டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது ஆறு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று ட்வீட் செய்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனன் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சரஸ்வதி, கலைராஜன் உள்ளிட்டோர் நேற்று திடீரென்று நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி, ”இந்த பலவீனமான நபர்கள், ஆறு மாதம் கழித்துதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்ற பயத்தில்தான் தினகரன் ஆதரவாளர்கள் மீது சவுக்கை சுழற்றுகின்றனர்,” என்று கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், ”எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இப்போதுதான் தலைவர்களாக நடக்க தொடங்கியுள்ளனர்.
இப்போதுவரை அவர்களுக்கு, அவர்களின் தலைவரின் காலில் விழுவதும், தலைவருக்காக லஞ்சம் வசூலிப்பதும் மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். இப்போதுதான் தினகரன் விசுவாசிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்,” என்றும் தெரிவித்து இருந்தார்.
குருமூர்த்தியின் கருத்துக்கு அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் இருந்து உடனுக்குடன் சுடச்சுட பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன், ”அளந்து பேசுங்கள் குருமூர்த்தி. மற்றவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்வதற்கு முன், நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கட்சி (பாஜக) நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே பெற்றதைப் பற்றி பேசுங்கள்.
பாஜக தனித்து நின்றால், அதற்கு மக்கள் செல்வாக்கு என்ன என்பதை பார்த்துவிட்டோம். அறிவுஜீவி போல் காட்டிக்கொள்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைத்து விடாது,” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று கூறுகையில், ”ஆடிட்டர் குருமூர்த்தி தடித்த வார்த்தை ஒன்று சொன்னால் எங்களால் நூறு வார்த்தைகள் சொல்ல முடியும். நாவடக்கத்துடன் பேசக்கற்றுக்கொள்ள வேண் டும்.
அதிமுக தொண்டர்கள் முதல் முதலைமைச்சர் வரை எல்லோரும் ஆண்மையோடுதான் இருக்கிறார்கள். காங்கேயம் காளைகள்போல் பணியாற்றுகிறார்கள்.
குருமூர்த்திக்குதான் ஆண்மை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். அவர் ஒன்றும் எங்களை வழிநடத்தவில்லை. படித்த முட்டாளாக இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடரப்படும்,” என்றார்.
இதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, ”எப்படியோ, தமிழ்நாடு அரசாங்கம் என் வழிகாட்டுதலில் செயல்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
இப்போது மட்டுமல்ல, பல காலமாகவே அதிமுக தலைவர்களை அப்படித்தான் விமர்சித்து எழுதி வருகிறேன்,” என்றும் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.