Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு,
பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை
மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த
கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில்
எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி
இருப்பது தெரிய வந்துள்ளது.

 

பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான்.

ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டை சுக்கல் சுக்கலாக நொறுங்கிப்போனது. எல்லாவற்றுக்கும் மேல், சேலம் மக்களவை தொகுதியிலேயே எடப்பாடியின் ஆசிபெற்ற வேட்பாளர் கேஆர்எஸ். சரவணன், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனிடம் 146926 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய நேர்ந்தது.

 

மாநிலத்தின் முதல்வரா? அல்லது மாவட்ட மந்திரியா? என்று ஐயம் எழும் அளவுக்கு சேலத்திற்கு விஜயம் செய்து வந்த எடப்பாடிக்கு, சொந்த மண்ணில் செல்வாக்கு முற்றிலும் சரிந்ததா? சேலம் அதிமுகவின் கோட்டை என்பது தகர்ந்ததா? அக்கட்சிக்கே உரிய வாக்குகள் எங்கே போயின? என்ற வினாக்கள் கட்சியினரிடம் மட் டுமின்றி மக்களிடமும் எழுந்துள்ளது.

 

1980க்குப் பிறகு சேலம் மக்களவை தொகுதியில் நேரடியாக போட்டியிட்ட திமுகவுக்கு, இப்போது கிடைத்திருப்பது சாதாரண வெற்றி அல்ல. அக்கட்சியின் கடின உழைப்புக்கு கிடைத்த இமாலய வெற்றி என்பதை யாவரும் அறிவர். அதேநேரம், சேலம் மக்களவையைப் பொருத்தவரை அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு இடம் மாறியுள்ளதா? என்ற வினாவுக்கு இரண்டு விதமான முடிவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

 

டிவிடி தினகரன் தலைமையிலான அமமுக பெற்ற வாக்குகள் அனைத்துமே, ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள்தான் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அக்கட்சிக்கு புதிய வாக்காளர்களோ, இதர கட்சிகளின் வாக்காளர்களோ வாக்களிக்கவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

 

அதன் அடிப்படையில் அமமுக பெற்ற வாக்குகளை அதிமுக பெற்ற வாக்குகளாகவே நாம் கணக்கிடும் பட்சத்தில், சேலம் மக்களவைக்கு உள்பட்ட நான்கு தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு பெரிய அளவில் சரியவில்லை என்ற முடிவு நமக்குக் கிடைக்கிறது.

சேலம் மக்களவை தொகுதியில்
ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு,
சேலம் வடக்கு, சேலம் தெற்கு,
வீரபாண்டி ஆகிய ஆறு சட்டப்பேரவை
தொகுதிகள் அடங்கி உள்ளன. இவற்றில்
சேலம் வடக்கு மட்டுமே திமுக வசம் உள்ளது.
மற்ற ஐந்தும், ஆளுங்கட்சி தொகுதிகள்.
எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சட்டப்பேரவை
தொகுதியில் இருந்து வெற்றி பெற்று
எம்எல்ஏ ஆனவர். அவருடைய
தொகுதியிலும்கூட திமுக முன்னிலை
பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில்
ஆளுங்கட்சிக்கு 96485 வாக்குகளும்,
திமுகவுக்கு 104573 வாக்குகளும்
கிடைத்துள்ளன.

 

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில்
பாமகவுக்கு கணிசமான செல்வாக்கு
இருக்கிறது. அக்கட்சி தனித்து
போட்டியிட்டாலும் நாற்பதாயிரம்
வாக்குகளுக்கு மேல் பெறக்கூடிய
வலிமை இருக்கிறது. கடந்த 2016
சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடியில்
தனித்துப் போட்டியிட்ட பாமக 56681
வாக்குகள் பெற்று, இரண்டாம் இடம்
பிடித்தது. 2011 தேர்தலிலும்கூட
அக்கட்சிக்கு 69848 வாக்குகள்
கிடைத்திருக்கின்றன.

