Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!#Gokulraj #Day16

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில்,
குற்றவாளிக்கூண்டில் இருந்த முக்கிய எதிரியை
தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தவறாக
அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சியால்
சிபிசிஐடி போலீசார் கடும்
அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் அவருடைய சடலம், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.

கோகுல்ராஜ்

இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சதீஸ் என்கிற சதீஸ்குமார், குமார் என்கிற சிவக்குமார் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

ஆணவக்கொலை போன்ற பரபரப்பான வழக்குகளை ஆறு மாதத்திற்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநிதீமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன் பிறகே, ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 30.8.2018ம் தேதி தொடங்கியது.

 

மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. அரசுத்தரப்பில் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

நீதிபதி இளவழகன்

கைது செய்யப்பட்டவர்களில் பெண் குற்றவாளியான ஜோதிமணி, அமுதரசு தவிர மற்ற 15 பேரும் விசாரணையின்போது தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

அரசுத்தரப்பில் 41வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள
திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மணிவண்ணன்,
கடந்த 10ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
யுவராஜின் தம்பி உள்பட 11 குற்றவாளிகளை கைது செய்தபோதும்,
‘கைப்பற்றுதல் மகஜர்’ தயாரித்தபோதும் உடன் இருந்தவர்
என்பதால் விஏஓ மணிவண்ணன்,
முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார்.

 

குற்றவாளிகளை கைது செய்தபோது சிலரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அதைப்பற்றி விரிவாக சாட்சியம் அளித்த அவர், மோட்டார் சைக்கிள்களையும் அடையாளம் காட்டினார். அவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒரு வாகனத்தை போலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு வராததால், மறுநாளுக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

 

அதன்படி 11.1.2019ம் தேதியன்று
இரண்டாம் நாளாக மணிவண்ணன்
சாட்சியம் அளித்தார்.

விஏஓ மணிவண்ணன்

சம்பவத்தன்று அதாவது,
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட நாளான
23.6.2015ம் தேதியன்று, யுவராஜ் பயன்படுத்திய
செந்தில் என்பவருக்குச் சொந்தமான
5506 என்ற பதிவெண் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிளை
ஜன. 11ம் தேதியன்று போலீசார் நீதிமன்றத்திற்கு வரவழைத்திருந்தனர்.
அதை மணிவண்ணன் அடையாளம் காட்டினார்.

 

குமார் என்கிற சிவக்குமாரை கைது செய்த
அப்போதைய திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா,
அவர் மூலமாக சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை
என வரிசையாக கைது செய்யப்பட்டதையும்,
எந்த குற்றவாளி யாரை அடையாளம் காட்டினார்
என்பதையும் தேதி வாரியாக சாட்சியம் அளித்தார்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும்,
அதில் அவர்கள் கையெழுத்தும் பெற்றதையும் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர்கள், தங்களை நேரில்
அழைத்துச்சென்றால் கோகுல்ராஜ் கொல்லப்பட்ட
ரயில் தண்டவாள இடத்தையும், கொலைக்கு பயன்படுத்திய பிறகு
அருகில் உள்ள புதரில் வீசப்பட்ட துண்டு போன்ற துணியையும்
அடையாளம் காட்டுவதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
அதையும் விஏஓ மணிவண்ணன்
தெளிவாக கூறினார்.

 

இவ்வாறு தெளிவாக சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த நிலையில்,
அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன்,
”திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்
கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளைப் பார்த்து
எதிரிகளை அடையாளம் காட்ட முடியுமா?,”
எனக் கேட்டார்.

 

அதற்கு விஏஓ மணிவண்ணன்,
”இன்று நான் எனது மூக்குக்கண்ணாடியை எடுத்து வரவில்லை.
அதனால் வீடியோவை தெளிவாக பார்க்க இயலாது. அடுத்தமுறை
மூக்குக்கண்ணாடியை போட்டுப்பார்த்து அடையாளம் சொல்கிறேன்,”
என்றார்.

 

அவருடைய பதிலை இருதரப்பு வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர்.

 

இதன்பின்னர் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன்,
குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்களில் சதீஸ் என்கிற சதீஸ்குமார்
என்ற எதிரியை அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்டார்.

வழக்கறிஞர் பா.மோகன்

அதற்கு நீதிபதி இளவழகன்,
”அவர்தான் நேற்றே (10.1.2019) ஒட்டுமொத்தமாக
அடையாளம் காட்டிவிட்டாரே?
பிறகு இன்றைக்கு எதற்கு தனியாக
அடையாளம் காட்ட வேண்டும்?.
பரவாயில்லை. விட்டுவிடலாம்,”
என்றார்.

 

மற்றொரு அரசுத்தரப்பு வழக்கறிஞரான கருணாநிதியும்,
நீதிபதியின் கருத்துக்கு உடன்பட்டு அமைதியாக நின்றார்.
ஆனாலும், வழக்கறிஞர் பவானி பா.மோகன் விடாப்பிடியாக,
சதீஸ்குமார் யார் என்று அரசுத்தரப்பு சாட்சி அடையாளம் காட்ட
வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
அதனால் நீதிபதியும் அதற்கு அனுமதி அளித்தார்.

 

விஏஓ மணிவண்ணன், குற்றவாளி கூண்டில்
நின்றவர்களைப் பார்த்து, ஒருவரை அடையாளம் காட்டினார்.
அதற்கு நீதிபதி, அடையாளம் காட்டப்படும் நபர் யார் என்று
கையை உயர்த்தும்படி சொன்னார்.
அப்படி கையை உயர்த்திய நபர்,
சதீஸ்குமார் இல்லை என்பது தெரிய வந்தது.
அந்த எதிரி, தனது பெயர் பிரபு என்று கூறினார்.

இரு மாறுபட்ட தோற்றத்தில் சதீஸ் என்கிற சதீஸ்குமார்

முதல்நாளன்று விசாரணையின்போதும் சதீஸ்குமாரை
அரசுத்தரப்பு சாட்சி சரியாக அடையாளம் காணவில்லை.
மறுநாளும் அந்த குறிப்பிட்ட எதிரியை மட்டும்
தவறாகவே அடையாளம் காட்டினார்.
இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
முக்கிய எதிரியை அடையாளம் காண்பதில்
அரசுத்தரப்பு சாட்சி தொடர்ந்து சொதப்பியதால்,
சிபிசிஐடி போலீசார்
கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 18.1.2019ம்
தேதிக்கு நீதிபதி இளவழகன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அன்று, விஏஓ மணிவண்ணனிடம் யுவராஜ் தரப்பு
மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ
குறுக்கு விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறுக்கு விசாரணை முடிந்த பிறகும் அலுவல் நேரம் இருக்கும்பட்சத்தில்,
அன்று மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான
விஏஓ சுரேஷ் சாட்சியம் அளிப்பார்
என்றும் தெரிகிறது.

 

– பேனாக்காரன்.