Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

இளைஞர்கள் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களிடம் வெற்று கேளிக்கைப் பேச்சுக்கள் மட்டுமே மண்டிக்கிடக்கும் என்ற பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார்கள், சேலம் இளைஞர்கள் அறுவர். அவர்கள் ஆறு பேருமே அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள்.
படித்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், இயற்கை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விளை பொருட்களுக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கியதில் அவர்கள் தனித்துத் தெரிகின்றனர்.

[embedyt] https://www.youtube.com/watch?v=holauwiSmHk[/embedyt]

சேலம் ஃபேர்லேன்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, ‘கிரீனோசன்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி நடத்தி வருகின்றனர். செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ், நித்யானந்தம் ஆகிய ஆறு நண்பர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையின் உருவாக்கமே, ‘கிரீனோசன்’ (GREEN’O’SUN). ‘கிரீன்+ஓ+சன்’ ஆகிய சொற்களை இணைத்து கடையின் பெயராக வைத்துள்ளனர். ‘கிரீன்’ என்பது பசுமையையும், ‘ஓ’ என்பது ரசாயன உரமற்ற விவசாயம் (ஆர்கானிக்) என்பதையும், ‘சன்’ என்பது இயற்கை சக்தியின் மூலாதாரமான சூரியனையும் குறிக்கும் என்கின்றனர்.

அறுவர் குழுவின் சார்பில் செல்வம் நம்மிடம் பேசினார்.
“கல்லூரியை முடித்தவுடன் நாங்கள் ஆரம்பத்தில் நல்ல சம்பளத்தில் எங்கள் படிப்பு தொடர்பான துறைகளில்தான் வேலை செய்து வந்தோம். அதேநேரம், நாங்கள் ஏதாவது வித்தியாசமான துறையில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் ஒன்றாக இருந்தோம். அடிப்படையில் நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் சிந்தனையும் அதை நோக்கியே இருந்தது.
இப்போது பலர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதைச் சொல்வதைக் காட்டிலும், செயல் அளவில் இருக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
இயற்கை விவசாயிகளின் பெரிய பிரச்னையே, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதுதான். அதனால் நாமே ஏன் முழுக்க முழுக்க இயற்கை விளைபொருட்களுக்கென ஒரு சந்தையை உருவாக்கக் கூடாது என்று யோசித்து, தொடங்கியதுதான் ‘கிரீனோசன்’ இயற்கை அங்காடி.
காய்கறிகள், பழங்கள், அரிசியில் பூச்சித்தாக்குதல், வண்டு தாக்கியிருந்தால் அதை வாங்காமல் மக்கள் வெறுத்து ஓடுகின்றனர். உண்மையில், ரசாயன உரமின்றி இயற்கையில் விளைவிக்கப்பட்ட எல்லா பொருட்களிலும் பூச்சித்தாக்குதல் இருக்கும். இதைப்புரிந்து கொள்ள அவர்களுக்கு அனுபவம் வேண்டும்.
ஒருமுறை பல்லடத்தில் பாரம்பரிய விவசாயிகளின் கூட்டம் நடந்தது. அதன்மூலமாக எங்களுக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் பற்றிய தரவுகள், தொடர்புகள் கிடைத்தன,” என்கிறார் செல்வம்.
இதற்காக அவர்கள் 120 இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்துள்ளனர். தினை, கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரைவாலி, மூங்கில் அரிசி போன்ற சிறுதானியங்கள் மட்டுமின்றி கருங்குறுவை, காட்டுயானம், வாசனை சீரக சம்பா, கிச்சலி சம்பா, வெள்ளை பொன்னி உள்ளிட்ட அரிசி வகைகளும் விற்கின்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், அரிசியை இவர்கள் பாலீஷ் செய்வதில்லை. கைக்குத்தல் அரிசியாகவே பாக்கெட் செய்து விற்கின்றனர். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் என்பதே காரணம். இதிலும், வாசனை சீரகசம்பா அரிசியை சமைத்தால் அதன் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் மூக்கைத் துளைக்குமாம்.
“இயற்கை விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதால், அவர்களிடம் நாங்கள் பேரம் பேசுவதில்லை. சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்தே விளைபொருட்களை வாங்குகிறோம். சரக்குப் போக்குவரத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.
விவசாயிகள் ரசாயன உரம், யூரியா ஏதேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை, அவ்வப்போது நேரில் ஆய்வு செய்கிறோம்.
கத்தரிக்காயில் புழு, பூச்சி இருந்தாலே அது இயற்கையாக விளைவிக்கப்பட்டதென புரிந்து கொள்ளலாம்.
இயற்கை விவசாயம் செய்யப்படும் மண் இறுகிப்போகாது. அதனால் கீரைகளின் வேர் ஆழமாக ஊடுருவும். கீரைகளின் வேர் நீளமாக இருப்பதை வைத்தும் இயற்கை விளைபொருளா இல்லையா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
சிறுதானியம், பாரம்பரிய அரிசி வகைகள் மட்டுமின்றி மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால், பருப்பு வகைகள், மிளகு, பட்டை, அன்னாசிப்பூ போன்ற வாசனைப் பொருட்களும் விற்பனை செய்கிறோம்.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு அயோடின் சத்து இருந்தால் போதும். ஆனால், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து உப்பு வகைகளும் அயோடின் கலந்துதான் விற்கப்படுகிறது. அயோடின் அதிகமானாலும் உடலுக்கு ஆபத்துதான். அதனால் நாங்கள் சுத்தமான இந்து உப்புதான் விற்பனை செய்கிறோம். இப்படி மக்கள் நலனை மையப்படுத்தியே நாங்கள் செயல்படு கிறோம்.
நாட்டுக்காய்கறிகள் ஒரு வாரம் ஆனாலும் அழுகாது. ருசியும் மாறாது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. வாடிக்கையாளர்களும் இப்போது பரவலாக ஆதரவு தருகின்றனர். ஒவ்வொரு காய்கறிகள், பழங்கள், கீரைகள் கடைக்கு வந்திறங்கியதும் அதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்கிறோம்,” என்றார் செல்வம்.
கிரீனோசன் அங்காடி
தொடர்புக்கு: 9655336333