Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத ஒரு வர்க்கத்தினரின் வாழ்வியலும், அவர்களின் காதலையும் மண் மணத்துடன் சுமந்து வந்திருக்கிறது, ‘தொரட்டி’.

 

கிராமங்களில் வழமையான சொல்வழக்கு ஒன்று உண்டு. நற்குடியில் பிறந்த ஒருவர் திடீரென்று தீய வழியில் சென்று சீரழிகையில், ‘அவன் என்ன பண்ணுவான் பாவம்….சேருவரிசை சரியில்ல…’ என்பார்கள். அப்படி கூடா நட்பால் கேடாய் முடிந்த இளைஞனை விரும்பி மணக்கும் அவனுடைய மனைவி, கணவனை திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்தினானா? எப்படியும் திருத்திவிடலாம் என நம்பி வந்த அவளுக்கு நேர்ந்தது என்ன? கணவனின் சேக்காலிகளுக்கு என்ன நடந்தது? என்பதை காதல், நட்பு, துரோகம், வன்மம் கலந்து, கிராமிய அழகியலுடன் பேசுகிறது, தொரட்டி.

ராமநாதபுரம் மாவட்டம்தான் கதைக்களம். 1980களில் கதை நகர்கிறது. அறுவடை முடிந்த பிறகு விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பழக்கம், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. கிடையில் அடைக்கப்பட்ட ஆடுகள் அந்த நிலத்தில் போடும் புழுக்கைகளும், சிறுநீரும்தான் அந்த மண்ணை வளமாக்குகிறது. மண், மலடாகி விடாமல் இருக்க தமிழன் பின்பற்றி வந்த இயற்கை விவசாய முறை அது. கிடை போடும் கீதாரிகளுக்கு நிலத்தின் உரிமையாளர் கூலியும் கொடுத்து அனுப்புவார்.

 

அப்படி ஆட்டுக்கிடை போடும் கீதாரிதான் நல்லையா (அழகு). அவன் மனைவி பேச்சி, ஒரே மகன் மாயன் (ஷமன் மித்ரு). அதே ஊரில் நல்லையாவின் தூரத்து உறவுக்காரர் ஒருவரும் கிடை போட்டிருக்கிறார். அவருடைய ஒரே மகள் செம்பொண்ணு (சத்யகலா). அவளுக்கோ மாயன் மீது தீராக்காதல். நில உடைமையாளர்களை கீதாரிகள் சார்ந்து இருப்பதும், பூமியை வளப்படுத்தும் கீதாரிகளை நில உரிமையாளர்கள் சார்ந்து இருப்பதும் என இருதரப்பு சுமூகமான உறவுகளை காட்சிப்படுத்துகிறார் இயக்குநர் மாரிமுத்து. வெள்ளந்திப் பேச்சும், சத்தியத்திற்குக் கட்டுப்படுவதும் கிராமிய மக்களுக்கே உரிய குணாதிசயங்களாக காட்டப்படுகின்றன.

 

ஆனால் அங்கேயும் உண்டு கொழுத்த நில உடைமையாளர் ஒருவரிடம், கிடை போட்டதற்கு கூலிப்பணம் கேட்பார் நல்லையா. அவரோ, ”உன் ஆடுங்க போட்ட புழுக்கை என் நிலத்துக்குச் சொந்தமானது. ஆனா அந்த ஆடுங்க என் நெலத்துல இருந்த செடி செத்தைங்கள தின்னதுனாலதானே புழுக்க போட்டுச்சு,” என்று கூறி, நல்லையாவை அடித்து விரட்டி விடுவார். இப்படி, உழைக்கும் வர்க்கத்தினரை சுரண்டி பிழைப்போரையும் காட்சிப் படுத்துகிறார் இயக்குநர். அதனால் மனம் நொந்துபோன நல்லையா, அந்த நிலக்கிழாரைப் பழிவாங்க அவருடைய நிலத்தில் பானையை புதைத்து அதில் பாலை ஊற்றிவைத்து, நிலத்தில் புல் பூண்டுகள்கூட முளைக்க க்கூடாது என வேண்டிக்கொள்ளும் சடங்கையும் பதிவு செய்திருக்கிறார்.

