Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத காஞ்சி காமகோடி பீட இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் சிலை முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காஞ்சி மடம் அளித்துள்ள பதிலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜனவரி 23, 2018) நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார்.

விழாவில், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, ‘நீராருங் கடலுடுத்த…’ எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டது. வழக்கமாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதோ, இசைக்கப்படும்போதோ எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது மரபு. ஆனால், மடாதிபதி விஜயேந்திரர் அப்போது எழுந்து நிற்காமல் இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.

மேடையில் இருந்த ஆளுநர், ஹெச்.ராஜா உள்பட அனைவருமே எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். வாழ்த்துப்பாடல் முடியும் வரை விஜயேந்திரர் மட்டும் இருக்கையிலேயே அமர்ந்து இருந்தது விழா நிகழ்விடத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம், தேசிய கீதம் இசைக்கும் போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். இது, தமிழ் ஆர்வலர்களிடையே இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தேசிய கீதத்துக்கு மரியாதையும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையும் செய்ததாக விஜயேந்திரர் மீது கடும் அதிருப்திகள் கிளம்பின. ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் ‘#மண்டியிட்டு_மன்னிப்புக்கேள்’ என்று ஹேஸ்டேக் செய்திருந்தது, ரொம்பவே வைரல் ஆகியிருந்தது. பலரும் விஜயேந்தரரின் இந்த செயலுக்கு தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆண்டாள் குறித்து அவமரியாதையாக பேசியதாக வைரமுத்துவை மன்னிப்புக் கேட்கச் சொல்லும், ஹெச்,ராஜா, விஜயேந்திரரை மன்னிப்பு கேட்கச் சொல்வாரா? என ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார், ‘ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமை’ என்று தமிழ் மொழியை உச்சமாக பெருமையுடன் குறிப்பிட்டிருப்பார்.

1970ல் தமிழ்த்தாய் வாழ்த்து, பாடப்புத்தகத்தில் சேர்க்கும்போது, மேற்சொன்ன வரிகளை நீக்கப்பட்டு, இதர வரிகளின் ஒரு பகுதி மட்டும் சேர்க்கப்பட்டது. ஆரியர் மொழியான சமஸ்கிருதம் போல் உலகில் வழக்கு இழந்தது என மனோன்மணீயம் சுந்தரனார் சுட்டிக்காட்டியதையும் பலர் மேற்கோள் காட்டி கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

நூல் வெளியீட்டு விழாவின்போது, காஞ்சி விஜயேந்திரர் அமர்வதற்கென தனி மேடையும், ஹெச்.ராஜா, ஆளுநர், சாலமன் பாப்பையா உள்ளிட்ட விருந்தினர்கள் அமர்வதற்கு இன்னொரு மேடையும் போடப்பட்டு இருந்தது. இதுவும், பலர் கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை ஆதீனம் இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், “தமிழக மக்களின் பெருமைகளை சொல்லக் கூடிய ஒரு மாண்புமிக்க நிலைப்பாடு தமிழ்த்தாய் வாழ்த்து. அந்த தமிழ்த் தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதையை அளித்திருக்க வேண்டியது விஜயேந்திரரின் கடமை, பொறுப்பு. இந்த சம்பவம் அவருக்கு சிறுமை சேர்த்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் இன்று (ஜனவரி 24, 2018) அளிக்கப்பட்ட பதில், தமிழர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மடத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பதிலில், ”தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது காஞ்சி மடத்தின் மரபில் இல்லை,” என்றும் கூறப்பட்டு இருந்தது.

தியானத்தில் இருந்திருந்தால் தேசிய கீதத்திற்கு மட்டும் எப்படி எழுந்து நின்றிருப்பார்? என்பதையும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது மரபு இல்லை என்பதையும் கடுமையான விமர்சித்துள்ளனர்.

மேலும், விஜயேந்திரர் மீது எல்லா மாவட்டக் காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.