Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

 

ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சேலத்தை அடுத்த கருப்பூரில்,
கடந்த 24 ஆண்டுகளாக பெரியார்
பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச்
சேர்ந்த 113 கலை, அறிவியல்
கல்லூரிகள் இணைவு பெற்று
செயல்பட்டு வருகின்றன.

 

இப்பல்கலையின் துணைவேந்தராக
கடந்த 2014 முதல் 2017 வரை
சுவாமிநாதன் என்பவர்
பணியாற்றி வந்தார்.
ஆராய்ச்சியாளர்களையும்,
பெரும் கல்வியாளர்களையும்
உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம்,
அவருடைய பணிக்காலத்தில்தான்
ஊழல் வேட்டைக்களமாக
மாறிப்போனதாக கூறுகிறார்கள்
பேராசிரியர்கள்.

 

அதாவது எந்த அளவுக்கு
ஊழல் என்றால்… பதிவாளராக
பணியாற்றி வந்த
ஒருவர் தற்கொலை செய்து
கொள்ளும் அளவுக்கு,
எல்லை கடந்த சுரண்டல்
தாண்டவம் ஆடியிருக்கிறது.

 

உப்பைத் தின்றவன்
தண்ணீர் குடித்தே ஆக
வேண்டும் என்ற இயற்கைக்
கோட்பாட்டிற்கு ஏற்ப,
முன்னாள் துணைவேந்தர்
சுவாமிநாதன் மீதும், அவர்
நீட்டிய கோப்புகளில் எல்லாம்
கேள்வியே கேட்காமல் குற்றங்களுக்கு
உடந்தையாக இருந்த முன்னாள் பதிவாளர்
லீலா என்பவர் மீதும் சேலம் லஞ்ச
ஒழிப்புப்பிரிவு காவல்துறை
அண்மையில் எப்ஐஆர்
பதிவு செய்திருக்கிறது.

சுவாமிநாதன் – லீலா

இது தொடர்பாக பெரியார் பல்கலை பேராசிரியர்கள் சிலர் விலாவாரியாக நம்மிடம் பேசினர்.

 

”பெரியார் பல்கலையில்
துணைவேந்தராக சுவாமிநாதன்
பணியாற்றிய காலத்தில், ஆசிரியர்
மற்றும் ஆசிரியரல்லா பணி நியமனங்களில்
மருந்தளவுக்குக் கூட யுஜிசி விதிகள்
பின்பற்றப்படவில்லை. அவருடைய
பதவிக்காலத்தில் மொத்தம்
154 ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டன.

 

உதவி பேராசிரியருக்கு 20 லட்சம்,
இணை பேராசிரியருக்கு 30 லட்சம்,
பேராசிரியர் பணியிடத்திற்கு 45 லட்சம்
ரூபாய் என பதவிக்கு தகுந்தாற்போல்
பட்டியல் போட்டு பணம்
வசூலித்துக் கொண்டு,
போதிய கல்வித்தகுதி,
முன் அனுபவம் இல்லாதவர்களை
எல்லாம் பணியில் நியமித்தார்.
இதன்மூலம் மூன்றே ஆண்டுகளில்
60 கோடி ரூபாய்க்கு மேல் கல்லா
கட்டினார் சுவாமிநாதன்.

 

பின்னாளில்,
தேர்வாணையராக பணியாற்றிய
பேராசிரியர் லீலா என்பவரும் கூட
விதிகளுக்குப் புறம்பாக
நியமிக்கப்பட்டவர்தான்.

 

பேராசிரியர்கள் லட்சுமி மனோகரி,
புவனலதா, ரமேஷ்குமார், முருகேசன்,
வெங்கடாசலம் ஜோனாதுல்லா,
செல்வ விநாயகம், வெங்கடேஷ்வரன்,
வெங்கடேசன், கார்த்திகேயன் என
சுவாமிநாதன் காலத்தில் பணியில்
சேர்ந்த 10 ஆசிரியர்களின்
கல்வித்தகுதி, அனுபவங்கள் குறித்து
ரேண்டம் ஆக தேர்வு செய்து
லஞ்ச ஒழிப்புத்துறையினர்
விசாரித்துள்ளனர். இதில், அவர்கள்
அனைவருமே குறுக்கு வழியில் பணம்
கொடுத்துதான் பணியில் சேர்ந்தனர்
என்பது தெரிய வந்துள்ளது.