 

இப்போதைய மக்களவை தேர்தலில்,
எடப்பாடியில் அமமுக 9110 வாக்குகளைப்
பெற்றுள்ளது. அதிமுக + அமமுக ஆகிய
இரு கட்சிகளும் இந்த தொகுதியில் பெற்ற
மொத்த வாக்குகள் 105595. இது,
இப்போது திமுக பெற்ற வாக்குகளை
விட 1022 வாக்குகள் குறைவு.
இன்னும் சொல்லப்போனால், இப்போது
அதிமுக, அமமுக இரு கட்சிகளும்
பெற்ற வாக்குகள், கடந்த 2016 சட்டப்பேரவை
தேர்தலில் எடப்பாடி பெற்றதை விட
6892 வாக்குகள் அதிகம். ஒருவேளை,
ஒருங்கிணைந்த அதிமுகவாக
செயல்பட்டிருந்தால், அக்கட்சியின்
பாரம்பரிய வாக்குகளை தக்க
வைத்திருக்கக் கூடும்.
இதன்படி கணக்கிட்டால்,
அத்தொகுதியில் உள்ள பாமக,
தேமுதிக வாக்குகள் அதிமுகவுக்கு
விழாமல் திமுகவுக்கு சாதகமாக
விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

சேலம் மக்களவையில்
பாமக வலிமையாக உள்ள மற்றொரு
சட்டப்பேரவை தொகுதி சேலம் மேற்கும் அடங்கும்.
இங்கு 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது,
அதிமுக 80755 வாக்குகளும், தனித்துப் போட்டியிட்ட
பாமக 29982 வாக்குகளும் பெற்றன.
ஆனால், மக்களவை தேர்தலில்
அதிமுகவுக்கு இத்தொகுதியில் 72314 வாக்குகள்
மட்டுமே கிடைத்துள்ளன.
திமுக, 101647 வாக்குகளை
அள்ளியுள்ளது.

 

சேலம் மேற்கு தொகுதியில் அமமுக
பெற்ற 6650 வாக்குகளையும் அதிமுகவின்
கணக்கில் சேர்த்து கணக்கிட்டால்
ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு
78964 வாக்குகள் கிடைத்ததாகக்
கொள்ளலாம். இது, கடந்த 2016 சட்டப்பேரவை
தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளுடன்
ஒப்பிடுகையில் 1791 வாக்குகள் மட்டுமே
குறைவு. அதேநேரம், இந்த தொகுதியில்
பாமக, தேமுதிகவுக்கென உள்ள நிலையான
வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுக
பக்கம் சாய்ந்திருக்கின்றன என்பதையே
இந்த புள்ளி விவரம் சொல்கிறது.
அதாவது, திமுகவை விட அதிமுக 29333
வாக்குகளை குறைவாக பெற்றிருக்கிறது.
இந்த வாக்கு வித்தியாசமானது,
கடந்த 2016ல் இத்தொ குதியில் பாமக
பெற்ற வாக்குகளுக்கு மிக நெருக்கமானது
என அருதியிட்டுச் சொல்கிறேன்.

 

ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியிலும் ஆளுங்கட்சி வேட்பாளரை பாமகவினர் கவிழ்த்தியிருப்பது அம்பலமாகி உள்ளது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஓமலூர் தொகுதியில் அதிமுக 89169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பாமக, அப்போது 48721 வாக்குகளை பெற்று, திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது. 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது, அதிமுக 112102 வாக்குகள் பெற்றிருந்தது. பாமக 65558 வாக்குகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தது.

முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் கணக்கிட்டால் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்கு சராசரியாக 90000 முதல் ஒரு லட்சம் வாக்குகள் நிலையாக உள்ளன. 2019, மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஓமலூரில் 85551 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அமமுக பெற்ற 8060 வாக்குகளையும் அதிமுக கணக்கில் கொண்டால், அக்கட்சிக்கு 93611 வாக்குகள் கிடைத்திருப்பதாகக் கொள்ளலாம். எளிமையாகச் சொல்வதெனில், அதிமுக அதன் சராசரி வாக்குகளைப் பெற்றுவிட்டதாக கருதுகிறேன். எனில், பாமகவின் நிலையான வாக்குகளில் பெரும்பகுதி திமுகவுக்கும், இதர சிறு கட்சிகளுக்கும் சிதறிப்போயிருக்கின்றன என்பதை நாம் சொல்லாமலே விளங்கிக் கொள்ள முடியும். இத்தொகுதியில் திமுக மிக அதிகபட்சமாக 118846 வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. தனிமரமாக நின்ற முன்னாள் பாமக எம்எல்ஏ தமிழரசுவை தக்க சமயத்தில் திமுக இணைத்துக் கொண்டதும்கூட அக்கட்சி முன்னிலை பெற மற்றொரு முக்கிய காரணம்.

 

சேலம் மக்களவையைப் பொருத்தமட்டில்,
வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி மிக
முக்கியமானதாகக் கருதப்பட்டது.
காரணம், அதிமுக சார்பில் 2001, 2011
தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற
எஸ்.கே.செல்வம், இந்த முறை டிடிவி தினகரன்
கட்சி சார்பில் அதிமுகவை எதிர்த்துப்
போட்டியிட்டார். எதிர்ப்பலை இல்லாத சூழலில்,
வீரபாண்டி தொகுதியில் அதிமுக, திமுக
இரண்டு கட்சிகளுக்குமே சராசரியாக
85 ஆயிரம் முதல் ஒரு லட்சம்
வாக்குகள் வரை உள்ளன.

 

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் அதிமுக 94792 வாக்குகளும், திமுக 80311 வாக்குகளும் பெற்றிருந்தன. 2011 தேர்தலின்போது அதிமுகவுக்கு 100155 வாக்குகளும், திமுகவுக்கு 73657 வாக்குகளும் கிடைத்தன.

 

இந்த மக்களவை தேர்தலில், வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்கு 74858 வாக்குகளும், திமுகவுக்கு 98411 வாக்குகளும் பதிவாகி உள்ளன. அமமுகவின் எஸ்.கே.செல்வம் அதிகபட்சமாக 17134 வாக்குகள் பெற்றுள்ளார். இப்போது, அதிமுக + அமமுக ஆகிய இருகட்சிகளும் மொத்தமாக 91992 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது, 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் மனோன்மணி பெற்ற வாக்குகளை (94792) விட 2800 வாக்குகள் மட்டுமே குறைவு. இந்த வித்தியாசம், ஆளுங்கட்சி மீதான சிறு அதிருப்தியாக கருதலாம். எனில், வீரபாண்டி தொகுதியிலும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் வாக்குகள் மட்டுமின்றி புதிய வாக்காளர்களின் கணிசமான ஆதரவும் திமுகவுக்கு கைகொடுத்திருக்கிறது.

 

முழுமையாக நகர்ப்புற வாக்காளர்களைக் கொண்ட சேலம் தெற்கு, சேலம் வடக்கு ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆளுங்கட்சி மீது பெரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். சேலம் தெற்கைப் பொருத்தவரையில், (கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகள் ஒப்பீட்டின்படி) சராசரியாக அதிமுகவுக்கு 90000 வாக்குகளும், திமுகவுக்கு 65000 வாக்குகளும் உள்ளன. இந்த மக்களவை தேர்தலில் சேலம் தெற்கில் அதிமுக, தனது சராசரிக்கும் கீழாக அதாவது 65740 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அமமுக பெற்ற 6658 வாக்குகளையும் அதிமுக பக்கம் சேர்த்துக் கொண்டாலும்கூட 72398 வாக்குகளைத் தாண்டவில்லை. அதேநேரம் இங்கு மநீம 17418 வாக்குகளை அதிகபட்சமாக பெற்றிருக்கிறது. இத்தொகுதியில் திமுக பெற்ற 87863 வாக்குகளில் ஆளும்கட்சி மீதான அதிருப்தியாளர்கள் மட்டுமின்றி, புதிய வாக்காளர்கள் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

