சேலத்தில் கடந்த பிப்ரவரி 9, 2019ம் தேதியில் உதயமானது, ‘ஏஸ் பவுண்டேஷன்’ (ACE Foundation). இது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பேரமைப்பு எனலாம். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பதினைந்து நாள்களில், அடுத்தக்கட்ட நகர்வையும் புலிப்பாய்ச்சலில் முன்னெடுத்துள்ளது.
ராமநாதபுரம் மண்டலத்தில்,
இதுவரை ‘தான் பவுண்டேஷன்’
(DHAN Foundation) கட்டுப்பாட்டில்
இயங்கி வந்த சிகரம், சங்கமம்,
நெய்தல் (ராமநாதபுரம்), புதுகை (புதுக்கோட்டை)
மற்றும் முத்துநகர் (தூத்துக்குடி)
ஆகிய ஐந்து வட்டாரக் களஞ்சியம்
மகளிர் சுயஉதவிக்குழுக்கள்,
புதன்கிழமையன்று (பிப்ரவரி 20, 2019)
ஏஸ் பவுண்டேஷனில்
இணைந்து உள்ளன.
இவை வெறுமனே ஐந்து வட்டாரங்கள் என்று குறைத்துச் சொல்லிவிட இயலாது. ஐந்து வட்டாரங்களின் வாயிலாக 20 ஆயிரம் பெண்களை உள்ளடக்கிய, இன்னும் சொல்லப்போனால் அத்தனை பேரின் குடும்பங்களை உள்ளடக்கிய 1500 குழுக்களைக் கொண்டது எனும்போது, ஏஸ் பவுண்டேஷன் மீது தானாகவே கவனம் குவிகிறது.
மக்களவை தேர்தல் நெருக்கத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணியில் சேர்வது சடங்காகிவிட்ட இன்றைய சூழலில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ‘தான்’ பவுண்டேஷனில் இருந்து வெளியேறி, புதிய அமைப்பில் இணைய காரணம் என்ன? ஏன் இந்த பேரெழுச்சி? என்று, இணைப்புக்கான பணிகளை முன்னெடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனிகுமாரிடம் பேசினோம்.
”தான் பவுண்டேஷனின் முக்கிய
கொள்கையே தற்சார்புடன் இயங்க
வேண்டும் என்பதுதான். அதற்கான
நேரம் எங்களுக்கு வந்துவிட்டது.
இப்போது சுயசார்புக் கொள்கையுடன்
தனி அமைப்பில் இணைந்து இயங்கத்
தொடங்கி இருக்கிறோம்.
‘தான் பண்டேஷன்’ அப்படியொரு
நெருக்கடியை, அதன் பணியாளர்கள்
மீதும், வட்டாரத் தலைவிகள்
மீதும் திணித்தது.
சாதாரண மீனவப்பெண்கள்தான்
எங்கள் பகுதியில் மகளிர்
சுயஉதவிக்குழுக்களில் அதிகளவில்
உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
என்னதான் நன்மை விளைவிக்கக்
கூடியது என்றாலும், அவர்களிடம்
கேப்பை மாவு வாங்கச்சொல்லியும்,
முளைப்புத்திறன் குறைந்த விதைகளை
வாங்கச் சொல்லியும் கட்டாயப்படுத்துவது
பலரும் விரும்பவில்லை. அதனால்
பல மகளிர் குழுக்கள் கலைந்தன.
பல இடங்களில் சும்மா கிடைக்கும்
காலண்டரைக்கூட, தான் பவுண்டேஷன்
25 ரூபாய்க்கு தலையில் கட்டியது.
இதுமட்டுமில்லாமல், வளர்ச்சி நிதி என்ற பெயரில் லட்சக்கணக்கில் ‘தான்’ பவுண்டேஷன் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தது. அப்படியானால் அந்தப் பணத்தைக் கொண்டு, எங்களுக்கு அதாவது இங்குள்ள மகளிர் குழுக்களுக்குதான் நன்மை செய்திருக்க வேண்டும். இங்கு களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தான் பவுண்டேஷன் அப்படி ஏதும் செய்யவில்லை. வளர்ச்சி நிதியை வசூலித்துக் கொடுப்பவரை மட்டுமே நல்லவன் என்றது. கேள்வி கேட்கும் உரிமையை நசுக்கியது.
தலைமையிடத்தில் அமர்ந்து கொண்டு, பொதுப்பணத்தை தவறாக கையாள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அதிலிருந்து பிரிந்து ஏஸ் பவுண்டேஷனில் இணைந்தோம்,” என பொரிந்து தள்ளினார் பழனிகுமார். தான் பவுண்டேஷனுக்காக நேரம் காலம் கருதாமல் உழைத்திருப்பார் என்பது அவருடைய ஆதங்கத்திலேயே உணர முடிந்தது.
இணைப்பு விழாக்கள் இத்தோடு முடிந்து விடுமா அல்லது தொடருமா? என ஏஸ் பவுண்டேஷனின் ஆலோசகர்களான மதுரையைச் சேர்ந்த ராஜன், காயத்ரி ஆகியோரிடம் கேட்டோம்.
”’தான் பவுண்டேஷனில்’ இப்போது
பிளவு ஏற்படக் காரணமே, அந்த
அமைப்பு அடுத்தடுத்து எடுத்த
பல தவறான முடிவுகள்தான்.
உதாரணமாக, சென்னையில்
உழவர்களிடம் நேரடியாக காய்கறி
கொள்முதல் செய்யும் திட்டம்
தொடங்கப்பட்டது. சீசன் இல்லாத
காலங்களில் இடைத்தரகர்களிடம்
காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.
இதன்மூலம் மைய நோக்கம்
கெட்டுப்போனதுடன், இந்தத் திட்டத்தால்
களஞ்சியம் மகளிர்
சுயஉதவிக்குழுக்களுக்கும் எந்த
லாபமும் கிடைக்கவில்லை.
அதேபோல, நெதர்லாந்து நாட்டு நிதியுதவியுடன் கடலூரில் பால் பண்ணை திட்டம் தொடங்கப்பட்டது. ஓர் ஆய்வில், கடலூர் மாவட்டம் பால் பண்ணை தொழிலுக்கு உகந்தது அல்ல என்று தெரிய வந்தது. ஆனாலும், அங்கே தொடர்ந்து பால் பண்ணையை பெயரளவுக்கு நடத்தி வருகிறது. இதன்மூலம் மக்கள் பணம்தான் விரயம் ஆகிறது.
இந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியும், ‘தான் பவுண்டேஷன்’ நிர்வாகம் கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை. அப்படியான சூழலில் தொடங்கப்பட்டதுதான் ஏஸ் பவுண்டேஷன். அவர்கள் செய்து வந்த எந்த ஒரு சிறு தவறும், ஏஸ் பவுண்டேஷனில் நிகழ்ந்துவிடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். அப்படியான நம்பிக்கையை முன்பு பணியாற்றிய அந்த அமைப்பில் இருந்தும் நாங்கள் மெய்ப்பித்திருக்கிறோம்.
அதனால்தான் பல மண்டலங்களில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஏஸ் பவுண்டேஷனில் ஆர்வத்துடன் வந்து இணைகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களும் ஏஸ் பவுண்டேஷனில் இணைவது குறித்து எங்களுடன் ஆலோசித்து வருகின்றன,” என்கிறார்கள்.
‘செய்!’ என்பதைவிட ‘செய்வோம்!’ என்பதன் வலிமையை ஆழப்புரிந்து வைத்திருக்கிறது ஏஸ் பவுண்டேஷன்.
– பேனாக்காரன்