Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

 

தசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது.

 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.

 

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.

 

கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 858.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாத விலையைக் காட்டிலும் 30.50 ரூபாய் அதிகம். இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கு இந்த சிலிண்டர் விலை மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலில் இருக்கும்.

 

அதேபோல், டீக்கடைகள், உணவக தயாரிப்புக்கூடங்கள் போன்ற இடங்களில் வணிக பயன்பாட்டுக்காக உள்ள 19.2 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு அக்டோபர் மாதத்தில் 1570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 87 ரூபாய் அதிகமாகும்.

 

பெட்ரோல், டீசல் விலைகளை தாறுமாறாக உயர்த்தி வரும் எண்ணெய் நிறுவனங்கள், இப்போது அத்தியாவசிய தேவையாகிவிட்ட காஸ் சிலிண்டர்களின் விலைகளையும் கடுமையாக உயர்த்தி வருகின்றன. உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், உள்நாட்டில் சிலிண்டர் மீதான விலையைக் குறைக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், காஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

 

டிசம்பர் மாதத்திற்குள் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

 

ஆனால் பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இந்த விலை உயர்வு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.