 

இதேநிலைதான் சேலம் வடக்கு தொகுதியிலும் நிலவுகிறது. இத்தொகுதியில் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே சராசரியாக 70000 வாக்குகளுக்கு மேல் பெறக்கூடியவை. இங்கு ஓரளவுக்கு தேமுதிக, பாமகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. எனினும், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தும், அவ்விரு கட்சிகளின் வாக்குகள் கொஞ்சமும் அதிமுகவுக்கு உதவவில்லை. அதிமுகவுக்கு இத்தொகுதியில் 63170 வாக்குகளும், திமுகவுக்கு 91113 வாக்குகளும் பதிவாகியுள்ளன. அமமுக பெற்றுள்ள 4640 வாக்குகளையும் அதிமுக கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, ஆளுங்கட்சி இங்கு தனது நிலையான சராசரி வாக்குகளை பெருமளவு இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆக, இந்த தேர்தலில் எடப்பாடி, ஓமலூர், சேலம் மேற்கு, வீரபாண்டி ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக (அமமுக வாக்குகளையும் உள்ளடக்கியது) பெரிய அளவில் தனது செல்வாக்கை இழக்கவில்லை. எனினும், சேலம் தெற்கிலும், சேலம் வடக்கிலும் ஆளுங்கட்சி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருப்பதும் இந்த தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.

 

”பாஜக மீது தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பலைதான், அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம். என்றாலும், அதிமுக-பாமக, தேமுதிக கூட்டணியை அந்தந்த கட்சிகளின் தலைமை ஏற்றுக்கொண்டாலும், தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து புத்தகமே வெளியிட்டுவிட்டு, ஒரே மாதத்தில் ஆளுங்கட்சியுடன் கூட்டணி என்ற பாமக நிலைப்பாடு காரணமாகத்தான் எங்கள் கட்சி வாக்குகள் அதிமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளன. தேமுதிக தொண்டர்களும் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப்போடவில்லை என்பது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

 

மேலும், கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்புமணிக்கு, அமைச்சர் பதவி தராமல் பாஜக ஏமாற்றியது. அதுவும், பாஜக மீது பாமக தொண்டர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் பெரிதும் இழப்பைச் சந்தித்தது அதிமுகதான்,” என்றார் ஒரு பாமக முக்கியஸ்தர்.

 

அதேநேரம், சேலம் மக்களவை தொகுதியில் பணப்பட்டுவாடா முறையாக நடக்காததும் தோல்விக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

 

”60 சதவீத வாக்காளர்களுக்கு தலா 300 ரூபாய் வழங்க கட்சித் தலைமை, சொல்லி இருந்த நிலையில், 200 ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்ததோடு, 30 சதவீத வாக்காளர்களுக்கு மட்டுமே அதுவும் வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட செயலாளர் முதல் வார்டு செயலாளர் வரை பாதியை சுருட்டிவிட்டனர். மேலும், பாஜக மற்றும் தேமுதிக, பாமக உடன் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றிருந்தாலும்கூட சில தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருக்கும். இந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் எங்கள் கட்சிக்கே உரிய சொந்த வாக்குகள்தான்,” என்கிறார்கள் ர.ர.க்கள்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு தேர்தலின்போதும் கருமந்துறையில் உள்ள வெற்றி விநாயகரை, சூறைத்தேங்காய் உடைத்து வழிபட்டு பரப்புரையைத் தொடங்குவது வழக்கம். மக்களவை தேர்தலின்போதும், கடந்த மார்ச் 22ம் தேதி, வெற்றி விநாயகர் கோயிலில் இருந்து கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளருக்காக முதன்முதலில் பரப்புரையைத் தொடங்கினார். கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமிக்கு சென்டிமென்டாக கைகொடுத்த வெற்றி விநாயகர், இந்த தேர்தலில் கைவிரித்துவிட்டார். கூட்டணி கட்சிகள், கால்களை வாரிவிட்டன.

 

– செங்கழுநீர்

Leave a Reply