ஒருநாள் மாயன் கிடைக்கு காவல் இருக்கும்போது, மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கே ஆடு திருட வருகிறது. அவர்கள் களவாடிய ஆடு, தான் ஆசையாக வளர்க்கும் செவலை எனக்கூறும் மாயன், அதற்குப் பதிலாக தன் கிடையில் இருந்து வேறு ஓர் ஆட்டைப் பிடித்துத் தருகிறார். மற்றொரு சமயத்தில், நல்லையாவையும், மாயனையும் ஆபத்தில் இருந்து அந்த திருட்டு கும்பல் காப்பாற்றுகிறது.

 

இதையடுத்து மாயனும் அந்த திருட்டு கும்பலுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறான். செந்தட்டி (சுந்தர்ராஜ்), ஈத்துப்புளி, சோத்துமுட்டி ஆகிய மூவருமே சின்னச்சின்ன திருட்டு குற்றங்களில் ஈடுபடுவதும், சாராயம் குடிப்பதுமாக உல்லாசமாக பொழுதைக் கழிக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்த மாயனும் நாளடையில் குடிக்கு அடிமையாகி, தன் சொந்த கிடையில் இருந்தே ஆடுகளைத் திருடி விற்று, சேக்காலிகளுடன் சேர்ந்து உல்லாசமாக இருக்கிறான்.

 

இந்த நிலையில்தான் மாயனுக்கு கல்யாணம் செய்து வைக்கின்றனர் அவனது பெற்றோர். அவன் மீது தீராக்காதலுடன் இருக்கும் செம்பொண்ணு, தன் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி மாயனை மணந்து கொள்கிறாள். அதன்பிறகும் திருட்டு சேக்காலிகளுடன் மாயன் கூத்தடித்தானா? அல்லது திருந்தி வாழ்ந்தானா? செம்பொண்ணுவின் வாழ்வு என்ன ஆனது? என்ற வினாக்களுக்கு யதார்த்தமான திரைமொழியுடன் பதில் சொல்கிறார் இயக்குநர் மாரிமுத்து.

 

நாயகன், நாயகி, வில்லன் கும்பல் என பிரதான கதை மாந்தர்கள் எல்லோருமே முற்றிலும் புது முகங்கள். அவர்களை புதுமுகங்கள் என்று சொல்லிவிட முடியாத வகையில் மிக நேர்த்தியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் கீதாரிகளின் வாழ்வியலை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதனாலேயே ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகர்வதுபோல தோன்றுகிறது.

 

இரண்டாம் பாதி அப்படியே நேர் எதிரான திசையில் பயணிக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியை நாயகி செம்பொண்ணு தன் அற்புதமான நடிப்பாற்றலால், செம்மண்ணில் கலந்த மழை நீர்போல திரை ரசிகர்களை ஈர்த்துக் கொள்கிறார். செம்பொண்ணு, இதழ்களைச் சுழித்து நாவல்பழங்களை ருசிக்கையில் ரொம்பவே ரசிக்க வைக்கிறார்.

பல இடங்களில் நாயகி பேசும் வசன வசனங்களும் அபாரம். ”டேய் மாயா…தாலிதான் ஏறிடுச்சே…இனிமே எங்க போயிடப்போறானு லேசுல நினைச்சுடாத. தூக்கிப்போட்டுட்டு நாலு ஆட்ட ஓட்டிக்கூட பொழச்சுக்குவேன்…,” என எச்சரிக்கும்போதும், ”ஆட்டுக்காரனுக்கு அழகே அவன் ஒடம்புல வீசுற ஆட்டுக்கவுச்சதான். அந்த கவுச்ச உன்கிட்ட எப்போ வீசுதோ அப்பதான் என் முதுகுல மண்ணு படும்… முந்தி சேல மண்ணுல விழும்,” என நாயகனுக்கு புத்தி சொல்லும்போதும், படத்தின் மற்ற எல்லாரையும்விட அதிகளவில் ரசிகர்களை தன்வயப்படுத்தி விடுகிறார்.

 

‘சவுக்காரம் போட்டு…’ பாடலினூடாக நாயகிக்கும் நாயகனுக்குமான ஊடலையும் அதன் பிறகான கூடலையும் இடக்கரடக்கலாக காட்சிமொழிப் படுத்தி இருப்பது இயக்குநரின் ரசனையைக் காட்டுகிறது.

 

இன்னொரு காட்சியில்
நாயகி தன் அத்தையிடம்,
”அயித்த…பக்கத்து ஊரு டூரிங் டாக்கீசுல
எம்ஜியாரு படம் போட்டுருக்காங்கனு
சொன்னீங்கள்ல. அந்தப்படத்த
மாமனும் நீங்களும் இன்னிக்கு ராத்திரி
ரெண்டாவது ஆட்டம் பார்த்துட்டு
விடியகாலைல கோழி கூப்பிட
சாவகாசமா வந்து சேருங்க,” எனக் கூறுவாள்.
அதற்கு நாயகனின் தாய் பேச்சி,
”அந்தப் படத்த முன்னாடியே
பாத்துட்டோம் தாயீ…” எனச்சொல்ல,
”ம்…நீங்க பார்த்துட்டீங்க…
இங்க இன்னிக்குதான்…” என
செம்பொண்ணு கூறுவாள்.
இப்படி தான் சொல்ல வந்த சேதி ஒன்றை,
இடக்கரடக்கலாக சொல்லி புரியவைப்பது
கலப்பில்லாத கிராமிய நயம்.
அப்போது பேச்சி,
”ஹூம்….இன்னும் எத்தனவாட்டிதான்
அந்த எம்ஜியாரு படத்தையே பார்க்கறதோ…”
என்று புலம்பியபடியே
அங்கிருந்து கிளம்புவார்.

 

இதே பாடல் காட்சியில்,
கிராமங்களில் பெரிதும் விரும்பப்படும்
சேமியா ஐஸ் விற்றுக்கொண்டு
ஒருவர் வருவார். அதை ஆசையுடன்
நாயகன் வாங்கித்தர, நாயகி அதை
ஏனோ தூக்கிப்போட்டு விடுகிறார்.
தலைவியின் மனம் கோணாமல் இருக்க
அவனும் அந்த குச்சி ஐஸை
வீசி எறிகிறான்.
ஆனாலும் தலைவியை
குஷிப்படுத்த வேண்டுமே…
இரண்டு புளியம்பழங்களைப்
பறிக்கும் நாயகன்,
அதன் மேலோட்டை மட்டும்
லேசாக தட்டி எடுத்துவிட்டு அதனுள்
ஆட்டுப்பாலை கறந்துவிட்டு,
பால் புளியம்பழத்தைக் கொடுக்க,
நாயகி அதை சப்புக்கொட்டி
ருசித்துத் தின்னும் ஒரு காட்சியே
படைப்பூக்கத்திற்கு ஆகச்சிறந்த
சான்றாக கொள்ளலாம்.
அந்தக் காட்சியில் நாயகியின்
முகபாவங்களையும் ரசிக்காமல்
இருக்க முடியாது.

 

பாதை மாறிப்போகும்போது கணவனை,
‘டேய் மாயா…’ என குரலை உயர்த்தி
கண்டிக்கும்போதும்,
குட்டி ஆடு கணக்காக தன்னையே
சுற்றி வரும்போது முந்தானையால்
முடித்து வைத்துக்கொண்டு கொஞ்சும்போதும்,
‘ரோசமே இல்லாம சோத்துக்காக
இன்னும் உக்காந்து இருக்கீங்களேடா
களவாணி பயலுகளா…’ என
விரட்டும்போதும் செம்பொண்ணாகவே
வாழ்ந்திருக்கிறார் நாயகி சத்யகலா.
தமிழ்த்திரைக்குக் கிடைத்த
ஆகச்சிறந்த புதுவரவு.

 

கிட்டத்தட்ட வழக்கொழிந்த சொல்தான், தொரட்டி. பலர் அறிந்திடாத உப கருவிகளுள் ஒன்று. கிராமங்களில் ஆடு மேய்ப்பவர்கள், மரங்களில் இருந்து இலைதழைகளை அறுத்துப் போடுவதற்காக பயன்படுத்தும் கருவிதான இந்த தொரட்டி. நீளமான குச்சியில் கதிர் அறுக்கும் அரிவாள்போன்ற கருவி இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். சில பகுதிகளில் அதை ‘வாங்கருவா’ என்றும் சொல்வதுண்டு. இந்த தொரட்டியும் முக்கிய பாத்திரமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. நாயகனின் குறியீடும் அதுதான். அதற்கான விளக்கமும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

 

வில்லன் பாத்திரத்தில் வரும் மூவருமே சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். இவர்களில் செந்தட்டியாக வரும் சுந்தர்ராஜிக்கு, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி பாத்திரம். உடல்மொழிகளாலேயே மிரள வைக்கிறார். திருட்டு குற்றத்தில் ஈடுபடும் அந்த கும்பலை காவல்துறையில் காட்டிக்கொடுத்ததற்காக நாயகியை வஞ்சம் தீர்ப்பதிலேயே குறியாக இருக்கும் செந்தட்டிக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு. திருட்டு கும்பலில் சோத்துமுட்டி பாத்திரத்தில் வருபவரும் கவனிக்க வைக்கிறார். நாயகனின் அப்பாவாக வரும் அழகு, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவருடைய திரைவாழ்வில் தொரட்டி வாழ்நாளில் முக்கிய படமாக இருக்கும்.

 

கிராமத்தின் மிகையற்ற அழகை சில காட்சிகளில் பருந்து பார்வையில் காட்டியிருப்பதும், ஊரில் இருக்கும் ஒரே ஊருணி, கம்பங்கதிர்களின் நடுவில் நாயகி, மடியை முட்டி முட்டி பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி, கிராமத்துக் கோயில்கள் என ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர். அவரின் கேமரா கோணங்கள் மிக சிறு பட்ஜெட்டில் தயாரான இந்தப்படத்தை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருப்பதை உணர முடிகிறது.

 

படத்தை எந்த இடத்திலும் தொய்வடையாமல் கொண்டு சென்றதில் எடிட்டர் ராஜாமுகமதுவின் பங்களிப்பு அளப்பரியது. அத்தனை கச்சிதமாக கத்திரி போட்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இசையமைப்பாளர் வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் எல்லா பாடல்களுமே மீளவும் கேட்கத்தூண்டுகின்றன. அதிலும், விஜய்பிரகாஷின் குரலில் ஒலிக்கும், ‘சவுக்காரம் போட்டு…’ பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். சொக்கிப் போவீர்கள். ‘குள்ளநரி கூட்டத்தில் சிக்கிக்கிட்ட குறும்பாடு’ பாடல், கதையின் முன்னோட்டமாக இருந்தது. ‘உசுர உருக்கி எலும்ப நொறுக்கி’ பாடல், காதல், ஊடல், கூடலைச் சொல்கிறது.

 

பின்னணி இசை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜித்தின் ரோஷன் அதகளப்படுத்தி இருக்கிறார். அவருக்கும் இது முக்கிய படமாக இருக்கும் என்று சொல்லலாம்.

