Sunday, December 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியாவில் உள்ள 73 சதவீத சொத்துகளும், வளங்களும் நாட்டின் ஒரு சதவீதம் பேரிடம் மட் டுமே குவிந்து கிடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இந்தியாவில் ஏழை – பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி ஆண்டுதோறும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம், ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் பொருளாதார இடைவெளி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில், ‘ரிவார்டு ஒர்க்; நாட் வெல்த்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்பட மொத்தம் பத்து நாடுகளில் 70 ஆயிரம் பேரிடம் இதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளது. கிடைத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு டபிள்யூ.இ.எப் என்ற உலக பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் ஆய்வுடன் எந்தளவுக்கு ஒத்துப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்திய பிறகு, தனது அறி க்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 73 சதவீத சொத்துகளும், வளங்களும் 1 சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்து கிடப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. அதாவது, 67 கோடி பேரிடம் உள்ள சொத்துகளின் மதிப்பை 1 சதவீதம் பேர் குவித்து வைத்துள்ளதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த புள்ளி விவரம் எதைக் காட்டுகிறது என்றால், இந்தியாவில் பொருளாதார சமமின்மை இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதை அப்பட்டமாகச் சொல்கிறது.

‘சிவாஜி’ படத்தில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திறங்கும்போது ஒரு பக்கம் விண்ணத்தொடும் கட்டடங்களையும், மற்றொரு பக்கம் தன் கார் கண்ணாடியை தட்டி பிச்சைக் கேட்கும் பெண்ணையும் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் ரஜினிகாந்த், ‘ரிச் கெட் ரிச்சர்…புவர் கெட் புவரர்’ என்பாரே. அதையேதான் ஆக்ஸ்ஃபாம் அமைப்பும், புள்ளி விவரங்களாகச் சொல்கிறது.

செல்வங்கள் ஓரிடத்தில் குவிவதும், பொருளாதார சமச்சீரற்ற தன்மை என்பதும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இதே நிலைதான். ஆ…ஊ…என்றால் மேற்கோள் காட்டும் அமெரிக்காவிலும் இதே நிலைதான்.

ஆனாலும், இந்த இடைவெளி இந்தியா அளவுக்கு மோசமில்லை எனலாம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நாட்டின் 58 சதவீத சொத்துகள் 1 சதவீதம் பேரிடம் இருந்தன. இப்போது அதன் அளவு 73 சதவீத சொத்துகளாக உயர்ந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 20.90 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. இது, இந்தியாவின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்புக்கு இணையானது என்ற அதிர்ச்சி தகவலையும் சொல்கிறது ஆக்ஸ்ஃபாம்.

முன்பு சாதாரணமாகச் சொல்லப்பட்ட ரிசப்ஷனிஸ்ட், டெலிகாலர் பணிக்கான பெயர்கள் எல்லாம் இப்போது ரிலேஷன்ஷிப் மேனேஜர், கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் என புதிய நாமகரணம் சூட்டப்பட்டு விட்டது. எஸ்எஸ்எல்சி படித்திருந்தாலும் இப்போதெல்லாம் ஏதோ ஒரு நிறுவனத்தில், ஏதோ ஒரு மேனேஜர் ஆகிவிடலாம். ஆனால், பதவியின் பெயரில் இருக்கும் ‘கெத்து’ வழங்கப்படும் சம்பளத்தில் இருப்பதில்லை. அதே அய்ந்தாயிரம், பத்தாயிரம்தான்.

ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிஷா அகர்வால், ”இந்தியாவில் உள்ள ஒரு முன்னணி கார்மென்ட் நிறுவனத்தில் ஓர் உயரதிகாரி பெறக்கூடிய ஆண்டு ஊதியத்தைப் பெற, கிராமப்புறத்தில் பணியாற்றும் சாதாரண கூலித்தொழிலாளி இன்னும் 941 ஆண்டுகள் உழைக்க வேண்டியதிருக்கிறது,” என்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டில் உலகம் முழுவதும் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள். சராசரியாக இரண்டு நாளைக்கு ஒருவர் பணக்காரர் பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறார்.

கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2010ம் ஆண்டிலிருந்து சராசரியாக 13 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே இருந்து வந்திருக்கிறது. சாமானியர்களைப் பொருத்தவரை விலைவாசியைத் தவிர வேறெதிலும் இந்தளவுக்கு வளர்ச்சியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு புதிதாக உருவெடுத்த 17 கோடீஸ்வரர்கள் உள்பட மொத்தம் 101 பெரும் பணக்காரர்கள் இருப்பதாகச் சொல்கிறது ஆக்ஸ்ஃபாம்.

இப்படி கன்னாபின்னாவென அதிகரிக்கும் வருவாய் சமநிலையற்ற தன்மையால், புதிய அடிமை முறை உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உயரதிகாரிகளின் ஊதியத்தை 60 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும், பெரும் செல்வந்தர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் கூடுதல் வரி, சிறப்பு வரி விதிக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்ஃபாம் யோசனை தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையை படித்து முடிக்கையில், நாட்டில் இன்னும் பல புதிய கோடீஸ்வரர்கள் உருவெ டுத்திருப்பார்கள்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் வரும் பாலையா போல் நாமும் இனி, அசோகன்களை ‘அசோகர்’ என்றும், மகன்களை ‘மகர்’ என்றும் அழைப்போம்.

 

– பேனாக்காரன்.