 

சுவாமிநாதன் பரிந்துரை செய்தவர்களில்
46 ஆசிரியர்களின் நியமனத்திற்கு
மட்டும் ‘ஸ்க்ருட்டினி கமிட்டி’
ஆட்சேபணை தெரிவித்தது.
அதை புறந்தள்ளிய சுவாமிநாதன்,
எங்கே யாராவது நீதிமன்றத்தில்
தடை ஆணை பெற்று விடுவார்களோ
என அஞ்சி, பதவிக்காக பணம்
வசூலித்த 154 பேருக்கும்
தன்னிச்சையாக கடிதம் அனுப்பி,
உடனடியாக பணியில் சேரும்படி
செய்தார். அதற்கு பக்கபலமாக
அப்போது உதவியாளராக பணியாற்றிய
ராஜமாணிக்கமும் இருந்தார்.
ஆனால் ஏனோ லஞ்ச ஒழிப்புப் பிரிவு
காவல்துறை எப்ஐஆரில் ராஜமாணிக்கம்
பெயரைக் காணவில்லை.

 

பணி நியமனத்தின்போது
ஏபிஐ எனப்படும் கல்வித்தகுதி
குறியீட்டெண் முக்கிய தகுதியாக
கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட
வேண்டும். அதையும் அப்பட்டமாக
மீறியிருக்கிறார் சுவாமிநாதன்.
பலரிடமும் போலி அனுபவ
சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு
நியமன ஆணைகளை வழங்கினார்.

 

ஆசிரியர் பணியிடங்கள் தவிர,
47 ஆசிரியரல்லா பணியாளர்களை
நியமனம் செய்ததிலும் விதிகளை
மீறியிருந்தார் சுவாமிநாதன்.
அதற்காக தலா 3 லட்சம் முதல்
5 லட்சம் வரை வசூலித்திருக்கிறார்.
இவ்வாறு முறைகேடாக நியமிக்கப்பட்ட
ஆசிரியரல்லா பணியாளர்களில்
சங்கீதா (பர்சார்), மோகனசுந்தரமூர்த்தி,
சுகந்தி, நிர்மலாதேவி, குணசேகரன்,
செல்வராஜ், மருத துரை, கிருஷ்ணன்,
ராஜா, சிவானந்தம் ஆகியோரின்
நியமனங்களை ஆய்வு செய்த
லஞ்ச ஒழிப்புப்பிரிவு, அனைத்திலும்
முறைகேடுகள் நடந்துள்ளதை
உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இவர்களை பெரியார் பல்கலை
உறுப்புக் கல்லூரிகளுக்காக
தேர்வு செய்துவிட்டு, பல்கலையிலேயே
பணியாற்ற அனுமதித்தார். பல்கலையில்
பர்சார் பணியிடத்திற்கான
தேவையே இல்லை,” என்கிறார்கள்
பெரியார் பல்கலை பேராசிரியர்கள்.

 

இது தவிர இன்னொரு முக்கிய முறைகேட்டிலும் சுவாமிநாதன் அன் கோ ஈடுபட்டுள்ளது.

 

”பல்கலை மற்றும் இணைவு
பெற்றுள்ள கல்லூரிகளின் தேர்வு
முடிவுகளை வெளியிடும் பணிகளை,
சென்னையைச் சேர்ந்த அரவிந்த்
என்பவருக்குச் சொந்தமான
‘மெசர்ஸ் கேலேப்’ என்ற தனியார்
நிறுவனத்திற்கு ஒப்பந்தம்
கொடுத்திருந்தார் சுவாமிநாதன்.
இந்த அவுட்சோர்சிங் முறை,
அதற்கு முன்பு வரை பெரியார்
பல்கலையில் நடைமுறையில்
இல்லாதது.

