Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்த சுவாதி, திடீரென்று பிறழ் சாட்சியமாக மாறியதால் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அக்டோபர் 1, 2018ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

பொறியியல் பட்டதாரி

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் – சித்ரா தம்பதியின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில், கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ., படிப்பை நிறைவு செய்திருந்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர், கோகுல்ராஜுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்து வந்தார். அதனால் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. 23.6.2015ம் தேதியன்று இருவரும் ஒன்றாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.

 

தாயார் பதற்றம்

 

அன்று இரவு நீண்ட நேரமாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால் தாயார் சித்ரா பதற்றம் அடைந்தார். தாயாரும், மூத்த சகோதரர் கலைச்செல்வனும் பலரிடமும் செல்போன் மூலம் விசாரித்தனர். மறுநாள் (24.6.2015) காலையில் சுவாதியிடமும், மற்றொரு கல்லூரித் தோழர் கார்த்திக்ராஜாவிடமும் விசாரித்தபோதுதான், கோகுல்ராஜை அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைத்து ஒரு கும்பல் கடத்திச்சென்றிருக்கும் விவரம் தெரிய வருகிறது.

இதையடுத்து, 24.6.2015ம் தேதி, தனது மகன் கடத்தப்பட்டதாக புகார் அளிப்பதற்காக திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு சித்ரா சென்றிருந்தார். அன்று மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கிடப்பதாக சித்ராவின் செல்போனுக்கு ஈரோடு ரயில்வே போலீசாரிடம் இருந்து தகவல் வந்தது. அதிர்ந்து போனார் சித்ரா.

 

சிசிடிவி கேமரா

 

முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் கோகுல்ராஜ் இறந்ததை சந்தேக மரண வழக்காக பதிவு செய்தது திருச்செங்கோடு போலீஸ். இதற்கிடையே, 23.6.2015ம் தேதியன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கைப்பற்றியது போலீஸ்.

 

அந்த வீடியோவில்தான் கோகுல்ராஜின் மரணத்துக்கான மர்மங்கள் விலகத் தொடங்கின. 7 பேர் கும்பல், கோகுல்ராஜ் மற்றும் சுவாதியிடம் பேச்சுக் கொடுப்பதும், அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிப்பதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் தனியாக அழைத்துச் (கடத்தி) செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தன.

 

அந்த கும்பல் யார்? என்று தெரியாவிட்டாலும், கோயிலில் நடந்த சம்பவங்களை முன்பே போலீசாரிடம் சுவாதி விரிவாக சொல்லி இருந்தார். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தபோது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் கும்பல்தான் என்பதை உறுதி செய்தது போலீஸ் தரப்பு.

 

ஆணவக்கொலை

 

அதன் அடிப்படையில் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதன்பிறகுதான், கோகுல்ராஜை அந்த கும்பல் ஆணவக்கொலை செய்து விட்டதாக விசிக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பு புகார்களைக் கூறின.

 

யுவராஜ் தரப்பினர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்வாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் காதலித்து வருவதாக கருதியதன் அடிப்படையில் கோகுல்ராஜை கொலை செய்து சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசியிருப்பதாக அப்போது தகவல்கள் பரவின.

யுவராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், சாட்சிகள் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடங்கி நடந்து வருகிறது. நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் விசாரணை நடக்கிறது.

 

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் சுவாதி நான்காவது சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். அது மட்டுமன்று. அவர்தான் ஒரே அதிமுக்கிய சாட்சியும்கூட. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, கடைசியாக கோகுல்ராஜை கூட்டிச்சென்றது யார் என்பதை கண்களால் பார்த்தவர் என்பது; இரண்டாவது முக்கிய காரணம், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜில் பதிவாகி இருக்கும் சுவாதியின் உருவம்.

 

இந்த வழக்கில் குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 164ன் கீழ், நாமக்கல் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் முன்பே சுவாதி சாட்சியம் அளித்திருந்தார். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தும் உண்மை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

சேலம் மத்திய சிறையில் யுவராஜ் உடன் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். அங்கு நடந்த அடையாள அணிவகுப்பின்போது கார் ஓட்டுநரான அருண் என்பவரை பார்த்து சுவாதி அடையாளம் காட்டியிருந்தார். அதையும் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.

 

பிறழ் சாட்சியம்

 

இதனால் சாட்சிகள் விசாரணையின்போதும் சுவாதி மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி மற்றும் சிபிசிஐடி போலீசார் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் 10, 2018ம் தேதி சாட்சியம் அளிக்க வந்த சுவாதி, சம்பவத்தன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கே தான் செல்லவில்லை என்று தடாலடியாக பல்டி அடித்தார்.

அவருக்கு சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் காட்சிகளை நீதிமன்றத்தில் திரையிட்டுக் காட்டினர். அதில் கோகுல்ராஜ், சுவாதி ஆகியோர் கோயிலுக்குள் செல்வதும், வெளியே வருவதும் போன்ற காட்சிகள் இருந்தும், கோகுல்ராஜை அடையாளம் காட்ட இயலாது என்று சாட்சியம் அளித்தார். கல்லூரிக்கு பிறகு அவரை சந்தித்ததே இல்லை என்றும் ஒரே போடாக போட்டார்.

 

குற்றம் சாட்டப்பட்ட யுவராஜூம், சுவாதியும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். அதனால் அவரை காப்பாற்றும் நோக்கிலும், தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னால் கோகுல்ராஜை அனுப்பிய இடத்திற்கே சுவாதியையும், குடும்பத்தினரையும் அனுப்பி விடுவோம் என்று அவர்கள் மிரட்டியதாலும் பிறழ் சாட்சியம் அளித்ததாக அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி அதிரடித்தார். அதற்கும் சுவாதி, ‘இல்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார்.

 

சுவாதி மீது மனுத்தாக்கல்

 

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 1, 2018) புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.

 

அந்த மனுவில், ”அர்த்தநாரீஸ்வவரர் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவில் கோகுல்ராஜும், சுவாதியும் 23.6.2015ம் தேதி பேசிக்கொண்டு இருந்தனர். அந்தக் காட்சிகளும், அவர்கள் இருவரையும் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேரும் மிரட்டுவதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் தனியாக அந்த கும்பல் அழைத்துச் செல்வதும் பதிவாகி இருக்கிறது.

 

வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகள் தெளிவாக பார்க்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனாலும், அந்த வீடியோவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவம் இல்லை என்று சுவாதி இந்த நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையின்போது மறுத்துவிட்டார். சம்பவத்தன்று மேற்படி கோயிலுக்கே செல்லவில்லை என்றும் இந்த நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார்.

 

ஏற்கனவே சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ், ஜே.எம்.-2 நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்திற்கு முற்றிலும் முரணாக இப்போது சாட்சியம் அளித்திருக்கிறார். இது சட்டப்படி குற்றம் ஆகும்.

 

வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லை என்று சுவாதி சாட்சியம் அளித்திருந்தாலும், மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா என்பவர் அதே வீடியோ காட்சிகளை வைத்து கோகுல்ராஜ், சுவாதி ஆகியோரை அடையாளம் காட்டியிருக்கிறார். பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 193ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டு உள்ளது.

 

இந்த மனு மீது, தனி வழக்காக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுவாதிக்கு ஓராண்டு முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

– பேனாக்காரன்.

 

கடந்த செப். 10ம் தேதியன்று சுவாதி அளித்த சாட்சியம் குறித்த செய்தியை வாசிக்க இங்கே சொடுக்கவும்…

#Day5