Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தேசிய தர மதிப்பீட்டுக் குழு எனப்படும் ‘நாக்’ குழு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்து, தரத்தை உறுதிப்படுத்துவது நடைமுறை.

 

அதன்படி, ‘நாக்’ குழு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சேலம் அரசு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையின் துணை வேந்தர் தலைமையில், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெங்களூர் அரசுக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் என மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

 

இக்குழுவின் வருகையையொட்டி, கல்லூரி சுற்றுச்சுவர், வகுப்பறைகள், அலுவலக அறைகளுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் பணிகளும், மராமத்துப் பணிகளும் நடந்தன. இது போன்ற பணிகளை, பொதுப்பணித்துறையினர் மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். கல்லூரியே மேற்கொள்வதாக இருந்தால், பொதுப்பணித்துறையிடம் முன்னனுமதி பெற வேண்டும்.

கல்லூரிக்கு பெயிண்ட் அடித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக சேலம் நகரில் உள்ள பிரபல நகைக்கடைகள், அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கல்லூரி முதல்வர் சகுந்தலா நன்கொடை பெற்றுள்ளார். தவிர, கல்லூரியில் பணியாற்றும் அனைத்துப் பேராசிரியர்களிடமும் தலா 3000 ரூபாய் வசூலித்துள்ளார்.

 

இந்த வசூல் ஒருபுறம் இருக்க, கல்லூரி பராமரிப்பு பணிக்காக செலவழித்ததாகக் கூறி, கல்லூரிக்கான பொது நிதியில் இருந்து 19 லட்சம் ரூபாயை முதல்வர் சகுந்தலா சுருட்டியுள்ளார்.

 

இதுகுறித்த தகவல் மெல்ல மெல்ல கசியவே, பேராசிரியர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். நம்மிடமும், வெளி நிறுவனங்களிடமும் பணம் வசூலித்துவிட்டு, பிறகு எதற்கு பொது நிதியில் சகுந்தலா கைவைக்க வேண்டும்? என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இந்த நிதியை கையாள்வதாக இருந்தாலும், கல்லூரிக்கல்வி இயக்குநர், மண்டல இயக்குநர் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், கல்லூரி முதல்வர் சகுந்தலா யாரிடமும் அனுமதி பெறாமலேயே 19 லட்ச ரூபாயை அமுக்கி விட்டதாக ஒட்டுமொத்த கல்லூரியும் பரபரத்துக் கிடக்கிறது.

 

இதுமட்டுமின்றி, கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகள் தேர்தலே நடத்தப்படவில்லை.

 

ஆனாலும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக ஒவ்வொரு மாணவரிடமும் இருந்தும் ஆண்டுக்கு 160 ரூபாய் வசூலிக்கின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்தும் வரும் இக்கல்லூரியில் இவ்வாறு வசூலிக்கப்படும் பணத்திற்கும் இதுவரை எந்த ஒரு கணக்கும் இல்லை என்கிறார்கள் பேராசிரியர்கள். சகுந்தலாவின் சடுகுடு ஆட்டத்தால் சக பேராசிரியர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

– ஞான வெட்டியான்