 

தேர்வுக்கான விடைத்தாள்களில்
தேர்வர்களின் புகைப்படம், பெயர்,
டம்மி தேர்வு எண் அச்சிட்டு வழங்குவதும்,
விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்ட
பிறகு பிரத்யேக சாப்ட்வேர் மூலம்
மதிப்பெண்களையும், தேர்வு முடிவுகளையும்
உள்ளீடு செய்து அனுப்புவதும்தான்
கேலேப் நிறுவனத்தின் பணியாகும்.

 

இதற்காக ஒரு விடைத்தாளுக்கு
3 முதல் 5.25 ரூபாய் வரை விலைப்புள்ளி
நிர்ணயிக்கப்பட்டு, 3.26 கோடி ரூபாய்க்கு
சுவாமிநாதனும், அப்போதைய
தேர்வாணையர் லீலாவும் ஒப்பந்தம்
கொடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தம்
2015 முதல் 2019 வரை
அமலில் இருந்துள்ளது.

 

துணைவேந்தருக்கு
10 லட்சம் ரூபாய் வரையிலான
ஒப்பந்தத்திற்கு மட்டுமே
நிதி விடுவிக்கும் அதிகாரம் இருக்கிறது.
ஆனால், கேலேப் நிறுவனத்திற்கு
ஒவ்வொரு செமஸ்டருக்கும்
50 லட்சம் ரூபாய் சுவாமிநாதன்
நிதி விடுவிப்பு செய்திருக்கிறார்.
இந்த ஒப்பந்தம் வழங்குவது
தொடர்பாக உயர்கல்வித்துறையிடம்
எந்த முன்அனுமதியும் பெறப்படவில்லை
என்கிறது லஞ்ச ஒழிப்புப்பிரிவு
காவல்துறை.

 

கேலேப் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்
கொடுக்கப்பட்டதற்கு பதிலாக
ரிசல்ட் வெளியிடுவதற்கென
பிரத்யேக மென்பொருளை வெறும்
20 லட்சம் ரூபாயில் வாங்கியிருக்க
முடியும். அதை செய்யாமல்
சுய லாபம் அடைவதற்காக
இவ்வாறான முடிவெடுத்திருக்கிறார்
சுவாமிநாதன்.

 

தேர்வு நடத்துவது,
தேர்வு முகாம் அலுவலர் நியமனம்,
விடைத்தாள் மதிப்பீடு செய்து
மதிப்பெண்களை கேலேப் நிறுவனத்திற்கு
அனுப்பி வைப்பது வரை
பல்கலைக்கழகமே செய்து கொடுக்கும்
நிலையில், தேர்வு முடிவை மட்டும்
வெளியிட கேலேப் நிறுவனத்திற்கு
எதற்காக ஒப்பந்தம் கொடுக்க
வேண்டும்? இதன் பின்னணியில்,
பண ஆதாயம் தவிர வேறொன்றும்
இருக்க முடியாது,” என்கிறார்கள்
பெரியார் பல்கலை பேராசிரியர்கள்.

 

அரூரில் உள்ள
ஈஆர்கே கலைக்கல்லூரி,
சேலத்தில் கொங்குநாடு கலைக்கல்லூரி,
மேச்சேரியில் பாலமுருகன் கலைக்கல்லூரி
ஆகிய கல்லூரிகளில் போதிய
உள்கட்டமைப்பு வசதிகள்
இல்லாதபோதும் கூட, சுவாமிநாதனும்,
லீலாவும் கல்லூரி அதிபர்களிடம்
பணம் பெற்றுக்கொண்டு,
புதிய பாடப்பிரிவுகள் தொடங்க
அனுமதி கொடுத்துள்ளனர்.

 

அதேபோல், நாமக்கல்லில்
உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத
கவிதா கலைக்கல்லூரி (வையப்பமலை),
காந்தி கலைக்கல்லூரி (நல்லூர்),
தர்மபுரியில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி,
தலைவாசலில் ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி,
சேலத்தில் மைசூரி கலைக்கல்லூரிகள்
தொடங்கவும் அனுமதி கொடுத்துள்ளனர்.

