Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

19.3.1940 – 12.10.2021

 

பழம்பெரும் நடிகரும், ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் கதாநாயகனாகவும் நடித்த ஸ்ரீகாந்த் (81), செவ்வாய்க்கிழமை (அக். 12) சென்னையில் காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார்.

பிரபல இயக்குநர் ஸ்ரீதர்
இயக்கிய வெண்ணிற ஆடை (1965)
படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயலலிதா,
வெண்ணிற ஆடை மூர்த்தி,
வெண்ணிற ஆடை நிர்மலா
ஆகியோர் அறிமுகமானார்கள்.
அந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு
கதாநாயகனாக நடித்திருந்தார்,
ஸ்ரீகாந்த்.

 

அதன்பிறகு கே.பாலச்சந்தர்
இயக்கிய பாமா விஜயம்,
பூவா தலையா, எதிர் நீச்சல் உள்ளிட்ட
பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த
பாத்திரங்களில் நடித்து தனக்கென
தனி அடையாளத்தை ஏற்படுத்திக்
கொண்டார். குறிப்பாக, எதிர் நீச்சல்
படத்தில் கிட்டு என்ற பாத்திரத்தில் நடித்து,
ரசிகர்கள் மனதில் நீங்கா
இடம் பிடித்தார்.

 

தமிழில் கிட்டத்தட்ட
50 படங்களில் கதாநாயகனாக
நடித்துள்ளார். அதன்பிறகு வில்லன்,
குணச்சித்திர பாத்திரங்களில்
நடித்து வந்தார். ரஜினிகாந்த்
முதன்முதலில் கதாநாயகனாக
நடித்த பைரவி படத்தில், வில்லனாக
நடித்து அசத்தி இருப்பார் ஸ்ரீகாந்த்.
தங்கப்பதக்கம் படமும் அவருடைய
திரையுலக பயணத்தில் முக்கிய
திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

ஒருபுறம் தனி நாயகனாக நடித்து
வந்தபோதிலும், சமகாலத்தில்
பிரபலமாக விளங்கிய ஜெமினி கணேசன்,
ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோருடனும்
சேர்ந்து நடிக்கவும் தவறவில்லை.
வசன உச்சரிப்பில் எப்போதும்
தனி கவனம் செலுத்தி வந்துள்ளார்
ஸ்ரீகாந்த். 40 ஆண்டுகளுக்கும்
மேலான திரைப்பயணத்தில் 200
படங்கள் வரை நடித்துள்ளார்.

 

அதேபோல சிவாஜி கணேசன்,
ரவிச்சந்திரன், முத்துராமன், சிவகுமார்
ஆகியோருடன் மட்டுமின்றி, அதற்கு
அடுத்த தலைமுறை நடிகர்களான
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடனும்
நடித்துள்ளார். இவரின் அசாத்திய
திறமையைக் கண்டு வியந்த
சிவாஜி கணேசன், தன்னுடய பல படங்களில்
ஸ்ரீகாந்த்துக்கும் முக்கிய வேடம்
கிடைக்கச் செய்துள்ளார்.

 

கடைசியாக தனுஷ் நடித்த
காதல் கொண்டே படத்தில் நடித்திருந்தார்.
வயதுமூப்பு காரணமாக அதன்பின்
படங்களை அவர் ஒப்புக்கொள்ளாமல்
ஓய்வில் இருந்து வந்தார்.
ஏனோ அவர், கடைசி வரை
எம்ஜிஆருடன் மட்டும் சேர்ந்து
நடிக்கவில்லை.

 

திரைத்துறைக்கு வருவதற்கு
முன்பு ஸ்ரீகாந்த், சென்னையில்
உள்ள யு.எஸ்., தூதரகத்தில்
பணியாற்றி வந்தார். இயக்குநர்கள்
ஸ்ரீதர், சித்ராலயா கோபு ஆகியோருடன்
ஏற்பட்ட நட்பினால் வெண்ணிற ஆடை
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
காசேதான் கடவுளடா படம்,
ஸ்ரீகாந்த் ஒரு வகையில் பன்முகத்தன்மை
வாய்ந்த கலைஞர் என்ற பெயர்
பெற்றுக் கொடுத்தது.

 

அவர் எப்போதும் எலிகளை
விரட்டிப் பிடிக்கும் பூனை போன்ற
கதாபாத்திரத்தை விரும்பியதில்லை.
நாயகன், நகைச்சுவை கலைஞன்,
வில்லன் என எந்த பாத்திரம் ஏற்றாலும்
அதற்கு தன்னால் முடிந்த அளவுக்கு
நியாயம் செய்ய வேண்டும் என்பதில்
குறியாக இருப்பார் என்கிறார்கள்
அவரைப்பற்றி அறிந்த கலைஞர்கள்.

 

வெள்ளித்திரையில் மட்டுமின்றி மேடை நாடகங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இருந்தார் ஸ்ரீகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கிய மேடை நாடங்களில் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷூக்கு அடுத்து ஸ்ரீகாந்த்தும் தவறாமல் இடம் பிடித்து வந்துள்ளார்.

 

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நெருங்கிய நண்பராக விளங்கிய ஸ்ரீகாந்த், அவர் இயக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்தப்படம் இவருக்கு மட்டுமின்றி நடிகை லட்சுமிக்கும் பெரும் பெயர் பெற்றுக் கொடுத்தது.

 

சிறந்த மனிதநேயமிக்கவர் என்றும்,
திரையுலகிலும், திரைக்கு வெளியிலும்
நிறைய நண்பர்களைப் பெற்றிருந்தார்
என்கிறார்கள் அவருடன் நடித்த
திரைக்கலைஞர்கள்.

 

இவர் நாயகனாக நடித்த
திக்கற்ற பார்வதி (1974) என்ற படம்,
சிறந்த தமிழ்த்திரைப்படத்திற்கான
தேசிய விருதை வென்றது.
கொரோனா தொற்று அபாயம்
காரணமாக உறவினர்கள் அவருடைய
உடலை தகனம் செய்து விட்டனர்.

 

நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கமும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.

– பேனாக்காரன்