Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

விக்ரம் – விமர்சனம்

நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஸ்வாதிஸ்தா மற்றும் பலர்.

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: ஹரிஷ் கங்காதரன்

ஆக்ஷன்: அன்பறிவ்

எடிட்டிங்: பிலோமின் ராஜ்

தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ்

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

 

கதை என்ன?:

 

காவல்துறை அதிகாரியான
தன் மகனை டிரக் மாபியா கும்பல்
கொலை செய்து விடுகிறது.
மகனை இழந்த, முன்னாள் ரா ஏஜன்ட் கமல்ஹாசன்,
அந்த கும்பலை கண்டுபிடித்து அழித்தாரா?
போதைப்பொருள் இல்லாத உலகத்தை படைத்தாரா?
என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.

 

திரைமொழி:

 

படத்தின் துவக்கத்திலேயே,
பத்தல… பத்தல… பாடலில்
அதகளம் செய்கிறார் கமல்.
அடுத்த காட்சியிலேயே அவரை முகமூடி
அணிந்த கும்பல் ஒன்று, கிரானைட் வெடிகுண்டு வீசி
கொடூரமாக கொலை செய்து விடுகிறது.
அவருடன் காளிதாஸ், ஹரீஷ் பரோடி ஆகிய
இரு காவல்துறை அதிகாரிகளும் முகமூடி
கும்பலால் கொல்லப்படுகின்றனர்.

 

அடுத்தடுத்து காவல்துறை அதிகாரிகள்
குறி வைத்துக் கொல்லப்பட்டதன்
பின்னணியில் கொகெய்ன் கடத்தல்
கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம்
என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளிகளை பிடிக்கும் பொறுப்பு,
காவல்துறை உயர் அதிகாரி செம்பன் வினோத் ஜோஸிடம்
வழங்கப்படுகிறது. அவரோ, அதே காவல்துறையில்
நிழல் புலனாய்வு முகமையாக செயல்படும்
பகத் பாசில் தலைமையிலான குழுவினரிடம்
இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.

 

பகத் பாசில் தலைமையிலான
குழுவின் விசாரணையில், காவல்துறை நினைப்பது போல,
முகமூடி அணிந்த கும்பல் சமூக விரோதிகள்
அல்ல என்பதும், அவர்கள் டிரக் மாபியாக்களையும்,
அவர்களுக்கு துணை போகும்
நபர்களையும் குறி வைத்து கொலை
செய்வதையும் கண்டுபிடிக்கின்றனர்.

 

அதேநேரம்,
தனக்கு இந்த பொறுப்பை
ஒப்படைத்த காவல்துறை உயர் அதிகாரியான
செம்பன் வினோத் ஜோஸ்தான்,
காக்கி துறையில் உள்ள கருப்பு ஆடு என்பதும்,
அவருக்கும் கொகெய்ன் கடத்தல்
கும்பலுக்கும் தொடர்பு இருப்பதையும்,
2 லட்சம் கோடி ரூபாய் பெறுமான
கொகெய்னை கைப்பற்றுவதற்காகத்தான்
இந்த கொலைகள் நடந்துள்ளன
என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

 

கிரானைட் குண்டு வைத்து
கொல்லப்பட்டதாக சொல்லப்படும் கமல்ஹாசன்,
உண்மையில் கொல்லப்பட்டாரா? இல்லையா?
என்ற உண்மையையும் கண்டுபிடிக்கும்
பகத் பாசில், தான் சேகரித்த விவரங்களை
எல்லாம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு,
தனக்கான பணியில் இருந்து
ஒதுங்கிக் கொள்கிறார்.

 

இதற்கிடையே,
தனது காதல் மனைவியான காயத்ரியை,
டிரக் மாபியாவும், காக்கி கருப்பு ஆடு
செம்பன் வினோத்தும் திட்டமிட்டு கொலை
செய்த உண்மை தெரிந்த பிறகு பகத் பாசில்,
கமல்ஹாசனுடன் சேர்ந்து கொண்டு,
டிரக் மாபியாவை அழிக்க உதவுகிறார்.
மொத்த திரைக்கதையும் இவ்வளவுதான்.

