்லாரும். அப்போது காணொளியாகவும், புகைப்படமாகவும் படம் எடுத்தனர். நான் ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வானூர்தியில் செல்வதாக இருந்ததால்தான் பாதுகாப்பு கருதி, சீருடையுடன் எடுத்த படத்தை எனக்கு கொடுக்க மறுத்துவிட்டனர்.

 

ஒருநாள் 3 மணியில் இருந்து இரவு 9 மணி வரை எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்தனர். துப்பாக்கி விசையை சரியாக அழுத்தத் தெரியாமல் தடுமாறியபோது, அண்ணனே எனக்கு சுட பயிற்சி அளித்தார். அவர் சொன்னதை எல்லாம் நான் வெளியே சொல்ல முடியாது. அண்ணன்கூட ரெண்டு நாள் இருந்தேன்.

 

அண்ணனுடன் மூன்றாவது சந்திப்புக்கு தயாராகிட்டோம். திடீரென்று அதை வேண்டாம் என்று நிறுத்திவிட்டனர். அதற்குள் அங்கு போர் தொடங்கிடுச்சு. அண்ணனை சுத்திட்டாங்க. ஒரு தலைவரோடு எடுத்த படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட முடியுமா?.

 

வெறும் 8 நிமிடம் மட்டுமே சந்தித்த ஒருத்தனிடம், பேரன்பும் நம்பிக்கையும் இல்லாமல், ‘நீ சீமானிடம் சொல்லு…. தொடர்ச்சியாக அவரை முன்னெடுக்க சொல்லுங்க. அவனிடம்தான் விட்டுட்டுப் போறோம்,’ என்று எப்படி ஒரு கடற்படை தளபதி பேசுவான்?

 

சர்வதேச நாடுகளில் சீமான் நுழைய முடியாமல் போனதற்கும், இங்குள்ள தலைவர்கள் என் மீது காழ்ப்புணர்வு கொள்வதற்கும் இதுதான் பிரச்னை. என் செயல்பாடுகளை எல்லாம் மூன்று ஆண்டுகள் கண்காணித்த பிறகு, என்னை ஈழத்திற்கு கடத்திக்கொண்டுதான் சென்றார்கள்.

 

நான் தவிர்க்க முடியாத ஆதாரங்களை காட்டுவேன் என்றும், உணர்ச்சிவசப்பட்டு பேசுவேன் என்றும் எதிர்பார்க்கிறார்கள். நிரந்தரமாக என்னை காலி பண்ண வேலை செய்கிறார்கள். ஒரு சத்தியம் சொல்லணும்னா… எங்க அண்ணன், இங்குள்ளவர்கள் மீது மதிப்பு வெச்சிருந்தாரு. ஆனால், அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை.

 

சீற்றம் குறையாமல் முழங்கினார் சீமான்.

 

#வீடியோவை பார்க்க…

 

– ஞானவெட்டியான்.