இந்தியாவில், 21ம் நூற்றாண்டிலும் ஆண் குழந்தைகளை விரும்பும் சமூகமே அதிகளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் நடந்த ஓர் ஆய்வு, இந்தியாவில் 21 மில்லியன் ‘தேவையற்ற பெண் குழந்தைகள்’ இருப்பதாக கூறுகிறது.
உலகளவில் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 1.1.2018 முதல் அந்த நாட்டில், பெண் ஊழியர்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதைக்கூட தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது.
அதுபோன்ற உயரிய சிந்தனைகளை எட்டிப்பிடிக்க, இந்தியாவிற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு அப்படித்தான் சொல்ல வைக்கிறது.
ஆனால், நாம்தான் மூச்சுக்கு முன்னூறு முறை பூமி முதல் நதிகள் வரை பெண்களின் பெயரால் அழைப்போம். அதுவே, ஆகப்பெரிய நகைமுரண்.
பாலின சமத்துவம் குறித்து நாம் என்னதான் டிவி, பத்திரிகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும், அதைப்பற்றியெல்லாம் மக்கள் பெரிய அளவில் உள்வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
2017 – 2018ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில், இந்தியாவில் ‘தேவையற்ற பெண் குழந்தைகள்’ என்ற மதிப்பீட்டில் 21 மில்லியன் குழந்தைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
‘தேவையற்ற குழந்தைகள்’ என்பது, ஆண் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் பெற்றோருக்கு பிறந்த பெண் குழந்தைகள் என வரையறுக்கிறது அந்த ஆய்வுக்குழு. இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழுதான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.
உலக சுகாதார ஆய்வு நிறுவனம், பாலின சமத்துவம் என்பது ஒரு பெண் குழந்தைக்கு 1.05 என்ற அளவில் ஆண் குழந்தைகள் பிறக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் 1.82 ஆக இருக்கிறது.
கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று குழந்தை பிறப்புக்கு முன்பே பெற்றோரிடம் தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என்று என்னதான் அரசாங்கம் சொன்னாலும், அதையும் எந்த ஒரு ஸ்கேன் மையங்களும் கண்டுகொள்வதில்லை.
ஸ்கேன் மூலம் கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிந்துகொண்டு, கருக்கலைப்பு செய்யும் போக்கும் இந்தியாவில் அதிகரித்திருப்பதும் பாலின சமமின்மைக்கு முக்கிய காரணமாக அந்தக்குழு கண்டறிந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாலினம் தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் குற்றங்கள் அவ்வளவாக நடப்பதில்லை என்றும் ஆய்வு முடிவு கூறுகிறது.
வளர்ந்த மாநிலங்களான தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களைக் காட்டிலும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில்தான் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுக்கும் போக்கு நிலவுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ”ஒரு மகள், பத்து மகன்களுக்குச் சமம். மகன்களைப் பெற்றுக்கொள்வதால் கிடைக்கும் புண்ணியத்தை விட மகள்களைப் பெற்றுக்கொள்வதால் அதிகம் புண்ணியம் கிடைக்கும்,” என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வாசித்த பொருளாதார ஆய்வறிக்கையின், முகப்பு அட்டை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ‘பிங்க்’ நிறத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது.
பெண்களை உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே ஒரு நாடு முழுமையான வளர்ச்சி பெற்றதாக கருத முடியும்.
– நாடோடி.