 

லோகேஷ் கனகராஜ்:

 

இதுவரை தமிழில் வெளியான ஆக்ஷன் திரில்லர் படங்கள் எதனோடும் விக்ரம் படத்தை ஒப்பிட முடியாது. விக்ரம் படத்திற்குப் பின், விக்ரமுக்கு முன் என்று டிரெண்ட் செட் செய்யும் அளவுக்கு தனித்து தெரிகிறது. அந்தளவுக்கு யூகிக்க முடியாத திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 1986ல் வெளியான விக்ரம், 2019ல் வெளியான கைதி படங்களின் காட்சிகளை தற்போதைய ‘விக்ரம்’ படத்துடன் நுட்பமாக இணைத்து, மூன்று படங்களுமே ஒரே சம்பவங்களின் தொடர்ச்சிதான் என்று ரசிகர்களுக்கு காட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்திற்கு சான்று.

 

லோகேஷ் கனகராஜ், கமலின் முதல்வரிசை ரசிகனாக இருப்பார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு கமல் இடம்பெறும் காட்சிகள் மட்டுமின்றி, அவருடைய கோணத்தில் இருந்தே ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து மிக கவனமாக செதுக்கி இருக்கிறார். வெகு சில இடங்களில் தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. கதையோட்டத்தில் அதையும் மறக்கச் செய்திருக்கிறார்.

 

கமலின் ரசிகர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்ற கருத்து உண்டு. ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையும் எப்படிப்பட்டது என்ற சஸ்பென்சை, இயக்குநரே சின்னச்சின்ன காட்சிகள் அல்லது வசனத்தின் மூலம் முன்கூட்டியே ரசிகர்களுக்கு கடத்தி விடுகிறார்.

 

உதாரணத்திற்கு, கமல் வீட்டின் வேலைக்கார பெண்மணியின் பாத்திர வார்ப்பைச் சொல்லலாம். அதேபோல, ‘நீ என்ன வேலை செய்யறனு கேட்க மாட்டேன். அப்படி கேட்டா, அதுதான் என்னோட வாழ்க்கையின் கடைசி நாள்,’ என்று காயத்ரி சொல்லும் இடமும், அவருக்கான முடிவையும் சொல்லலாம். அருள்தாஸின் கழுத்தில் லீடிங் செயின் போட்டு இழுத்து வருவதற்கும், காளிதாஸ் கொல்லப்படும் காட்சியின் மூலம் முன்பே ரெஃபரன்ஸ் கொடுத்திருப்பார் இயக்குநர். பார்வையாளனின் ரசனையை இந்தக் காட்சிகள் செழுமைப் படுத்துகின்றன.

 

கமலின் மருமகளையும், பேரனையும் டிரக் மாபியாக்கள் கொல்ல வரும் காட்சியிலும், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன. நிச்சயமாக, இடைவேளை ட்விஸ்ட்டை யாரும் யூகிக்க முடியாத வகையில் கொடுத்திருப்பது லோகேஷின் தனித்துவம் என்றே சொல்லலாம். அந்த ட்விஸ்ட்டுக்கு திரையரங்கில், ரசிகர்களின் கரவொலி அடங்க வெகு நேரமானது.

 

‘கைதி’ படத்தில் பிஜாய் என்ற போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் நடித்த நரேனுக்கு, இந்த படத்திலும் அதே பாத்திரம்தான். பாதாள சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நரேனை காப்பாற்றி, ஒரு திரையரங்கின் வழியாக கமல் வெளியேறுவார். அந்த திரையரங்கின் பெயர், ‘வெற்றி’ என்று இருக்கும். அதேபோல், டிரக் மாபியாக்கள் தன்னைத் தேடி வரும்போது, ‘வெல்கம்’ என்று எழுதப்பட்ட போர்டு அருகே கமல் நின்று கொண்டிருப்பார். இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களிலும் இயக்குநர் கவனம் செலுத்தி இருப்பார்.

 

முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஒரே படத்தில் நடிக்கும்போது, சிலருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். இந்தப் படத்தில் கமல், பகத் பாசில், விஜய்சேதுபதி என மூன்று நாயகர்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து, தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை மெய்ப்பித்திருக்கிறார் லோகேஷ். மட்டுமின்றி, சிறப்பு தோற்றத்தில் வந்து செல்லும் சூர்யா மற்றும் நரேன், சந்தானபாரதி, குமரவேல், வேலைக்கார பெண்மணி, அருள்தாஸ் என சில நிமிடங்களே வந்து போகும் பாத்திரங்களாக இருந்தாலும், அனைத்தும் மனதில் நிற்கும்படி செய்திருப்பது வெகு சிறப்பு. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் ஓடினாலும், சலிப்பு ஏற்படுத்தாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

கமல்ஹாசன்:

 

‘பத்தல… பத்தல…’ பாடலில் ஓடும் ரயிலில் குட்டிக்கரணம் அடித்து நடனம் ஆடுவதும், உடற்பயிற்சி கூடத்திலும், பாதாள சிறைக்குள்ளும் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்கிறார் கமல். ஒரு ‘கம்பேக்’ படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விக்ரம் ஆகச்சிறந்த சான்று. இதெல்லாம், கமல் என்ற மார்க்கண்டேயனால் மட்டுமே முடியும். கர்ணன் என்ற விக்ரம் பாத்திரத்தில் நடித்திருக்கிறார், கமல்.

