சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது அவர்களது உரிமை என்றும் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கான பதில் மனுவை இன்று (18/08/17) தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அரசு ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும்.
உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். எனினும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளைப் பெற்றோர் என்ற அடிப்படையில் அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்க்க உரிமையுள்ளது.
தற்போது பல ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயோமெட்ரிக் முறை கடந்த 4 ஆண்டுகளில் பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வராத 910 ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை பெரம்பலூரில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.