Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

வெண்ணந்தூரில் நாளை நடக்க உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரொக்கம், வேட்டி, சேலை என வாரி இறைத்த திமுக, இறுதிக்கட்டத்தில் வெள்ளி கொலுசு என்ற பெயரில் இரும்பு கம்பியால் ஆன கொலுசுகளை கொடுத்தது, வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம்
வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு
உட்பட்ட 6வது வார்டில்
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான
இடைத்தேர்தல் சனிக்கிழமை
(அக். 9) நடக்கிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்கி, மாலை 6 மணி வரை
நடக்கிறது. 107 வாக்குச்சாவடிகள்
அமைக்கப்பட்டு உள்ளன.

துரைசாமி – கண்ணன்

ஆறாவது வார்டில் மொத்தம்
54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
வெண்ணந்தூர் ஒன்றியம் நீண்ட
காலமாகவே அதிமுகவின் கோட்டையாக
இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்றத்
தேர்தலின்போது கூட திமுகவுக்கு
அதிமுகவைக் காட்டிலும் 1700
வாக்குகள் குறைவாகவே
கிடைத்துள்ளன.

 

தேர்தல் நடக்க உள்ள வார்டில்
மொத்தம் 24 கிராம ஊராட்சிகள்
உள்ளன. மொத்த வாக்காளர்களில்
50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்
கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள். அதனாலேயே
இதே சமூகத்தைச் சேர்ந்த கண்ணன்
என்பவரை அதிமுக களத்தில்
இறக்கியுள்ளது.

 

கட்சியில் வளர்ந்து வரும்
நிலையில் உள்ள கண்ணனுக்கு
பெரிய அளவில் தனிப்பட்ட
செல்வாக்கு இல்லை என்றாலும்,
அவருடைய மாமனாரான
ஓய்வு பெற்ற விஏஓ கிருஷ்ணமூர்த்திக்கு
மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேலாக
அதே சுற்றுவட்டாரத்தில் விஏஓவாக
பணியாற்றியதால், ஒவ்வொரு வீட்டிலும்
நெருக்கமான தொடர்பை வளர்த்துக்
கொண்டிருக்கிறார். அவருக்கான
நல்ல பெயர், கண்ணனுக்கான
வாக்காக மாறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

 

திமுக தரப்பில்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட
பொறுப்பாளரான
கேஆர்என். ராஜேஷ்குமார் எம்பியின்
நெருங்கிய உறவினரான ஏஆர்.துரைசாமி
போட்டியிடுகிறார். நாட்டு கவுண்டர்
சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்தினர்,
தேர்தல் நடக்க உள்ள வார்டில்
மொத்த வாக்காளர்களில் பத்தில்
ஒரு பங்கினர் மட்டுமே உள்ளனர்.

திமுகவினர் வழங்கியதாக சொல்லப்படும் வெள்ளி மூலம் கொலுசு

உள்ளாட்சித் தேர்தலைப்
பொருத்தவரை கட்சிகள் மீதான
பற்றைக் காட்டிலும் சொந்த சாதி,
உறவுகளை மையப்படுத்தியதுதான் என்பதால்
திமுகவைக் காட்டிலும் அதிமுக ஒரு படி
முன்னிலையில் உள்ளதாக உள்ளூரில்
பேசப்படுகிறது.

 

என்றாலும்,
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது
என்பது ஆளும் திமுக, அதிமுக
ஆகிய இரு கட்சிகளுக்குமே
அத்தனை லேசுபட்டது இல்லை
என்கிறார்கள். அதனால்தான்
சட்டமன்றத் தேர்தலுக்கு அளிக்கப்பட்ட
அதே முக்கியத்துவம் மாவட்ட
கவுன்சிலர் தேர்தலுக்கும் இரு
கட்சிகளும் அளித்து, முட்டி மோதி
வருகின்றன.

 

எம்பி ராஜேஷ்குமார்,
இந்த இடைத்தேர்தலை தனக்கு
விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறார்
என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
ராஜ்யசபா எம்பியாக புரமோஷன்
பெற்ற பிறகு, அவருக்கு உடனடியாக
விடுக்கப்பட்ட இந்த சவாலில் எப்படியும்
வெற்றி பெறுவார்கள் என்றும்
நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

அதேநேரம், முன்னாள் அமைச்சர்
தங்கமணியும் 6வது வார்டை மீண்டும்
அதிமுகவே தக்க வைக்க வேண்டும்
என்பதிலும் குறியாக இருக்கிறார்.
அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம்தான்
இந்த வார்டின் மாவட்ட கவுன்சிலராக
இருந்தார். அவர் பதவியை ராஜிநாமா
செய்து விட்டு திமுகவில் சேர்ந்து விட்டார்.
அவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்
என்ற துடிப்பிலும் தங்கமணி இருக்கிறாராம்.

அதனால் இரு கட்சிகளுமே
போட்டிப்போட்டு வாக்காளர்களை
பண மழையால் குளிர்வித்து வந்தனர்.