 

இவை ஒருபுறம் இருக்க,
மேற்சொன்ன குற்றச்சாட்டுகள்
அனைத்திலும் பெரியார் பல்கலையில்
18.8.2012 முதல் 17.8.2015 வரை
பதிவாளராக பணியாற்றி வந்த
அங்கமுத்துவுக்கும் தொடர்பு
இருக்கிறது என்கிறார்கள்
லஞ்ச ஒழிப்புப்பிரிவு
காவல்துறையினர்.

 

முறைகேடான பணி நியமனங்கள்,
பல்கலை மானியக்குழு (யுஜிசி)
விதிகளுக்கு புறம்பாக கல்லூரிகள்
மற்றும் பாடப்பிரிவுகள் தொடங்க
அனுமதி வழங்கியது, தேர்வு முடிவுகள்
வெளியிட தனியார் நிறுவனத்திற்கு
ஒப்பந்தம் வழங்கியது ஆகிய
முறைகேடுகளில் முன்னாள்
துணைவேந்தர் சுவாமிநாதன்,
அப்போதைய பதிவாளர் அங்கமுத்து,
தேர்வாணையர் லீலா ஆகிய மூவர் மீதும்
கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல்,
மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் சேலம்
லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர்
அண்மையில் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

 

இதில் எதிர்பாராத ட்விஸ்ட்
என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்ட
மூவரில் ஒருவரான அங்கமுத்து
கடந்த 18.12.2017ம் தேதி
பெருந்துறையில் உள்ள தனது
வீட்டில் விஷ மாத்திரைகளைத்
தின்று தற்கொலை செய்து
கொண்டதுதான்.

அங்கமுத்து

அங்கமுத்துவின் தற்கொலையிலும்
சில திடுக்கிடும் கிளைக்கதைகள்
இருப்பதாகச் சொல்கிறார்கள்
அவருடைய நெருக்கமான
பேராசிரியர்கள்.

 

”ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமனத்தில் பட்டியல் போட்டு வசூலித்ததில் மூளையாக செயல்பட்டது அப்போதைய பதிவாளரான அங்கமுத்துதான். ஆனால் சுவாமிநாதன், ஆசிரியர்களிடம் பட்டியல் போட்டு பணம் வசூலித்துக் கொண்டார்.

 

இதில், அங்கமுத்துவுக்கு சரியாக கட்டிங் போய்ச்சேராததால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகளை வெளியே சொல்வதாக அங்கமுத்து திடீரென்று போர்க்கொடி தூக்க, அங்குதான் அவருக்கு ஏழரை ஆரம்பித்தது. நடந்த முறைகேடுகள் அனைத்திற்குமே அங்கமுத்துதான் காரணம் என அவர் மீதே பிளேட்டை திருப்பி விட்டார் சுவாமிநாதன்.

 

பணி நியமனம் தொடர்பான முக்கிய கோப்புகள் காணவில்லை என்றும், அது தொடர்பாக அங்கமுத்துவிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன், பின்னர் பதிவாளராக நியமிக்கப்பட்ட மணிவண்ணனிடம் அழுத்தம் கொடுத்தார். அதன்படியே மணிவண்ணன், சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இந்த நிலையில்தான் கடந்த 18.12.2017ம் தேதியன்று ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியார் பல்கலைக்கு வந்திருந்தார். அவர் முன்னிலையில் தன்னை காவல்துறை எங்கே கைது செய்து விடுமோ என்று அஞ்சிய அங்கமுத்து, அன்று பல்கலைக்கு வருவதை தவிர்த்ததோடு, வீட்டில் தற்கொலையும் செய்து கொண்டார்,” என்கிறார்கள்.

 

அங்கமுத்து எழுதியிருந்த தற்கொலை குறிப்பில், சுவாமிநாதன், அப்போதைய பதிவாளர் மணிவண்ணன், பல்கலை டீன் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 7 பேரும்தான் தன்னுடைய மரணத்திற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்னும் அதுதொடர்பான விசாரணையும் கிடப்பில் இருப்பதோடு, பணி நியமனம் தொடர்பான மாயமான கோப்புகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கோப்புகள் சிக்கினால் முன்பு ஆட்சியில் இருந்த முக்கிய தலைகளும் சிக்க நேரிடும் என்பதால், கோப்புகளை திட்டமிட்டே ஒரு கும்பல் திருடி வைத்துக் கொண்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

 

அங்கமுத்துவின் தற்கொலையால் மனம் உடைந்து போன அவருடைய மனைவி விஜயலட்சுமி, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு பிப். 19ம் தேதியே புகாரளித்தார். அதில் முதல்கட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், புகாரில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து, தற்போது எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது.

