Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்தில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

உப்பு முதல் சாப்ட்வேர் வரை 100க்கும் மேற்பட்ட தொழில்துறைகளைக் கொண்டது டாடா குழுமம். இந்தக் குழுமத்தின் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட 29 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக கடந்த சில ஆண்டாகவே டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) நிறுவனம் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. மறுகட்டமைப்புக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், 5000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறது.

இது தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ”டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் மோசமான நிலையில் உள்ளது. அதற்கு புத்துயிரூட்டுவதற்கான பல்வேறு வழிகளை ஆராய்ந்தோம். எனினும், இழந்த பணத்தை மீட்பதற்காக நல்ல பணத்தை முதலீடு செய்வது உகந்தது அல்ல.

டாடா குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனமும் எனக்கு முக்கியம். கடன் சுமையில் உள்ள நிறுவனத்தை மீட்க மாற்று வழிகள் என்ன என்பது குறித்தும் பேசி வருகிறோம்,” என்றார். எனினும் அவர், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை மூடிவிடுவது பற்றியோ, விற்பனை செய்வது பற்றியோ வெளிப்படையாகக் கூறவில்லை.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா)  நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை இன்று (அக்டோபர் 11, 2017) 4 ரூபாயில் முடிவுற்றது. கடந்த 52 வாரங்களில் இதுவே மிகக்குறைந்தபட்ச விலையாக கருதப்படுகிறது. நேற்றும் இதே விலையில் முடிவுற்றது. இன்று காலை அதிகபட்சமாக ரூ.4.20க்கும் குறைந்தபட்சமாக ரூ.3.70க்கும் சென்றது.