Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

ஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது.

‘டாஸ்’ வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார்.

ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமாகினர்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இந்த இணை முழுதாக இரண்டு ஓவர்கள்கூட நிலைக்கவில்லை. 9 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரிகள், சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களுடன் ரோஹித் ஷர்மா வெளியேறினார். அவரை டாலா ஆட்டமிழக்கச் செய்தார்.

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 7 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் பெவிலியலன் திரும்பினார். அவருடைய வி க்கெட்டையும் டாலா வீழ்த்தினார்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் இணைந்தார். ஷம்சியின் சுழலில் விராட் கோலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மணீஷ் பாண்டே களமிறங்கினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான், 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் பெலுக்வாயோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 72 ரன்கள் (39 பந்துகள்) எடுத்தார்.

தோனியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 16 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஸ்மட்ஸ், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய வேகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. ஆனாலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 50 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 70 ரன்களைக் குவித்தார்.

அவருடைய விக்கெட் பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. மற்றொரு வீரர் பெஹார்டின் 39 ரன்கள் எடுத்தார். இந்த இணை 81 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் 17.1வது ஓவரில் ஹென்ரிக்ஸை ஆட்டமிழக்கச் செய்த புவனேஸ்வர்குமார், 17.4வது பந்தில் கிளாஸனை 16 ரன்களில் வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்தில் கிறிஸ் மோரீஸ் ஆட்டமிழந்தார்.

இதே ஓவரின் கடைசி பந்தை புவனேஸ்வர் குமார் வீச, அதை அடித்துவிட்டு பேட்டர்சன் முதல் ரன்னை எடுத்தார். இரண்டாவது ரன்னுக்கு ஓட முயன்றபோது அவரை ஹர்திக் பாண்ட்யா ‘ரன் அவுட்’ ஆக்கினார். இதன்மூலம் டி-20 அரங்கில் புவனேஸ்வர்குமார் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததுடன், 5 விக்கெட் வீழ்த்தி சாதனையும் படைத்தார்.

தென்னாப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை ஆட்டத்தின் 18வது ஓவர் காவு வாங்கியது. அதுவே அந்த அணியின் சரிவுக்கும் காரணமானது. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

5 விக்கெட் வீழ்த்திய புவனேஸ்வர்குமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி வரும் 21ம் தேதி செஞ்சுரியனில் நடக்கிறது.

துளிகள்….

புவனேஸ்வர்குமார் புதிய சாதனை:

இன்றைய டி-20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, இருபது ஓவர் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை புவனேஸ்வர்குமார் படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறையும், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் தலா ஒருமுறையும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய பந்து வீச்சு விவரம்: 4-0-24-5.

இந்திய அளவில் டி-20 போட்டியில் 5 அல்லது அதற்கு மேலும் விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்தார். முன்னதாக டி-20 போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 6/25 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.

உலகளவில் இந்த சாதனை பட்டியலில் புவனேஸ்வர்குமார் 6வது வீரராக இணைந்தார். அவருக்கு முன்னதாக உமர்குல் (பாகிஸ்தான்), டிம் சவுத்தீ (நியூ ஸீலாந்து), அஜந்தா மெண்டிஸ் (ஸ்ரீலங்கா), மலிகா (ஸ்ரீலங்கா), இம்ரான் தாகீர் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் உள்ளனர்.

தோனி புதிய சாதனை:

இந்திய அணி விக்கெட் கீப்பர் தோனி டி-20 போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற புதிய சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸை தோனி கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் டி-20 போட்டிகளில் 134 கேட்ச்சுகளை பிடித்து தோனி புதிய சாதனை படைத்தார். இதற்கு அடுத்த இடத்தில் சங்ககாரா (ஸ்ரீலங்கா) 133 கேட்ச் (194 போட்டிகள்), தினேஷ்கார்த்திக் (இந்தியா) 123 கேட்ச் (196 போட்டிகள்) ஆகியோர் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

பும்ரா ஏமாற்றம்:

டி-20 போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கமால் கட்டுக்கோப்புடன் வீசுவதில் வல்லவரான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்களை விட்டுக்கொடுத்தார்.