 

பரபரப்பை ஏற்படுத்திய ‘பத்தல… பத்தல…’ பாடல், திரையில் முழுவதும் இடம்பெறாதது சின்ன ஏமாற்றம். இந்தப் பாடல் மட்டுமல்ல… திரைக்கதை ஓட்டத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக எல்லா பாடல்களுமே மாண்டேஜ் போல பின்னணியில் மட்டுமே வந்து போகிறது.

 

பொதுமேடையை அரசியல் மேடையாக்கி விடுவது கமலின் சிக்னேச்சர். இந்தப் படத்தில் அரசியல் நேரடியாக இல்லாவிட்டாலும், வசனங்கள் வாயிலாக அதை லேசாக தொட்டுக் காட்டியிருக்கிறார்.

 

‘இந்த நாட்டுல நல்லதைக் கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியதிருக்கு…’; ‘ஒரு காட்டுல சிங்கம் துரத்தும்போது உயிருக்கு பயந்து மான் ஓடும். அதுக்குள்ள அஸ்தமனம் ஆயிடுச்சுனா அடுத்த நாள் விடியலை சிங்கம்தான் முடிவு பண்ணும். இங்கே விடியலையும் அஸ்தமனத்தையும் நான்தான் முடிவு பண்ணுவேன்,’; ‘பழிவாங்குவதாக இருந்தால் என்றைக்கோ சந்தனத்தை கொன்றிருக்கலாம். என் நோக்கம் அது இல்ல. அடுத்த தலைமுறை நல்ல விதமாக உருவாக, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கணும். அதற்காகத்தான் அவனை கொல்லப் போறேன். இது பழிவாங்கல் இல்ல… ஐடியாலஜி,’ என கமலுக்காக ரத்னகுமார் எழுதிய நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

 

கமலின் பேரக்குழந்தைக்கு, அதிக சத்தம் கேட்டால் ஹார்ட் அட்டாக் வந்துவிடும் பிரச்னை இருக்கிறது. மகன் இறந்த நேரத்தில், துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அழுது கொண்டிருப்பார்கள். அப்போது வீட்டின் படுக்கை அறையில் குழந்தை அழும் ஓசையை கேட்டு ஓடும் கமல், ஒரு பூ ஜாடியை தரையில் போட்டு உடைத்து, மொத்த கூட்டத்தையும் அங்கிருந்து விரட்டி அடிக்கும் காட்சி ஒரு கவிதைபோல கவர்கிறது. அதே வீட்டில் நிகழும் சண்டைக் காட்சியில் வில்லன்கள் சத்தம் போட்டு விடாமல் இருக்க, வித்தியாசமாக சண்டைக் காட்சி வடிவமைக்கப்பட்டு இருக்கும். அந்தளவுக்கு நுணுக்கமாக அந்தக் காட்சி படமாக்கப்பட்டு இருப்பதில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவின் முத்திரை பளிச்சிடுகிறது.

 

கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு குடிகாரனாகவே தனது மாமனாரை பார்த்து வந்த ஸ்வாதிஸ்தா, அவரையும், குழந்தையையும் மீட்டு, தப்பித்துச் செல்லுங்கள் எனக்கூறும்போது, ‘ஆமா… இங்கே என்ன நடக்குது… நீங்க நல்லவரா? கெட்டவரா?,’ என்று கேட்பார். நாயகன் படத்தில் வருவதுபோல, தெரியலையேம்மா… என்று சொல்லாமல், ‘நான் யாருங்கறத உன் பையன் பெரிய ஆளா வளர்ந்த பிறகு அவனே சொல்லுவான்…’ என்று பதில் அளிப்பார். ‘நாயகன்’ வேலுநாயக்கரிடம் கேட்ட கேள்விக்கு, கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு கர்ணன் என்கிற விக்ரம் பாத்திரத்தின் வாயிலாக பதில் கிடைத்திருக்கிறது.

