Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

 #தொடர்

 

ஒன்றரை அடி குறட்பாவில் உலகளந்தவன் வள்ளுவன். அதனால்தான், குறளின் பெருமையை, ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்றார், இடைக்காடர்.

ஏழு சீர் கொண்ட குறட்பாக்களை, பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்ததால்தான் தமிழர்கள் ஓரளவுக்கேனும் அதை படித்து வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால், திருக்குறளின் மேன்மையைச் சொல்ல, வடநாட்டில் இருந்து தருண்விஜய் போன்று யாராவது வந்தால்தான் ஆச்சு.

குறளின் இன்பத்தை, நாம் திரை இசை வழியாக இந்த தொடரில் பார்த்து வருகிறோம். கருத்துச் சொல்வதாக இருந்தாலும், மசாலா சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால், ‘போச்சுடா…இங்கேயும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்களா…?’ என வாசகர்கள் சட்டென அடுத்தப் பக்கத்தை திருப்பிவிடுவார்கள். அதனால்தான் குறளின் வலிமையை சினிமா பாடல்களின் ஊடாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

காதலை, அதன் வலிமையை, அதன் இன்பத்தை, காதலர்கள் பிரிவின் துயரத்தை வள்ளுவன் அளவுக்கு யாரும் சொல்லியிருக்க முடியாது என்பது என் அபிப்ராயம்.

காதலை நோய் என்ற வள்ளுவன், அந்த நோயால் அதிகம் வருந்துவது என்னவோ பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்கிறான். ஒருவேளை, வள்ளுவனுக்கு பெண்கள் மீதான அதீத கரிசனமாகக்கூட இருக்கலாம்.

அதனால்தான் அவன்,

”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்”     (123:1227)

என்கிறான்.

காதல் இருக்கிறதே…அந்த தீ, பற்றிக்கொண்ட ஆணையோ, பெண்ணையோ ஒரு வழிபண்ணாமல் விடுவதில்லை. காலைப்பொழுதில் அரும்புபோல் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து விடுகிறது. மாலையில், அகன்று விரிந்த மலராகின்றதாம்.

காதல், மொட்டாக இருந்தால் பரவாயில்லை; மலர்ந்த நிலையில் இருக்கும்போது காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருக்க முடியுமோ?

காதலனோ, காதலியோ இருவரும் சந்தித்துக்கொள்ளும் தருணத்திற்காக அவர்களின் நான்கு கண்களும், வழிமேல் விழிவைத்துக் காத்திருக்குமா இல்லையா?.

சரி. காதல் பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிட்டது. தலைவியை, தலைவன் எந்த நேரமும் சந்தித்து, சிரித்து, உரையாடி, உறவாடிக் கொண்டு இருக்க முடியுமா?. ஏனெனில், உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது நீங்களும் அறிவீர்கள்.

கவிஞர் விந்தன்

பொருள்தேடிச் சென்ற தலைவன் மாலை நேரத்தில் வீடு திரும்பாமல் இருப்பதை காதலியர் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதே இல்லை.

காதல் ததும்பி வழிகின்ற அந்த மாலை நேரத்தில், தலைவனின் தரிசனம் இல்லாத சூழ்நிலையை, அவர்களால் கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை.

வெறுப்பு கலந்த கோபத்தின் உச்சிக்கே செல்லும் தலைவி,

”மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது”    (123:1221)

என்று, மாலைப்பொழுதின் மீதே சினம் கொள்ளுவாளாம். அதாவது, ‘பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்’ என்பாளாம்.

கே.வி.மகாதேவன்

மாலைக்காலத்தில் தலைவனைக் காணாமல் துன்பமடையும் தலைவி, இரவுப் பொழுதின் மீது அவ்வளவு கோபம் கொள்வதில்லை. சொல்லப்போனால் அவள், இரவுப் பொழுதைக் கொஞ்சம் ரசிக்கவே செய்கிறாள்.

இங்குதான் வள்ளுவன், குறிப்பாக காதலில் இருக்கும் பெண்களின் உளவியலை நுட்பமாக பதிவு செய்கிறான்.

