Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

 

பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

 

அதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இதன் விலை ரூ.828 ஆக இருந்தது. முந்தைய மாதத்தைக் காட்டிலும் நடப்பு மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ.30.50 உயர்ந்துள்ளது.

 

அதேபோல், ஹோட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் நடப்பு செப்டம்பர் மாதத்தில் ரூ.47 உயர்ந்துள்ளது. இதனால் நடப்பு மாதத்தில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1483 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.