 

ஒரு பக்கம் வில்லன் கும்பலுடன் போராட்டம், இன்னொரு பக்கம் மூர்ச்சையாகிக் கிடக்கும் பேரக் குழந்தையை காப்பாற்ற போராடும்போது, கண்களை முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு தவிக்கும் கமல், ரசிகர்களையும் உருக வைத்து விடுகிறார். ‘டேய் தம்பி… கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் எனக்கே டஃப் கொடுக்கிறியா…’ என அவர் குழந்தையைப் பார்த்து கூறும்போது, இளைய சமூகத்தினரின் திறமையை அவர் அங்கீகரிப்பது போலவே தெரிகிறது.

 

பகத் பாசில், விஜய் சேதுபதி என நடிப்பு அரக்கர்கள் இருந்தாலும் தனக்கான பாத்திரத்தை நிறைவாக செய்து, பெரிய அளவில் கவனம் சேர்க்கிறார் கமல்.

 

விஜய்சேதுபதி:

 

சந்தனம் என்ற பாத்திரத்தில் காட்சிக்கு காட்சி அனாயசமாக தூள் பறத்துகிறார் விஜய்சேதுபதி. டிரக் மாபியா கும்பலின் தலைவன். ஹார்பரில் கண்டெய்னர்களில் வந்திறங்கும் கொகெய்ன் போதைப்பொருளை சந்தையில் கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை.

 

இவருக்கு, ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி என மூன்று மனைவிகள். பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சான் என மொத்தம் 63 பேர் கொண்டது அவருடைய குடும்பம். அதனாலேயே தன் குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். தன் தொழிலை முன்னிறுத்தி குடும்பத்தினருக்கு எதுவும் கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

 

அவருடைய அறிமுக காட்சியே, அதகளப்படுத்துகிறது. திரையரங்கமே ஆர்ப்பரிக்கிறது. ஆட்டோவில் வழிக்காவலாக வரும் காவலரை, அவருடைய துப்பாக்கியையே வெடிக்கச் செய்து கொன்றுவிட்டு, தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோவில் இருந்து மேல் சட்டைகூட இல்லாமல் தொப்பை வயிறும், தங்கப்பல்லும் தெரிய கைகளை பின்னால் கட்டியபடி அவர் நடந்து வரும் காட்சி, செம மாஸ். அவருக்கான வசனங்கள் குறைவு; அப்படியே பேசினாலும், உச்சரிப்பு தெளிவில்லாமல் இருப்பது சிறு குறை.

 

ஒவ்வொரு முறையும் கொகெய்ன் பவுடரை உள்ளிழுத்துக் கொண்ட பிறகு, களத்தில் அவர் மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது. கமலுடன் நேருக்கு நேர் மோதும் காட்சியில், ஒரு கட்டத்தில் யார் சிங்கம்? யார் மான்? என்ற கேள்வி எழுகிறது. இருவருமே இறந்து விடுவார்களா? என்ற பதற்றம் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.

 

பகத் பாசில்:

 

முதல் பாதி கதை, பகத் பாசிலை மையப்படுத்தியே நகர்கிறது. ஆரம்பக் காட்சியிலேயே கிரானைட் குண்டு வைத்து கமல் கொல்லப்பட்டு விடுகிறார் என்பதால், அவரே இந்த படத்தில் கெஸ்ட் ரோல்தான் போலருக்கு என்ற எண்ணமும் ரசிகர்களுக்கு வந்து விடுகிறது. அந்தளவுக்கு பகத் பாசில், விஜய்சேதுபதி, காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சுற்றியே முதல் பாதி நகர்கிறது.

 

விக்ரம் எப்படி, ஏன் கொல்லப்பட்டார்? காளிதாஸ் ஏன் கொல்லப்பட்டார்? என அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரிக்கும் விதத்தில் கவனம் கூட்டுகிறார் பகத் பாசில். கர்ணன் பாத்திரத்தில் வரும் கமல், மகன் மறைவுக்குப் பிறகு அன்றாடம் மது குடிப்பதும், விலைமகளின் வீடே கதியாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அவர் அன்றாடம் செல்லும் விலைமகளிடம் சென்று, கர்ணன் இங்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்? என விசாரிக்கும் இடத்தில், விலைமகள் பாத்திரத்தில் வரும் பெண், கமல் செய்து காட்டியதை அப்படியே பகத் பாசிலிடமும் செய்து காட்டும் காட்சி நெஞ்சை அள்ளுகிறது. அங்கேயே பகத் பாசிலுக்கு, கர்ணன் பாத்திரத்தின் மீது நல்ல விதமான அபிமானம் வந்து விடுகிறது.

