Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சேலம் கருங்கல்பட்டி
பாண்டுரங்கவிட்டல் 3வது
தெருவைச் சேர்ந்தவர் வெங்கடராஜன் (62).
இவருக்கு தன் வீடு அருகே சொந்தமாக
மூன்று வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளில் கோபி, கணேசன், முருகன்
ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு
வசித்து வருகின்றனர்.

இதில், கோபியுடன் அவருடைய
மாமியார் ராஜலட்சுமி, உறவினர்
எல்லம்மாள் ஆகியோரும், கணேசன்
வீட்டில் தாயார் அம்சவேணி,
மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம்,
சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில்
மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம்,
மகள் பூஜாஸ்ரீ ஆகியோரும்
வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய வீட்டிற்கு
அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை
தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய
அலுவலராக பணியாற்றி வந்த
பத்மநாபன் (48), தனது சொந்தவீட்டில்
மனைவி தேவி, மகன் லோகேஷ்
ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில்,
செவ்வாய்க்கிழமை (நவ. 23) காலை
6.30 மணியளவில், கோபியின் மாமியார்
ராஜலட்சுமி, காபி போடுவதற்காக
காஸ் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது சிலிண்டர் பயங்கர
சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த விபத்தில் அவருடைய
வீடு மட்டுமின்றி, அருகில் இருந்த
மேலும் மூன்று வீடுகளும் இடிந்து
தரைமட்டமாகின. வெடிகுண்டு வெடித்தது
போன்ற பயங்கர சத்தம் கேட்டதால்
அப்பகுதியினர் என்னவோ ஏதோ என்று
ஒரு கணம் ஒன்றும் புரியாமல்
அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ
இடத்தைச் சுற்றிலும் ஒரே புகை
மண்டலமாக இருந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த
செவ்வாய்பேட்டை தீயணைப்பு
நிலைய வீரர்கள், மாநகர காவல்துறையினர்
உடனடியாக சம்பவ இடம் விரைந்து
சென்று மீட்பு பணிகளில் இறங்கினர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி பலத்த தீக்காயத்துடன் போராடிக் கொண்டிருந்த கோபி (52), ராஜலட்சுமி (80), கணேசன் (37), சுதர்சன் (6), வீட்டு உரிமையாளர் வெங்கடராஜன் (62), இந்திராணி (54), இவருடைய உறவினர்கள் மோகன்ராஜ் (40), நாகசுதா (30), கோபால் (70), தனலட்சுமி (64), முருகன் மனைவி உஷாராணி (40), பத்மநாபன் மகன் லோகேஷ் (18) உள்பட 15 பேரை மீட்டு சிகிச்சையில் சேர்த்தனர்.

இவர்களில் மூதாட்டி ராஜலட்சுமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காயம் அடைந்தவர்களுள் ஒருவரான தனலட்சுமி, சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், கட்டடங்களில் இருந்து தெறித்த கற்கள் அவர் மீது பட்டு காயம் ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

கட்டட இடிபாடுகளில் சிக்கி செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, கார்த்திக்ராம், எல்லாம்மாள் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.

ஐந்து சடலங்களும்
உடற்கூறாய்வுக்காக சேலம்
அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திமுக எல்எல்ஏ ராஜேந்திரன் மற்றும்
அதிமுக எம்எல்ஏக்கள்,
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,
மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்,
மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா,
அனைத்துத் துறை முக்கிய அதிகாரிகளும்
சம்பவ இடம் விரைந்துசென்று மீட்பு
பணிகளை மேலும் துரிதப்படுத்தினர்.

காஸ் சிலிண்டர் வெடித்ததாகச்
சொல்லப்பட்டதால் இந்தியன் ஆயில்
நிறுவன அதிகாரிகளும்,
மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன்
ஆகியோரும் சம்பவ இடத்தில்
விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தின்போது வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால் காஸ் சிலிண்டர்தான் வெடித்ததா அல்லது வெடிகுண்டு, நாட்டு வெடிகள் போன்றவை ஏதேனும் வெடித்ததா என்பது குறித்து கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, இடிந்து தரைமட்டமான வீடுகளில் இருந்து நல்ல நிலையில் இருந்த நான்கு காஸ் சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதுகுறித்து சேலம் மாவட்ட
ஆட்சியர் கார்மேகம் கூறுகையில்,
”முதல்கட்ட விசாரணையில் காஸ்
சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து
நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சிலிண்டரை சரியாக மூடாமல்
வைத்திருந்தனரா அல்லது காஸ் அடுப்பை
பற்ற வைக்கும்போது காஸ் கசிந்து
விபத்து ஏற்பட்டதா என்பது
முழுமையான விசாரணையில்
தெரிய வரும்.

இடிந்த கட்டடங்களில்
இன்னும் காஸ் கசிவு இருப்பதால்,
அப்படியே வெட்டி அகற்றாமல்
கீழிருந்து குடைந்து மீட்பு பணி நடக்கிறது.
கோவையில் இருந்து மீட்புக்குழுவினர்
அழைக்கப்பட்டு உள்ளனர்.
அரக்கோணத்தில் இருந்து பேரிடர்
மேலாண்மைக் குழுவினரும்
வருகின்றனர்,” என்றார்.

இதற்கிடையே சம்பவ இடத்தை
அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று
பார்வையிட்டதுடன், மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவோரைச்
சந்தித்து ஆறுதலும் கூறினார்.

சிறுமி மீட்பு:

காலை 6.30 மணியளவில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், நான்கு வீடுகளும் தரைமட்டமாகின. இதில் முருகன் என்பவரின் மகள் பூஜாஸ்ரீ (10) கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். இடிந்து விழுந்த சுவர்களுக்கு இடையே சிறுமி சிக்கிக் கொண்டதால் அவரை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

நவீன இயந்திரங்கள் மூலம் சுவர்களை உடைத்த தீயணைப்பு வீரர்கள் 3.30 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுமியை பத்திரமாக மீட்டனர். உடனடியாக சிறுமி, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

வெடித்தது எந்த வகை சிலிண்டர்?:

கோபியின் வீட்டில் இருந்த
காஸ் சிலிண்டர்தான் வெடித்துச்
சிதறியது என்பது விசாரணையில்
தெரிய வந்துள்ளது. கோபியின் மனைவி
அதே பகுதியில் பலகார
கடை வைத்துள்ளார். அவருடைய
கடையில் வேலை செய்து வரும்
பணியாளர்களும் அதே வீட்டில்
தங்கியிருந்துள்ளனர்.

கடையில் பயன்படுத்தப்படும்
19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ்
சிலிண்டர் அந்த வீட்டில் இருந்துள்ளது.
அந்த சிலிண்டர்தான் காஸ்
கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியிருக்க
வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.

சேலத்தில் இதற்குமுன்பு காஸ் சிலிண்டர் வெடித்த விபத்துகள் நடந்திருந்தாலும் இதுபோன்ற கோர விபத்து நடந்ததில்லை. இந்நிலையில் கருங்கல்பட்டியில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியானதுடன், நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.