Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாஸன் தெரிவித்த கருத்துக்கு எதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துக்கூறிய பாஜக ஹெச்.ராஜாவை கிண்டலடித்து இணையவாசிகள் ‘மீம்’கள் பதிவிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாஸன், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், ”இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இதுபற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”விஸ்வரூபம் படப்பிரச்னையின்போது, முஸ்லிம் அமைப்புகள் 20 வருடத்திற்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்,” என்று நேற்று (நவம்பர் 2, 2017) கருத்து வெளியிட்டு இருந்தார்.

மேலும், ”கமல் எப்போதுமே இந்து விரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு புரமோட் ஆகி உள்ளார். தேச பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்,” என்றும் பதிவிட்டுள்ளார்.

சமூகவலைத்தளவாசிகளுக்கும் பாஜகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தானோ என்னவோ. பாஜகவினரை போட்டு புரட்டி எடுப்பது என்ற முடிவோடுதான் களமிறங்குகின்றனர். குறிப்பாக ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை மீம்ஸ்களால் கதற கதற தெறிக்கவிடாமல் ஓய்வதில்லை.

கமல்ஹாஸனுக்கு எதிரான ஹெச்.ராஜாவின் கருத்துக்கும் கடுமையான எதிர்வினையாற்றி வரும் இணையவாசிகள், கேலியும், கிண்டலும் கலந்த மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

”அடடடா நாட்டுல இந்த தேச பக்தர்கள் தொல்ல தாங்க முடியலப்பா” என்று கவுண்டமணி பாணியிலும் கிண்டல் அடித்துள்ளனர். பாஜகவினர் மட்டும்தான் தேச பக்தர்களா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னும் சிலர், இந்து என்பது இந்தியாவின் மதமல்ல என்றும், அது இந்தியாவில் புகுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். மடியில் கணமில்லாதவர்கள் புலம்ப வேண்டியதில்லை என்றும் ஹெச்.ராஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

அக்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை எப்போது முன்வைத்தாலும், கோவையில் ஆர்ப்பாட்டத்தின்போது பிரியாணி அண்டாவை பாஜகவினர் களவாடிய நிகழ்வையும் கிண்டலடித்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மழையில் சென்னை மாநகரம் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், கமல் மீதான விமர்சனம் ரொம்ப முக்கியமா? என்றும், உங்கள் பிரதமரிடம் பேசி வெள்ள நிவாரண உதவிகள் பெற்றுத்தரலாமே என்றும் சில இணையவாசிகள் கொதித்து எழுந்துள்ளனர்.