Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை.

அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள்.

காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது.

இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வழங்கப்பட்டது. அப்போது, முன்பு சொன்னதைவிட 13 டிஎம்சி தண்ணீரைக் குறைத்து அதாவது, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்கினால் போதும் என்று தீர்ப்பு அளித்தது.

ஒவ்வொரு முறை தீர்ப்பு வெளியாகும்போதும் பரஸ்பரம் இரு மாநில அரசுகளும் எதிர்த்து மேல்முறையீடு செய்து வந்தன. தீர்ப்பின் அம்சங்கள் தமிழகத்திற்கு சாதகமானது போலதான் முந்தைய தமிழக அரசுகள் குறிப்பாக அதிமுக அரசு பேசி வந்தது.

ஆனால் சற்றே யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருமுறை தீர்ப்பு வழங்கப்படும்போதும் முன்பைவிட கணிசமான தண்ணீர் ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வந்திருப்பது தெரியவரும்.

இந்த நிலையில்தான், காவிரி விவகாரத்தின் இறுதித் தீர்ப்பை கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அப்போதும்கூட, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தரப்பட வேண்டிய தண்ணீர் அளவை முன்பைக் காட்டிலும் (192 டிஎம்சி) மேலும் 14.75 டிஎம்சி குறைத்து, அதாவது 177.25 டிஎம்சி வழங்கினால் போதுமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தண்ணீர் பங்கீடு அளவு குறைப்புக்கு உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்ட காரணங்கள்தான் மிகவும் மொன்னையானது.

தமிழகத்தின் காவிரி படுகைகளில் நிலத்தடி நீர் மட்டம் 20 டிஎம்சி அளவுக்கு இருப்பதால் அதிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் 10 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட அமர்வு.

கர்நாடகாவில் இருபோக விவசாயம் நடப்பதாகக் கணக்கிட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுவதாக எந்த அடிப்படையில் தீர்மானித்தது என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. நிலத்தடி நீர் மட்டம் என்பது மழைப்பொழிவை சார்ந்தது. டெல்டா பகுதிகளில் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் நிலத்தடி நீர்மட்டம் இருக்கவும் முடியாது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக நீர்வள ஆதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டணம், புதுக்கோட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, அரிeயலூர், ஈரோடு, கோயம்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நாமக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவை எட்டிவிட்டது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டின் நிலவியல் அமைப்பின்படி, நிலத்தடி நீர்மட்டம் போதிய அளவில் இல்லை என்பதே நிதர்சனம். பூமிக்கு அடியில் 73 சதவீதம் திடப்பாறைகளும், 27 சதவீதம் படிவுப்பாறைகளும் அமைந்துள்ளன. திடப்பாறை பகுதிகளில் குறைந்த அளவே நிலத்தடி நீர் இருக்கும். படிவுப்பாறைகளில் நிலத்தடி நீர்மட்டம் போதிய அளவில் இருந்தாலும் அதை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு உவரி நீராக இருக்கிறது.

இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவே இல்லை. ஒரு நதி உருவாகும் இடத்தைவிட அது பாய்ந்தோடும் பகுதிகளுக்குத்தான் கூடுதல் உரிமை இருக்கிறது என்ற சர்வதேச நதிநீர் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகர மக்களின் குடிநீர் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்திருப்பது நடுநிலையானது என்று எப்படி சொல்ல முடியும்?

தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரில் இருந்து 10 டிஎம்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாட்டுக்கு அறிவுரை கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அதேபோன்ற அம்சங்களை கர்நாடகத்துக்கு பரிந்துரைக்காதது ஏன்? பூகோள ரீதியாகவே தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதாவது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியுமா? நிலத்தடி நீர் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? எத்தனை அடி ஆழம் வரை நிலத்தடி நீரை உறிஞ்சலாம் என்பதற்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாத தேசத்தில் இது எந்தளவுக்கு சாத்தியப்படும்? இப்படி பல வினாக்களை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எழுப்பியுள்ளது.

ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்புக் குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற மாய்மால வார்த்தைகளால் தமிழக அரசும், இங்குள்ள அரசியல்வாதிகளும் தீர்ப்பை மனதளவில் ஏற்கத் தயாராகி விட்டனர்.

இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் அரிய கண்டுபிடிப்பை நாம் மெச்சத்தான் வேண்டும். நதிகள் தேசிய சொத்து. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்து தெரிவித்திருக்கிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சொல்லப்பட்ட சேதியைத்தான் இப்போது கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதுபோன்ற நகாசு வார்த்தைகளால் இது ஏற்றுக்கொள்ளும்படியான தீர்ப்பு என்ற மாயாஜாலங்களை உச்ச நீதிமன்றம் மிகத்தந்திரமாக நிகழ்த்தியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடுகிறது கர்நாடகா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், அங்கு ஆளும் காங்கிரஸூக்கும், அடுத்து ஆட்சியைப் பிடித்துவிடும் எண்ணத்தில் இருக்கும் பாஜகவுக்கும் இந்த தீர்ப்பால் கொண்டாட்டம்தான்.

ஆசை, குரோதம், இயலாமை எல்லா உணர்வுகளும் பொதிந்தவர்கள்தானே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்.

 

– பேனாக்காரன்.