 

காயத்ரியும், பகத் பாசிலும் ஊடல் கொள்வதும், பின் கூடல் கொள்வதும் ரசிக்கும்படி இருக்கின்றன. காயத்ரி, பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

 

ஏஜன்ட் டீனா:

 

கமல் வீட்டில் பேரக்குழந்தையை கவனித்துக் கொண்டு, சமையல் வேலைகளைச் செய்து வரும் பெண்மணி, திடீரென்று விஸ்வரூபம் எடுப்பார். அப்படியொரு காட்சியமைப்பு, தமிழ் சினிமாக்களில் அரிதான ஒன்று. அந்த பாத்திர வார்ப்பு கிட்டத்தட்ட, ‘விஸ்வரூபம்’ படத்தில் பெண் தன்மையுள்ள நளினமான பாத்திரத்தில் வரும் கமல், வில்லன் கும்பலிடம் சிக்கிக் கொண்டபோது திடீரென்று விஸ்வரூபம் எடுத்து அந்த கும்பலை புரட்டி எடுப்பார். அதேபோன்றதுதான்.

 

முன்னாள் உளவுப்பிரிவு ஏஜன்ட் டீனா பாத்திரத்தில் கலக்கி இருக்கும் அவர் பெயர் வசந்தி என்றும், நடனக்கலைஞர் என்றும் அறிந்தோம். நடிகையாக இதுதான் முதல் படம். இனி வித்தியாசமான தமிழ் சினிமாக்களில் அவர் தவிர்க்க முடியாத கலைஞராக இருப்பார் என எதிர்பார்க்கலாம். லோகேஷின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு. அவருடைய டிரான்ஸ்பார்மேஷனை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. டீனாவின் பாத்திரத்தை காண்பதற்காகவே விக்ரம் படத்தை இன்னொருமுறை பார்க்கலாம்.

 

சூர்யா:

 

இந்தப் படத்தில் சூர்யா,

சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்

என படம் வெளியாவதற்கு சில நாள்கள்

முன்பே கசிந்துவிட்டது. என்றாலும்,

என்ன கதாபத்திரத்தில் வருகிறார்

என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கிளைமாக்ஸ் காட்சியில், ரோலக்ஸ்

பாத்திரத்தில் வந்திறங்கும் சூர்யா,

சில நிமிடங்களே வந்தாலும்

ஒரு மிரட்டு மிரட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தின் தொடர்ச்சி வரப்போகிறது

என்பதை அவருடைய பாத்திரத்தின் மூலம்

உறுதியாகி இருக்கிறது.

 

கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா ஆகியோர் ஒரு படத்திற்கு கதைதான் நாயகன். வெறும் மாஸ் நடிகர் என்ற பிம்பம் மட்டும் எல்லா காலத்திலும் எடுபடாது என்பதை உணர்த்தி இருக்கிறார்கள். விக்ரம் படத்தின் வெற்றிக்கு அதுதான் காரணம்.

 

அனிருத்:

 

பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் தெறிக்க விட்டிருக்கிறார் அனிருத். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய கடும் உழைப்பு தெரிகிறது. பின்னணி இசை, ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்துக்கு தேவையான வேகத்தை மேலும் கூட்டுகிறது.

 

தொழில்நுட்பக் குழு:

 

படத்தின் 90 சதவீத காட்சிகள்,

இருட்டில்தான் படமாக்கப்பட்டு உள்ளது.

எனினும், பார்வையாளனுக்கு

அலுப்பு தட்டாத வகையில் லைட்டிங்

கச்சிதமாக செய்திருக்கிறார்

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்.

 

அதேபோல,

3 மணி நேரம் நீளும் படத்தை

கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாத

வகையில் கத்தரி போட்டிருக்கிறார்

எடிட்டர் பிலோமின் ராஜ்.

 

இரட்டையர்களான அன்பறிவ்,

சண்டைக் காட்சிகளில் அனல்

பறக்க வைத்திருக்கின்றனர்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில்

ரொம்பவே கவனம் ஈர்க்கின்றனர்.

இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவில்

சிலருக்கு இந்தமுறை தேசிய விருது

கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

 

மொத்தத்தில், விக்ரம் படம், கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக வெளிவந்திருக்கிறது. பார்க்கலாம். ரசிக்கலாம்.

 

– வெண்திரையான்