Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் புகார்!

 

சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் கடிதம் அளிக்கும் நூதன போராட்டத்தை ராமலிங்கபுரம், குப்பனூர் கிராம விவசாயிகள் கையிலெடுத்துள்ளனர்.

 

சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் தனியார் பட்டா நிலங்கள் 186 ஹெக்டேர் உள்பட 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியார் நிலங்கள் பெரும்பாலும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் என்பதாலும், சந்தை மதிப்பைக்காட்டிலும் அடிமாட்டு விலைக்கு அரசு இழப்பீடு வழங்குவதாலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எட்டு வழிச்சாலை அமையவுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைவிட சேலம் மாவட்ட மக்கள் தொடர்ந்து இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிடுதுவது, தற்கொலை போராட்டம் என நேரடியாக விவசாயிகள் மோதிப்பார்த்தனர். பின்னர் அம்மனிடம் பொங்கல் வைத்து கோரிக்கை மனு அளித்தல், மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டி எதிர்த்தல், சாபம் விடும் போராட்டம் என நூதன முறைகளிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 

இதன் ஒரு பகுதியாக, சேலத்தை அடுத்துள்ள ராமலிங்கபுரம், குப்பனூர் கிராம விவசாயிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பும் நூதன போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

 

மனித உரிமைகள் ஆணையத்திற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ”எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்திற்காக தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி எங்கள் விளை நிலத்திற்குள் புகுந்து நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மனித உரிமைகள் மீறிய செயலாகும். தயைகூர்ந்து எங்கள் நிலத்தில் இருந்து அவர்களை வெளியேறவும், இத்திட்டத்தை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கேட்டுள்ளனர்.

 

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக அஞ்சல் அட்டையில் எழுதி, கையெழுத்திட்டு மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து ராமலிங்கபுரம் விவசாயிகள் சிவகாமி, கவிதா, குப்புசாமி ஆகியோர் கூறுகையில், ”ஏற்கனவே என்ஹெச்-68 சாலைக்காக எங்கள் நிலத்தை கையகப்படுத்தினர். அந்த திட்டத்தால் எங்கள் ஊரே பாதி அழிந்து போனது. இப்போது எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துவதாலும், இந்த இடத்தில் அமையவுள்ள கிளவர்லீப் பாலத்தாலும் எஞ்சியிருக்கும் கிராமமும் அழியும் அபாயம் உள்ளது.

 

இந்த திட்டத்தால் குடியிருப்புகள், விளை நிலங்கள் மட்டுமின்றி ஊர் மக்களே கட்டிமுடித்த பள்ளிக்கூடம், தண்ணீர் தொட்டி கோயில் எல்லாமே பறிபோகிறது. திரும்பத்திரும்ப எங்களை நசுக்கினால் நாங்கள் எங்கே போவோம்?.

 

எங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தருவோம் என்றனர். ஊரை விட்டு கரட்டுப்பகுதிக்குள் எங்களுக்கு வீடு கட்டித்தருவதாகச் சொல்கின்றனர். அங்கே எப்படி குடியிருக்க முடியும்? அரசு வேலைக்கு முன்னுரிமை சான்றால் யாருக்கும் பயனில்லை. எல்லாமே கண்துடைப்புதான்.

 

இதைப்பற்றி எல்லாம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விரிவாக பேசியிருக்கிறோம். இனிமேலும் எங்கள் நிலத்தில் காவல்துறையும், வருவாய்த்துறையினரும் கால் வைக்கக்கூடாது என்று மனித உரிமைகள் ஆணையத்திற்கும் எழுதி இருக்கிறோம்,” என்றனர்.

 

விவசாயிகளின் நூதன போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை துல்லியமாக அளந்து, யார் யாருக்கு எவ்வளவு நிலம் பாதிக்கிறது? என்பது குறித்த விவரங்களை விரைவில் அரசிதழிலும் வெளியிட வருவாய்த்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

– பேனாக்காரன்.