 

அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு
தலா 500 ரூபாய் ரொக்கம், ஆண், பெண்
வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை
ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

 

திமுகவினர் அக். 7ம் தேதி,
வாக்காளர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம்,
குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி,
ஒரு செட் வேட்டி, சேலை ஆகியவற்றை
பட்டுவாடா செய்துள்ளனர்.

 

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே
வாக்காளர்களுக்கு 4 கோடி ரூபாய் வரை
பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.
தவிர, தேர்தல் பரப்புரை,
வாக்குச்சாவடியில் பணியாற்றும்
தொண்டர்களுக்கான பணம், மது,
அசைவ உணவு சப்ளை என இரு கட்சிகளும்
தலா 2 கோடி ரூபாய்க்கு மேல்
செலவழித்துள்ளன என்கிறார்கள்
இருதரப்பிலும் விவரம் அறிந்தவர்கள்.

என்றாலும் களத்தில் போட்டி கடுமையாக இருப்பதாலும், எப்பாடுப்பட்டாவது வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்பாலும் திமுகவினர் இன்று (அக். 8) திடீரென்று ஒவ்வொரு வீட்டுக்கும் கொலுசுகளை வழங்கியுள்ளனர்.

 

ஆனால் திமுகவினரின் இந்த வியூகம், இறுதிக்கட்டத்தில் அவர்களுக்கே பூமராங் ஆக திரும்பியுள்ளது. கல்லாங்குளம் கிராமத்தில் திமுகவினர் வழங்கிய கால் கொலுசுகள் வெள்ளியால் ஆனதல்ல; அவை அனைத்துமே இரும்பு கம்பியால் செய்யப்பட்டவை என்றும், வெந்நீரில் போட்டு எடுத்த உடனே கருத்துப் போவதாகவும் காட்டுத்தீ போல தகவல்கள் பரவின.

 

இதையறிந்த அதிமுகவினர், ஒவ்வொரு கிராமத்திலும் திமுகவினர் வழங்கிய கொலுசுகளை வெந்நீரில் போட்டும், அரத்தால் தேய்த்தும் அவை வெள்ளி அல்ல; வெள்ளி மூலாம் பூசப்பட்ட இரும்பு கொலுசுகள் என்று மக்களிடம் டெமோ காட்டி வருகின்றனர். இதுகுறித்த காணொலி காட்சிகள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

 

தேர்தல் விதி மீறல்கள் குறித்து
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
ஸ்ரேயா சிங்கிடம் கேட்டபோது,
”சில நாள்களுக்கு முன்பு திமுகவினர்,
தேர்தல் பரப்புரையின்போது
அமைப்புசாரா நலவாரியத்தில்
உறுப்பினர் சேர்க்கை நடத்துவதாக
புகார் வந்தது. அதன்பேரில் தேர்தல்
பறக்கும்படை அலுவலர்களை அனுப்பி
விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் விசாரித்து விட்டு,
அப்படி நல வாரியத்தில்
உறுப்பினர் சேர்க்கை
நடக்கவில்லை என்றனர்.

 

நலவாரியத்தில் ஆன்லைன்
மூலம்தான் உறுப்பினர் சேர்க்கை
நடத்த முடியும். தேர்தல் விதிகளை
பின்பற்றுமாறு கட்சியினருக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால் பணம், வேட்டி, சேலை,
கொலுசு பட்டுவாடா குறித்து இதுவரை
எந்தப் புகாரும் வரவில்லை,” என்றார்.

 

இது குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதியிடம் கேட்டதற்கு, ”அட போங்க சார்… ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிகளை மீறி நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதாக நான்தான் கலெக்டரிடம் புகார் கொடுத்தேன். அதற்கே எந்த நடவடிக்கையும் எடுக்கல.

 

இன்றுகூட திமுகவினர்
கொலுசுகளை வீடு வீடாக
கொடுத்துள்ளனர். அத்தனையும்
இரும்பி கம்பிதான். ரெண்டே நாளில்
அந்த கொலுசுகள் அத்தனையும்
குப்பைக்கு வந்துடும். அதேபோல் அவர்கள்
கொடுத்த சேலைகள் பெருமளவு கிழிந்தும்,
நைந்தும் இருந்ததாகவும் மக்கள்
கூறுகின்றனர். ஆளுங்கட்சியினர்
ஓட்டுக்காக மக்களை எப்படியெல்லாமோ
ஏமாற்றுகிறார்கள். இதுகுறித்து புகார்கள்
சொன்னாலும் ஒரு நடவடிக்கையும்
எடுக்க மாட்டார்கள் என்பதால்
கலெக்டரிடம் புகார் சொல்லவில்லை,”
என்றார் சலிப்புடன்.

 

போலி வெள்ளி கொலுசு விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளதால் ஆளுந்தரப்பு ரொம்பவே அப்செட் என்ற பேச்சும் தொகுதிக்குள் நிலவுகிறது.

– பேனாக்காரன்