 

பணி நியமனம் தொடர்பாக
மாயமான கோப்புகள்தான்
இந்த வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டு.
அதையும் காவல்துறையினர்
கண்டுபிடித்தாக வேண்டிய
நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

 

மோசடி கூட்டாளிகளான சுவாமிநாதன்,
அங்கமுத்து, லீலா ஆகிய மூவருமே
ஒரு காலத்தில் ஈரோடு வெள்ளாளர்
கலைக்கல்லூரியில் பணியாற்றியவர்கள்.
மூவரும் கவுண்டர் சமூகத்தைச்
சேர்ந்தவர்களும் கூட. அந்தக்
கல்லூரியைச் சேர்ந்த பலரும்,
சுவாமிநாதன் துணைவேந்தராக
இருந்தபோதுதான் பெரியார்
பல்கலையில் உதவி, இணை பேராசிரியராக
நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

நம்முடைய கள விசாரணையில்,
சுவாமிநாதனின் இந்த துணிகர
முறைகேடுகளுக்கு அரசியல்
பின்புலமும் ரொம்பவே பக்கபலமாக
இருந்துள்ளதும் தெரிய வந்தது.
அப்போதைய உயர்கல்வித்துறை
அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித்துறை
செயலர் வரை பணம் கைம்மாறியுள்ளதாக
சொல்கின்றனர்.

 

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர்
எப்ஐஆர் பதிவு செய்துள்ளதை அடுத்து,
பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக
முன்னாள் அமைச்சர்
தோப்பு வெங்கடாசலம்,
முன்னாள் உயர்கல்வித்துறை
அமைச்சர் பழனியப்பன் ஆகியோரிடம்
சுவாமிநாதன் தஞ்சம் புகுந்துவிட்டதாக
கூறப்படுகிறது. பழனியப்பன்,
தோப்பு வெங்கடாசலம் ஆகிய
இருவருமே தற்போது திமுகவில்
ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே,
பெரியார் பல்கலை, மதுரை காமராஜர்,
அண்ணாமலை பல்கலைகளில்
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த
முறைகேடுகள் குறித்து விசாரிக்க
ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கீதா,
இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர்
கொண்ட குழு அமைத்து,
உயர்கல்வித்துறை கடந்த
ஜூலை 9ல் உத்தரவிட்டது.
மூன்று மாதத்திற்குள் இந்தக்குழு
விசாரணை நடத்தி அறிக்கை
சமர்ப்பிக்க வேண்டும். ஆனால்,
மூன்று மாதம் ஆகியும் இன்னும்
பெரியார் பல்கலைக்கு இந்தக்குழு
விசாரணை நடத்த வரவே இல்லை.
இதிலும் உள்குத்து இருக்குமோ என்ற
சந்தேகத்தையும் கல்வியாளர்கள்
கிளப்பியுள்ளனர். இந்த சந்தேகத்திற்கு,
தற்போதைய உயர்கல்வித்துறை
அமைச்சர் பொன்முடிதான்
பதில் அளிக்க வேண்டும்.

 

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில்
இந்திய அளவில் தமிழ்நாடுதான்
முன்னணியில் உள்ளது. ஆனால்
போதிய அனுபவமில்லாத, பணம்
கொடுத்து பணியில் சேரும்
ஆசிரியர்களாலும், கையூட்டு
பெற்றுக்கொண்டு நியமனம் வழங்கும்
துணைவேந்தர்களாலும் உயர்கல்வி
பயில்வோரின் எண்ணிக்கையை
உயர்த்த முடியுமே தவிர, ஒருபோதும்
தரமான மாணவர்களை
உருவாக்க இயலாது.

 

இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறையும், காவல்துறையும் விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

 

– பேனாக்காரன்

%d bloggers like this: