ஒன்றே முக்கால் அடியில் உலகையே அளந்த வள்ளுவன்தான், காதலின் உச்சமும் ஆழமும் தொட்டவன் என்றால் மிகையாகாது. 1330 பாக்களில், 250 பாடல்களே காமத்துப்பாலில் இடம் பெற்றிருந்தாலும், வள்ளுவனின் உச்சபட்ச கற்பனை வளத்தை அதில்தான் காண முடியும் என்பது என் கருத்து.
மாந்தர்களிடையே காதல் பூக்கும் தருணம், காதலர்களுக்குள் ஏற்படும் ஊடல், பின் கூடல் ஆகிய உணர்வுகளை மிக நுட்பமாக, உளவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதி இருப்பானோ என்றுகூட தோன்றுகிறது. காதலுக்கு வள்ளுவன் வகுத்தளித்த கோட்பாடுகள் இன்றும் மாறவே இல்லை. உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.
இப்போதுபோல், சங்க காலத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பார்களா? எனத்தெரியாது. ஆனாலும், அவன் காலத்திலும் சமூகத்தை சீரழிக்கக் கூடியதாகத்தான் மதுபானம் இருந்திருக்கிறது என்பதை ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தின் மூலம் அறியலாம்.
மதுக்கடைகளைப் பற்றி பேசி, ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளாவானேன். விஷயத்திற்கு வருகிறேன்.
கள்ளை (மது) பருகினால்தான் போதை தரும். ஆனால், இந்தக் காதல் இருக்கிறதே….அதைப்பற்றி நினைத்தாலே போதும், ஒருவித மயக்கத்தைக் கொடுக்கும் என்கிறான் வள்ளுவன். இக்கருத்தை வலியுறுத்தி ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்தில்,
”உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று” (109:1090)
எனப்பாடுகிறான்.
இன்னும் சற்றே மேலே சென்று, கள்ளை விட காமம் (காதல்) இன்பமானது என்கிறான். ‘நினைந்தவர் புலம்பல்’ அதிகாரத்தில்,
”உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது” (121:1201)
என்கிறான்.
இது, உண்மையா? இல்லையா? என்பதை காதலிப்பவர்களும், காதலித்தவர்களும் அறிவர். அதனால்தான் வள்ளுவன், காதலையோ, காதலியையோ கண்களால் பார்த்தபோது மட்டுமல்ல, நினைத்துப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் ஒருவித மயக்கமும், கிலேசமும் உருவாகிறது என்கிறான். இந்தக் கருத்தை, ‘புணர்ச்சி விதும்பல்’ அதிகாரத்தில் மேலும் ஆணித்தரமாக அறைகிறான்.
”உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு” (129:1281)
என்ற பாடலின் கருத்தைத்தான், ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் ‘புரிதலை’, இப்போதெல்லாம் ‘கெமிஸ்ட்ரி’ என்கிறார்கள்.
கள்ளுண்பது என்பது ஆகப்பெரும் சமூகக்கேடு. ஆனாலும், மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு போதை இருந்தே ஆக வேண்டும் என்பதும்கூட வள்ளுவனின் சிந்தனையாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் கள்ளால் உண்டாகும் போதையைக் காட்டிலும் மாந்தர்க்கு வேறு போதையை கற்பிக்க எண்ணியிருக்க வேண்டும். கள்ளைக் காட்டிலும் காதலிலும் காமத்திலும் மட்டுமே வேறெவற்றிலும் கிடைக்காத, திகட்டாத போதை பொதிந்திருக்கிறது என்பதை வள்ளுவன் மிக வலுவாகவும், உளவியல் ரீதியாக நம்புவதாகவே பார்க்கிறேன்.
அதற்காக, ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று யாரும் சுவர் ஏறி குதித்துவிட வேண்டாம். அவரவர், அவரவர் தலைவி / தலைவனோடு காதல் கொள்வதும் களிப்புறுவதுமே ஒழுக்கம். அதனால்தான் பிறன்மனை நோக்காமையை அவன் பேராண்மை என்கிறான்.
இங்கே காமக்கடலை நீந்திக் கரைகண்டவர் எவருமே இருக்க முடியாது என்பது அவன் முடிபு. எப்படி நூல்களைப் படிக்க படிக்க நம்முடைய அறியாமை வெளிப்படுகிறதோ, அதுபோல சேயிழையுடன் கூடல் கொள்ளும் ஒவ்வொரு கணமும் புதிது புதிதாக காதலையும், கூடல் இன்பத்தையும் உணர நேர்கிறது என்பதை,
”அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு” (1110)
என்கிறான், ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகாரத்தில்.
வள்ளுவன் பார்வையில் காதல் என்பது ஒரு நோய். இதை அவன் பல அதிகாரங்களில் சொல்கிறான். காதல் அரும்பாகி, மலராகி, காயாகி, கனியாகி, பின்னர் திருமணத்திலும் முடித்து வைக்கும் வள்ளுவன், ‘அளவுக்கு மிஞ்சினால் காதலும் கசக்கும்’ என்பதையும் சொல்லத் தவறவில்லை.
தலைவன், தலைவியிடம் எத்தனைதான் நெருக்கம் இருந்தாலும் அவர்களுக்குள் சின்னச்சின்ன செல்ல சண்டைகள் இருக்க வேண்டும். ஊடல் இருந்தாத்தானய்யா அந்த காதலுக்கே அழகு! நம்மில் பலர், கல்யாணம் போன்ற விருந்துகளில் பாயசத்துடன் அப்பளத்தை கொஞ்சம் நொறுக்கிப்போட்டு சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். இனிப்பும் உப்பும் கலந்த அது ஒரு வித்தியாசமான ருசி. சும்மா, இனிப்பையே தின்ன முடியுமா? முடியாதல்லவா? அதற்காகத்தான் கொஞ்சம் ஊடல், நிறைய கூடல் வேண்டும் என்கிறான் வள்ளுவன்.
‘ஊடலுவகை’ என்ற அதிகாரத்தில்,
”ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
என்கிறான்.
பாருங்கள்…ஊடலைக்கூட அவன் உவகையாகத்தானே சொல்லி இருக்கிறான். ஆனால், நிகழ்காலத்தில் ஊடல், கடைசியில் மோதலில் முடிந்து, நீதிமன்ற வாசல் வரை நீண்டு விடுவதுதான் காலத்தின் கோலம்.
பொய்யாமொழியனின் இத்தகைய கருத்துகளை ஆங்காங்கே தொட்டு, திரை இசையில் வெகுசன ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார், ‘திரைக்கவித்திலகம்’ மருதகாசி.
மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் திறன் படைத்த மருதகாசி, நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவருடைய பாடல்களில் வள்ளுவனின் சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். அதற்கு இந்தப்பாடலும் விதிவிலக்கல்ல.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடிப்பில், 1968-ம் ஆண்டு வெளியான படம், ‘தேர்த்திருவிழா’. எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில், கவிஞர் மருதகாசி எழுதிய, ”சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு; சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு” என்ற பாடல் அப்போது ரொம்பவே பிரபலம். பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆகிய இருவரின் நடனமும் வெகு இயல்பாக இருக்கும். கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.சவுந்தர்ராஜன் – பி.சுசீலா ஆகியோர் பாடியிருந்தனர்.
நாம் ஏற்கனவே சொன்னதுபோல் வள்ளுவனின் கருத்துக்களோடு ஒத்துப்போகும் கவிஞர் மருதகாசியின் மேற்சொன்ன பாடல் வரிகள் இதோ….
ஆண்: சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண்: சிங்கார கைகளில் என்னைக் கட்டு
நெஞ்சை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
ஆண்: இது காதல் நாடக மேடை
பெண்: விழி காட்டுது ஆயிரம் ஜாடை
ஆண்: இங்கு ஆடலுண்டு
பெண்: இன்ப பாடலுண்டு
ஆண்: சின்ன ஊடலுண்டு
பெண்: பின்னர் கூடலுண்டு
ஆண்: மது உண்டால் போதையைக் கொடுக்கும்
பெண்: அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
ஆண்: தன்னைத் தான் மறக்கும்
பெண் அது போர் தொடுக்கும்
ஆண்: இன்ப நோய் கொடுக்கும்
பெண்: அது போர் தொடுக்கும்
ஆண்: இங்கு தரவா நான் ஒரு பரிசு
பெண்: அதை பெறவே தூண்டுது மனசு
ஆண்: ஒன்று நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய்
பெண்: உண்ண தேன் கொடுப்பேன் என்னை நான் கொடுப்பேன்
(சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு…)
– இளையராஜா சுப்ரமணியம்
E-mail: selaya80@gmail.com
Mobile: 9840961947