Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

மழைநேர இடியின்போது அர்ச்சுனனை அழைப்பது பழைமை மாறாத மனிதர்களின் வழக்கம். ஆனால், சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தையை சரிக்கட்ட அர்ச்சுனனை அழைக்கின்றனர் இன்றைய சேலம் மக்கள்.
சிறிதுநேரம் நேரடி எப்.எம். பாடலை கொடுத்துவிட்டு, பழ வியாபாரத்தை முடித்து விடும் வித்தியாசமான மனிதர்தான் அர்ச்சுனன். விற்கும் பழம் எதுவோ, அது குறித்தான செய்தியை பாடலாக படித்து விடுவது அவருடைய தனித்த அடையாளம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளியைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். கடந்த இருபது வருடங்களாக சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கூவி கூவி விற்பதை மாற்றி, பாட்டுப்பாடி பழங்களை விற்பனை செய்துவரும் அவரை சந்தித்தோம்.
“எதையாவது இட்டுக்கட்டி பாடுவது சிறுசிலிருந்தே பழகி போச்சுங்க. ஒரே இடத்துல உக்காந்து விக்காம, அவிங்க இடத்துக்கே போய் வியாபாரம் செய்யறது சரின்னு தோணுச்சு. அதிகாலை 3 மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு போயி விவசாயிங்ககிட்ட பழங்கள வாங்கிட்டு, 6 மணிக்கு வியாபாரத்த ஆரம்பிச்சுடுவேன்.
உழவர் சந்தைக்கு வந்தப்புறம் அங்க விவசாயிங்க கொண்டு வர்ற பழங்கள், சோளக்கதிர்களை மொத்தமாக வாங்கிட்டு வியாபாரத்துக்கு வந்திடுவேன். ஒரு நாளைக்கு 100 கி.மீ. வரைக்கும் சைக்கிள்லே சுத்துவேன்.
வீட்டுக்குள்ள இருக்கிற மக்கள வெளியே வர வைப்பது சிரமமாக இருந்துச்சு. பழத்தை கூவி கூவி வித்தா, தேவைப்படறவங்க மட்டுமே வீட்டுக்கு வெளியே வந்து வாங்குவாங்க.
யோசிச்சிப் பார்த்தேன்…அவர்களைக் கவர, விக்கிற பழத்தின் பெருமை, குணம், மருத்துவத்தன்மையை இட்டுக்கட்டி பாடினேன். என் பாட்டு சத்தம் கேட்டு நிறைய பேர் வீட்டை விட்டு வெளியே வந்து, ஆச்சரியமா கேட்டாங்க. அப்புறம் அவங்க என் கிட்ட பழம் வாங்க ஆரம்பிச்சாங்க.
என் பாட்டை கேக்கவே பல பேர் என்னை நிறுத்தி பொறமையாக பழம் பொறுக்கி எடுப்பாங்க. நான் பாட்டை நிறுத்திவிட்டு பேச ஆரம்பிச்சா அவிங்க கோவிச்சுக் குவாங்க. பழத்தைவிட என் பாட்டுதான் அவங்களுக்கு பிடிச்சிருக்கு,” என்றார் பெருமிதமாக.
பொது இடங்களில் பாட கூச்சமாக இல்லையா? எனக்கேட்டோம்.
“மக்கள் மத்தியில பாடுறது எல்லாருக்கும் வராதுங்க. கூச்சப் படுவாங்க. நான் ரொம்ப வருஷமா தெருக்கூத்துலே வேஷம் கட்டி ஆடுகிறேன். அதனால எனக்குக் கூச்சமே இல்ல. தெருக்கூத்துலே துரியோதனன், அனுமன், நாரதர்…அப்புறம் அன்னிக்கு யாரு கூத்துக்கட்ட வரலையோ அவங்களோட வேஷம் கட்டிடுவேன்.
