Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்!; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”

இந்தியர்களின் தேடலால் இன்றைய தேதியில் கூகுள் தேடியந்திரத்தையே களைத்துப் போகச்செய்திருக்கிறார் ஒரு கேரளத்துப்பெண். பிரியா பிரகாஷ் வாரியார் என்ற மலையாள நடிகை, தன் கண்களால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

அதென்னவோ அரபிக்கடலோர பெண்களுக்கும் அழகுக்கும் அத்தனை பொருத்தம். அதனால்தான் வைரமுத்துவும்கூட, ‘அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே…’ என்று பாடல் எழுதியிருப்பார்.

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு கனவான விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி, ஊரெல்லம் பற்றி எரிந்தபோதுகூட, மற்றொருபுறம், மலையாள தேசத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலும், நடனமும் சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகின.

மனித மனங்களின் இரு எதிர்நிலையில் உள்ள குணாம்சமே இதற்குக் காரணம். துக்க வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், அடுத்த கணமே கொண்டாட்டத்திலும் ஈடுபடுகின்றனர் என்பதற்கு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்புதான் சாட்சி.

அதே பாணியில், இப்போது மீண்டும் ஒரு மலையாள பாடலும், அதில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியார் என்ற நடிகையின் புகைப்படமும் யூ டியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

நாளை மறுநாள் (பிப்ரவரி 14, 2018) காதலர் தினம் வருவதையொட்டி, ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி, யூ டியூப் வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘மாணிக்க மலராய பூவி…’ என்ற மெல்லிசை பாடல் ஒரு கல்லூரி / பள்ளி விழாவில் பாடுவதுபோல படமாக்கப்பட்டு உள்ளது.

பாடல் படுபயங்கரமாக ஹிட் அடித்திருக்கிறது என்பதைவிட, அந்தப் பாடல் காட்சியில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியார்தான் ரொம்பவே பேசுபொருளாகி இருக்கிறார். மன்னிக்கவும்… கூகுளில் தேடுபொருளாகி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜனசந்தடி மிகுந்த இடத்திலும்கூட, காதலிலேயே லயித்திருக்க காதலர்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடியது. அதுவும் கண்களால் நடத்தும் பரிபாஷைகளை அவர்களன்றி ஒருவராலும் அறிந்திட இயலாது. அப்படி கண்களால் பேசிக்கொள்ளும் ஒரு பரிபாஷை காட்சிதான், ‘மாணிக்க மலராய பூவி…’ பாடலிலும் இடம்பெறுகிறது.

சக மாணவன், தன் நண்பர்கள் குழாமுடன் நின்று கொண்டிருக்கிறான். மேடையில் நிகழும் இசை நிகழ்ச்சியை ஒட்டுமொத்த கல்லூரி மாணவிகளும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

நண்பர்கள் குழாமுடன் நின்றிருக்கும் அந்த மாணவன், தன் மனம் கவர்ந்த பெண்ணை நோக்கி, விழிகளின் புருவங்களை உயர்த்தி, நீ அழகாக இருக்கிறாய் என்று முதல் வினாவை எழுப்புகிறார். அதற்கு அடுத்து, என்னைப் பிடித்திருக்கிறதா? என வினவுகிறார். இதுவும் கண் புருவங்களால்தான்.

இந்த இரண்டு வினாக்களுக்கும் அந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் பிரியா வாரியார், அதே பாணியில் பதில் சொல்லியாக வேண்டும். ஏனெனில் கூட்டத்தில் இருந்து எழுந்து வரவோ, உரத்துப் பேசவோ அங்கு சூழல் இல்லை. பிரியா வாரியார், உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை இரு புருவங்களை ஒன்றன்பின் ஒன்றாக வளைத்தும், நெளித்தும், உயர்த்தியும், தாழ்த்தியும் பதில் அளிக்கிறார்.

அந்தக் காட்சியில் பிரியாவின் புருவங்கள் ஒரு ‘ஸிக்சேக் போல நெளிகிறது. அல்லது, கடலில் ஓர் அலை அமிழ்ந்தும் பின் எழுந்தும் பின் அமிழ்ந்தும் வருமே அதுபோல என்றும் சொல்லலாம்.

அந்தக்கணமே, காதலியின் இசைவு கிடைத்ததால் சந்தோஷத்தில் அந்த மாணவனின் மனமும் காற்றில் றெக்கை கட்டிப்பறக்கத் தொடங்கி விடுகிறது.

அந்த மாணவனுக்கு மட்டுமன்று; பார்வையாளர்களின் மனமும் ரங்கராட்டினம்போல் ஆகி விடுகிறது.

”கண்ணொடு / கண்இணை / நோக்கொக்கின் / வாய்ச்சொற்கள் / என்ன / பயனும் / இல” என்றான் தெய்வப்புலவன். ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், அங்கே வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போய்விடுகின்றன. அவன் சொல்லிவிட்டுப் போன கருத்தியலைத்தான், இப்போதும் சினிமாக்காரர்கள் படம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

பல படங்களில் கண்களின் பரிபாஷைக் காட்சிகள் காலாகாலமாக இடம் பெற்றிருந்தாலும், குறிப்பாக இந்தப் பாடல் காட்சியில் பிரகாஷ் வாரியாரின் கண் அசைவுகளே முற்றிலும் துல்லியமாக இதயத்தின் மொழிகளை காதலனுக்கு கடத்தி விடுவதாக கருதுகிறேன். இது என் தனிப்பட்ட அபிப்ராயம் என்றும் சொல்லலாம்.

கடந்த மூன்றே நாள்களில் யூ டியூப் வலைத்தளத்தில் 63 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை இந்தப் பாடல் காட்சி, பார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியாரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொடப்போகிறது என்றால் பாருங்களேன். இத்தனைக்கும் அவர் நடிப்பில் வெளியாக உள்ள முதல் படமும் ‘ஒரு அடார் லவ்’தான். சமூக வலைத்தளங்களில் பிரியாவுக்கு ஒரே வாழ்த்து மழைதான்.

காதலர் தினத்தை ஒரு வாரத்திற்குக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் வைத்து காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். 12ம் தேதியான இன்று ‘கட்டிப்பிடி தினம்’ (ஹக் டே) கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பிரகாஷ் வாரியார் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் காட்சி சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே டிரெண்ட் ஆகி உள்ளது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான்தான் இந்தப் பாடலுக்கும் இசையமைத்து உள்ளார்.

கூகுள் தேடியந்திரத்தில் அதிகமானோர் தேடப்படும் நபர் யாரென்றால் பிரியா வாரியார்தான். இதே நிலை இன்னும் சில நாள்களுக்கு தொடர்ந்தாலும் ஆச்சர்யமில்லை. பிரியா வாரியார், கண்களால் ரசிகர்களை கைது செய்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

 

– பேனாக்காரன்.