தூக்கத்தின்போது கனவில் வரும் காதலனை கண்டு ரசிக்கும், உறவாடும் வாய்ப்பை வழங்குவது இரவுப்பொழுதுதானே!. அதனால்தான் மாலைப்பொழுதை வெறுக்கும் காதலியர், இரவின் மீது சினம் கொள்வதில்லை.

பெண்களின் உளவியலை,

”நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்”    (122:1213)

எனப் பதிவு செய்கிறான், வள்ளுவன்.

‘நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை, கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் இருப்பதாக,’ காதலியர்கள் சொல்கிறார்களாம்.

அதனால்தான் வள்ளுவனை வெறுமனே புலவனாக பார்க்காமல், மனித மனங்களை ஆழ்ந்து படித்த உளவியல் நிபுணராக பார்க்கிறேன்.

இந்த குறட்பாக்களின் அடிப்படையில், குலேபகாவலி  படத்தில், ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ…’ என்ற பாடல் புனையப்பட்டு உள்ளது.

தித்திக்கும் ‘மோகன’ ராகத்தில் அமைந்த இந்தப்பாடல், இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் என்றால் மிகையில்லை.

எம்.ஜி.ஆர்., ஜி.வரலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோச்சனா, சந்திரபாபு, ஈ.வி.சரோஜா ஆகியோர் நடிப்பில், 1955ம் ஆண்டில் வெளியான, குலேபகாவலி  மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. உச்சக்கட்ட காட்சியில் எம்.ஜி.ஆர்., புலியுடன் மோதும் காட்சிகள், ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவை.

‘சூப்பர் ஸ்டார்’ஆன எம்.ஜி.ஆர்-க்கு ‘மயக்கும் மாலைப்பொழுதே…’ என குழைவான ஒரு மெட்டில் பாடல் அமைக்கப்பட்டிருப்பதே அதிசயம்தான்.

ஏ.எம்.ராஜா-ஜிக்கி பாடிய இந்தப்பாடலை, கவிஞர் விந்தன் எழுதியிருந்தார். உண்மையில் இந்தப்பாடல், ‘குலேபகாவலி’ படத்துக்காக எழுதப்பட்டது அல்ல. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த, ‘கூண்டுக்கிளி’ படத்துக்காக எழுதப்பட்டது.

ஏ.எம்.ராஜா – ஜிக்கி

அந்தப்படத்தை இயக்கிய டி.ஆர்.ராமண்ணா, பாடலை வைக்க போதிய காட்சிகள் இல்லாததால், தான் இயக்கும் அடுத்த படமான குலேபகாவலி-யில் பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லி, அதன்படியே அந்தப்படத்தில் இடம்பெறவும் செய்தார்.

அதேபோல், இந்தப்பாடலுக்கு (‘கூண்டுக்கிளி” படத்துக்காக) மெட்டமைத்தது, ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன். ஆனால், ‘குலேபகாவலி’ படத்துக்கு மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.வி.யும், ராமமூர்த்தியும் இசையமைத்தனர்.

இதனால் ஏற்பட்ட குழப்பமோ என்னவோ, வானொலி, டி.வி.க்களில் ‘மயக்கும் மாலைப் பொழுதே’ என்ற பாடலுக்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்றே இன்றும் பதிவு செய்கின்றனர்.

ஜிக்கியின் குயில் குரலிலும், சோகத்தின் சாயலும் மகிழ்ச்சியின் மையலும் கலந்து பாடும் ஏ.எம்.ராஜாவின் குரலும், ‘மயக்கும் மாலைப் பொழுதே…’ பாடலைக் கேட்போரையும் மயங்கச் செய்யும்.

அந்தப்பாடலின் முழு வடிவம்…

ஆஆஆஆ…………..

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா………………..
(மயக்கும் மாலைப்)

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
(மயக்கும் மாலைப்)
ஆஆஆ……..ஆஆஆ…………………..

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் கண்ணாலே
போடும் போர்வை தன்னாலே (மயக்கும் மாலைப்)
ஆஆஆ…… ஆஆஆ…….

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும் (மயக்கும் மாலைப்)

ஆஆஆ….. ஆஆஆ…..

 

 

– இளையராஜா சுப்ரமணியம்

தொடர்புக்கு: selaya80@gmail.com

பேச: 98409 61947