பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.
தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:
வெட்கக்கேடு
திட்டினார்
துரோகம் செய்தார்
ஊழல்
ஒட்டுக்கேட்பு ஊழல்
கொரோனா பரப்புபவர்
வாய்ஜாலம் காட்டுபவர்
நாடகம்
கபட நாடகம்
திறமையற்றவர்
அராஜகவாதி
சகுனி
சர்வாதிகாரம்
சர்வாதிகாரி
அழிவு சக்தி
காலிஸ்தானி
இரட்டை வேடம்
பயனற்றது
ரத்தக்களரி
குரூரமானவர்
ஏமாற்றினார்
குழந்தைத்தனம்
கோழை
கிரிமினல்
முதலைக்கண்ணீர்
அவமானம்
கழுதை
கண்துடைப்பு
ரவுடித்தனம்
போலித்தனம்
தவறாக வழிநடத்துதல்
பொய்
உண்மையல்ல
முட்டாள்தனம்
பாலியல் தொல்லை
குண்டர்கள்
லாலிபாப்
பாப்கட்
மேற்கண்ட சொற்களை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி இந்த சொற்களைச் சொன்னால் அவை குறிப்பில் ஏறாது.
இந்த சொற்களைப் பார்க்கும்போது நம் கண் முன்பு அனிச்சையாகவே பாஜக ஞாபகம்தான் வந்து போகிறது. எதிர்க்கட்சிகள் பாஜகவை எந்தெந்த சொற்களைச் சொல்லி விமர்சித்து வருகின்றனவோ, அவை எல்லாம் தடை செய்யப்பட்ட சொற்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலில் வெற்றி பெறச் செய்தால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்று மோடியும், அமித்ஷாவும் ‘வாய்ஜாலம்’ பேசினர் என்று இனி சொல்ல முடியாது.
பணமதிப்பிழைப்பை ஒரு ‘முட்டாள்தனம்’ என்றும், விவசாயிகளின் காவலன் என்ற பெயரில் பிரதமர் ‘முதலைக்கண்ணீர்’ வடிக்கிறார் என்றும் இனி பாராளுமன்றத்தில் மறந்தும் கூட விமர்சிக்கக் கூடாது.
கோத்ரா ரயில் எரிப்பில் இப்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு ‘கிரிமினல்’ ஆக வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்று கூட சொல்ல முடியாது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி என்று ‘அராஜகம்’ செய்யும் கட்சியாக பாஜக உள்ளது என்றும், இக்கொள்கையில் பிரதமர் ஒரு ‘சர்வாதிகாரி’ போல செயல்படுகிறார் என்றோ, பாஜக ‘சர்வாதிகாரம்’ செய்கிறது என்றோ இனி சொல்ல இயலாது.
‘பொய்’ என்றும், ‘உண்மை அல்ல’ என்றும் சொல்லக்கூடாது என்பதுதான் இருப்பதிலேயே வேடிக்கையானது. பொய் என்பதை உண்மை அல்ல என்று வேறு வடிவத்தில் சொல்லலாம். அதற்கும் தடை விதித்துள்ளனர்.
கற்பழிப்பு என்ற சொல், நாகரீகமாக பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு என்றெல்லாம் சொல்லப்பட்டு வரும் நிலையில், இனி பாலியல் தொல்லை என்று கூட பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து இருப்பது ‘குழந்தைத்தனமாக’ இருக்கிறது.
இந்துத்துவ சனாதன கொள்கைகளைத் திணிக்கும் பாஜக அரசு, ஜனநாயக உரிமைகளை பறிப்பதன் மூலம் இந்த நாட்டின் ‘அழிவு சக்தி’யாக உருவெடுத்து வருகிறது.
‘ஊழல்’ என்ற சொல்லை ஒழித்துவிட்டால், நாட்டில் ஊழலை ஒழித்து விடலாம் என்று மக்களவைச் செயலகத்தை எந்த ‘கழுதையோ’ ‘தவறாக வழிநடத்தி’ இருக்கிறது.
மது மட்டுமா..? நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு விளைவிப்பது பாஜகவும்தான். பேசாமல், பாஜக என்று சொல்லவும் தடை கொண்டு வந்துவிட்டால், இந்த நாடாவது தப்பித்துக் கொள்ளும்.
அவர்களை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள் இருவரும் கோமாளிகள். இன்னும், கோமாளிகள் என்ற சொல் தடை செய்யப்படவில்லை. அந்தச் சொல் அவர்களுக்கு ஆகப்பொருத்தமானதும் கூட.
அது சரி… ‘எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே; கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே’ என்று பாடினால் தடை செய்ய முடியாதுதானே?
– பேனாக்காரன்