Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்: மன்னிப்பு எந்த மொழிச் சொல்? நீங்களாவது சொல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 போட்டித்தேர்வு வழக்கம்போல் பல்வேறு குளறுபடியான வினாக்களால், வேலை தேடும் இளைஞர்களின் சாபத்தை அள்ளிக்கட்டிக் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி நட்ராஜ் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு புதிய முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவர் தலைவராக இருந்தபோது குரூப்-2 பிரிவில் இருந்த சில பணியிடங்களை குரூப்-1 தரத்திற்கு கொண்டு சென்றார். குரூப்-2 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியிடங்களை ‘குரூப்-2 ஏ’ என்றும், அப்பணியிடங்களை ஒருங்கிணைந்த சார்நிலை பணித்தொகுதியாகவும் மாற்றினார்.

அண்மையில், குரூப்-4 எழுத்தர் நிலையிலான தேர்வும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 11, 2018) நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வின்போது விடைத்தாளிலேயே தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பெயர் போன்ற விவரங்கள் அச்சிட்டும் வழங்கப்பட்டது.

இது ஓர் ஆக்கப்பூர்வமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல், தேர்வு முடிந்த பின் கடைசி ஐந்து நிமிடங்கள் விடைத்தாளை சரிபார்க்கவும் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டது.

இப்படி வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் பலவும் இருந்தாலும், வினா வடிவமைப்பில் இப்போதும் பல்வேறு குளறுபடிகள் இருக்கவே செய்கின்றன. டிஎன்பிஎஸ்சி தொடங்கப்பட்டு இன்னும் ஐந்து ஆண்டுகளில் நூறாண்டுகள் ஆக உள்ள நிலையில், தவறு இல்லாத வினாத்தாள் தயாரிப்பது என்பது இப்போதுவரை குதிரைக்கொம்பாக இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

உதாரணமாக, ஆங்கில வழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில், ரவீந்திரநாத் தாகூர் எப்போது பிறந்தார் என்றொரு வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்காக கொடுக்கப்பட்ட நான்கு விடை வாய்ப்புகளுமே தவறானது.

இதுபோன்ற தவறுகள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் எல்லா தேர்வுகளிலுமே இடம்பிடிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. அந்த வினாவுக்கு பதில் அளித்தவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இருக்கிறது.

இன்னுமொரு விந்தையான ஒரு வினாவும் இடம் பெற்றிருந்தது. மன்னிப்பு எம்மொழிச் சொல்? என்பதுதான் அந்த வினா. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது என நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. உருது என்பதுதான் சரியான விடை.

எனினும், மன்னிப்பு என்ற சொல் தமிழ் மொழிச்சொல்லாகவே காலாகாலமாக நம்மவர்கள் கருதி வருகின்றனர். நம்முடைய பள்ளிகளிலும் அப்படித்தான் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதும் அப்படியான புரிதலே நீடிக்கிறது. அடிப்படையில் உள்ள கோளாறுகளை சரிசெய்யாமல், அறிவுத்திறனை சோதிப்பது என்பது எப்படி அறிவுடைமை ஆகும்?

இந்தியாவின் தேசிய மொழியாக ஹிந்தி மொழியைத்தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தேர்வர்களை வீழ்த்துவதுதான் இலக்கு எனில், அதைக்கூட ஒரு வினாவாகக் கேட்டு விடலாம்.

மன்னிப்பு எம்மொழிச் சொல்? என்பது சற்றே மேட்டிமைத்தனத்துடன் கூடிய வினாதான். ஆனால், ஒவ்வொரு மதிப்பெண்ணிலும் எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணும்போது இதுபோன்ற அதிநுட்பமான வினாக்களை தவிர்த்திருக்கலாம்.

‘ரமணா’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த், ‘மன்னிப்பு… தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை…’ என அவருக்கே உரிய ஸ்டைலில் பற்களை நரநரவென கடித்தபடி பஞ்ச் வசனம் பேசுவார்.

மன்னிப்பு எந்த மொழிச் சொல் என்ற வினாவைப் பார்த்தவுடன், தேர்வர்கள் அனைவரின் தலைக்கு மேலும் ‘டக்’கென பல்பு எரிந்திருக்கும். அட இவ்வளவு எளிமையான வினாவா? என யோசித்திருப்பார்கள். அந்தளவுக்கு ‘ரமணா’ விஜயகாந்த்தும் தமிழர்களை ‘ட்யூன்’ செய்து வைத்திருந்தார்.

அதனால்தான் சொல்லி வைத்தாற்போல் பெரும்பான்மையினர் அதற்கு, ‘தமிழ்’ என்று விடையளிக்க நேர்ந்துள்ளது.

தேர்வு முடிந்த பின்னர், அந்த வினாவுக்கு சரியான விடையைத் தெரிந்து கொண்டபிறகு, விஜயகாந்தை சமூகவலைத்தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வழக்கமாக எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு என்பது, சராசரி, சராசரிக்கும் மேல், மிகத்திறன் வாய்ந்தவர் என்ற மூன்று வகை மாணவர்களையும் மனதில் கொண்டே வடிவமைக்கப்படும் என்கிறார்கள் ஆசிரியர்கள். அதே விதிதான், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும். ஆனால், இந்த முறை குரூப்-4 வினாத்தாள் முற்றிலும் கடினமாகவே இருந்தது.

 

ஆனால், 9351 பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 21 லட்சம் பேர் (அதாவது ஒரு பணியிடத்திற்கு 224 பேர்) விண்ணப்பிக்கும் தேர்வு இப்படித்தான் கடினமாக இருக்கும் என்று டிஎன்பிஎஸ்சி சொல்லாமல் சொல்லியிருக்கிறதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பாடத்திட்டத்தில் தமிழ்நாடு மாநில வரலாறு பற்றியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழக வரலாறு பற்றிய வினாக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏனென்று புரியவில்லை.

பொதுவாகவே இந்திய சுதந்திர போராட்ட வரலாறு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், வழக்கத்திற்கு மாறாக கணிதம், பொருளாதாரம் தொடர்பான வினாக்களுக்கு கூடுதல் முக்கியத்துவமும், நடுவண் அரசு தொடர்பான வினாக்களும் அதிகளவில் இடம் பெற்றிருந்தன.

பயிற்சி மையங்களுக்கு சென்று படித்தவர்களுக்கும்கூட இத்தேர்வு பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை என்கிறார்கள். எனில், அரசு வேலையைக் கனவாக எண்ணிக்கொண்டிருக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நிலையைப் பற்றியும் டிஎன்பிஎஸ்சி கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

எழுத்தர் பணிக்கு அடிப்படை கல்வித்தகுதி என்னவோ எஸ்எஸ்எல்சிதான். ஆனால், வினாக்களின் தரமோ குரூப்-2 தரத்தில்.

எளிமை, கடினம், மிகக்கடினம் என்ற வகைமைக்குள்ளிருந்து விடுபட்டு முற்றிலும் கடினமான வினா வடிவமைப்பு அல்லது வினவும் முறையில் புதிய உத்தியைக் கையாளும்போது, அதுவும்கூட பணிநாடுநர்களை சில நம்பிக்கை இழக்கச் செய்யும் உளவியல் சிக்கலும் இருக்கிறது என்பதை டிஎன்பிஎஸ்சி உணர வேண்டும்.

 

– அகராதியார்.