விடிய விடிய மக்கள் மத்தியில பாட்டுப்பாடி ஆடுவோம். எனக்கு ரொம்ப இஷ்டமானது தெருக்கூத்து கலை. மஹாபாரத கூத்து, தொடர்ந்து 18 நாட்கள் நடக்கும். இப்ப சில கிராமங்கள்லதான் கூத்து நடத்த கூப்பிடுறாங்க. அதுக்காக, மக்களோட ரசனை குறைஞ்சிட்டதுன்னு சொல்ல முடியாதுங்க. பல பொழுதுபோக்கு அம்சங்க மக்கள் கையிலேயே இருக்கு அதான்.
தெருத்தெருவா சுத்தற எனக்கு, பாட்டுப்பாடி பழம் விக்கறதுனால களைப்பு தெரியாம இருக்கு. சில வீட்டுக்காரங்க, நான் பாட்டுப் பாடினாத்தான் பழம் வாங்குவேன்னு கறாரா சொல்லிடுவாங்க. ரசனை எல்லார்கிட்டயும் இருக்கு.
ஒரு வீட்டுக்காரம்மா, நான் எப்போ வருவேன்னு காத்திட்டிருக்கும். அந்த தெருவுக்குள்ள நான் நுழைஞ்சா போதும்…தன் குழந்தையையும், அதுக்கு சோறு ஊட்ட தட்டையும் எடுத்துக்கிட்டு வெளியே வந்துடுவாங்க. அந்த வீட்டுக்கு முன்னாடி நான் பாடினா, அவங்க குழந்தை சிரிச்சிக்கிட்டே உடனே சோறு சாப்பிட்டு முடிச்சிடும்.
எனக்குக் கூச்சமாக இருக்குற விஷயம்…. சேலத்துல சிவராமன்னு ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி. அவரு நான் வந்தா என் பாட்ட விரும்பி கேட்டுட்டு, பழத்தை மொத்தமாக வாங்கி எல்லோருக்கும் கொடுத்துடுவாரு. என் வியாபாரமும் உடனே முடிஞ்சிடும். பெரிய மனசுங்க அவருக்கு. ஆனா, அதுல எனக்கு மனசு நிறையலேங்க. தெருத்தெருவா மக்களை பார்த்து வித்துட்டு போறதுதான் எனக்குப் பிடிக்குது,” என்றார்.
அர்ச்சுனனின் மனைவி ராணி. 100 நாள் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களுக்கு 2 ஆண், 3 பெண் குழந்தைகள். 43 வயதாகும் பழ வியாபாரி அர்ச்சுனன், ஒருமுறை லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து, முன்புபோல் உச்சஸ்தாயியில் தம்கட்டி பாடுவதை மட்டும் கொஞ்சம் குறைத்து விட்டதாகச் சொல்கிறார்.
தெருக்கூத்துக் கலைஞரான அர்ச்சுனன், மூன்று பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாததால், ஒரு மகளை மட்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்துவிட்டார். ஆனாலும், அடிக்கடி அந்த இல்லத்திற்கு நேரில் சென்று மகளைப் பார்த்துவிட்டு வருகிறார்.
வறுமையோடு போராடும் அர்ச்சுனன் தின்பண்டங்கள் வாங்கிச்செல்லக்கூட பணம் இல்லாததால், மகளிடம் பாசத்தை மட்டுமே பரிசாக கொடுத்துவிட்டு வருகிறார். பொறியியல் படித்து வந்த தன் மகனையும், கல்லூரியை விட்டு நிறுத்தி விட்டார். மற்ற பிள்ளைகள், அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், தனது பாடல்களால் மற்றவர்களை மகிழ்விக்கும் அர்ச்சுனன், அந்த மகிழ்ச்சியின் ரேகைகள், தன் குடும்பத்திலும் படரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
அர்ச்சுனனை
தொடர்பு கொள்ள: 95243 41757
ஆக்கம்: இராம.அழகிரி.