 

நீண்ட காலத்திற்குப் பிறகு கவிஞர் சினேகனிடம் இருந்து மண்வாசம் கமழும் சொற்களுடன் அழகான பாடல்கள் வந்திருக்கின்றன. 3000 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கும் சினேகனுக்கு, இந்த படத்தில் வரும் ‘சவுக்காரம் போட்டு துவச்சா என்ன சட்டுனு நானும் சாயம் போனேன்…’ என்ற பாடல் காலத்திற்கும் நிற்கும்.

 

”தொட்டி ஆடாக பட்டிக்குள்ளார
என்ன சுத்தத்தான் வெச்சிட்டுப் போறா
சட்டிக்குள்ளார அகப்பைப்போலத்தான்
எதையோ தேடத்தான் வெச்சிட்டுப் போறா
ஆட்டுப்புழுக்க வாசம்கூட
அரும்புமல்லியா மணக்குதடி

உன் முந்தியில என் உசுரத்தான்
முடிஞ்சிட்டு போறீயேடீ
நான் பந்தியில..
என்ன கிடைச்சோறா
பொங்கித்தான் தாரீயேடீ…

பொழங்காத பாசத்த
கலங்காம தந்தீயே
நீ….எஞ்சாமி….”

 

என கீதாரிகளின் வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளைக் கோத்து, எளிமையான உவமைகளால் பாமாலை சூட்டியிருக்கிறார் சினேகன். இந்தப் பாடலின் வழியாக நம்மையும் கிராமத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார் சினேகன். கிடைச்சோறு, அகப்பை ஆகிய சொற்களெல்லாம் நிச்சயமாக இப்போது முப்பதுகளை நெருங்குவோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

படத்தின் முடிவு யூகிக்கக்கூடியதுதான் என்றாலும், படம் பார்க்கும்போது எனக்கு வேறு சில யூகங்களும் இருந்தன. நாயகியை பழிவாங்கும் நோக்கத்துடன் திரியும் செந்தட்டியும் கூட்டாளிகளும், தொரட்டியாலேயே துடைத்து எறியப்படுவார்கள் என எதிர்பார்த்து இருந்தேன். அல்லது, யாரை பழிதீர்க்க கொல்ல வருகிறார்களோ அவளது கையாலேயே சாப்பிட வரும் நாயகனின் சேக்காலிகள் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ ஆக கருதி மனம் மாறுவதுபோல் நெகிழ்ச்சியாக இப்படத்தை முடித்திருக்கலாமோ என்பதும் என் யூகமாக இருந்தது.

 

ஆனாலும் படத்தின் முடிவு, மாயனின் கோணத்தில் அமைந்திருப்பது சரிதான். ஆனாலும் வாயில்லா ஜீவன்களான ஆடுகளை நேசிக்கும் அவன், வாயில்லா செந்தட்டியையும் அவனது கூட்டாளியையும் மன்னித்துவிட்டுப் போகிறான். இருந்தாலும், கெட்டவர்கள் அழிவதுதான் இயற்கையின் நியதியென ஒரு படைப்பாளியாக இயக்குநர் கருதியிருக்கலாம். அதனால் யாரும் யூகித்திராத ஒரு பாத்திரத்தின் மூலம் செந்தட்டிக்கும் கூட்டாளிக்கும் தீர்ப்பு எழுதியிருப்பதும் வரவேற்கக் கூடியதே.

 

”தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து” (குறள்: 828)

 

எனப் பாடுகிறான் வள்ளுவன்.

 

அந்த குறளை அடிப்படையாக வைத்து நெஞ்சள்ளும் காட்சி மொழிகளால் நம்மையும் தொரட்டி போட்டு இழுக்கிறது இந்த தொரட்டி.

 

– வெண்திரையான்

எண்ணங்களைப் பகிர: puthiyaagarathi@gmail.com / 9840961947