Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு: “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ”தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக” என்று அவரை வரவேற்றுள்ளனர்.

தமிழக அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதும், அவர்கள் மீது திட்டமிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

தமிழ், தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மே 17 இயக்கம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘தமிழ், தமிழர், தமிழர் உரிமைகள் என்ற மு-ழக்கங்களை ஒழித்துக் கட்டினால்தான் தமிழகத்தில் இந்து, இந்துத்துவம் என்ற பாசிச கொள்கைகளை வளர்க்க முடியும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நம்புகிறது,’ என்று பகிரங்கமாக முழங்கி வருகிறார்.

இந்நிலையில், ஈழ இறுதிப்போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு, கடந்த மே 21ம் தேதி, சென்னை மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி அஞ்சலி செலுத்த முயன்றார். காவல்துறை கட்டுப்பாட்டை மீறி கூடியதாக, திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்பட 17 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களில் மேற்சொன்ன நான்கு பேர் மீது மட்டும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து இருந்தது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

திருமுருகன் காந்தி உள்¢ளிட்ட நான்கு பேரும் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 13ம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செப். 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதையடுத்து இன்று (செப். 19) அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரித்த உயர்நீதிமன்றம், திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. ஓரிரு நாளில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டுவிட்டரிர் திருமுருகன் காந்தி ஆதரவாளர்கள், பிரபலங்கள் வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், ”தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக,” என்று வரவேற்றுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ‘வெல்கம் பேக்’ என்று பதிவிட்டுள்ளார்.

அவருடைய பக்கத்தில் மே 17 இயக்க ஆதரவாளர்கள் சிலர், ”தமிழகத்தில் மட்டும்தான் நியாயத்துக்காக போராடும் மனிதர்கள் மேல் எல்லாம் குண்டர் சட்டம் போடுகிறார்கள். இதுவே தமிழகத்தின் ஜனநாயகம்” என்றும், ”வளர்மதி விடுதலை, நேற்று ஹெச்.ராஜா தோல்வி, இன்று திருமுருகன் காந்தி விடுதலை. நாளை ஆட்சி நம் கையில்; காத்திருப்போம்” என்றும் கருத்தும் தெரிவித்துள்ளனர்.

”100 நாட்கள் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்த தமிழக அரசுக்கு என்ன தண்டனை? என்றும் காட்டமாக கேட்டுள்ளனர்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவே குண்டர் சட்டம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே சமூக செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஸ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை, கடந்த சில நாள்கள் முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இதற்கு அப்போது பலர், உயர்நீதிமன்றத்தை விமர்சனம் செய்து இருந்தனர். மக்களுக்காக போராடும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய மறுத்து, கொலைகாரனை விடுதலை செய்வதாக நீதிமன்றத்தை சாட்டினர்.

இந்த நிலை தொடரும்பட்சத்தில், குண்டர் சட்டத்தையே முற்றாக ரத்து செய்வதற்கான குரல்களும் ஜனநாயக தளத்தில் ஓங்கி ஒலிக்கும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இணைப்பு.