Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இவள் புதியவள்: ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

”பெண்கள் சுதந்திரமாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று இருக்க வேண்டும் என்றுதான் இஸ்லாத் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்களை ஆண்கள் சமுதாயம் வளர விடுவதில்லை,” என பொறி பறக்கிறார் உமைபானு.

மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு செயல்படும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளராக, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருந்து வரும் உமைபானு, இன்றைய தேதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற முஸ்லிம் சிறுபான்மை பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் எனலாம். தவிர, அல் அமாநாத் சோஷியல் அன்டு சாரிட்டபுள் டிரஸ்டின் தலைவராகவும் உள்ளார்.

பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றதாலோ என்னவோ, முஸ்லிம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய ஊக்கியாகவும் இருந்து வருகிறார். அமைப்பின் சேவைகள், பெண்கள் அரசியல் குறித்தும் தைரியமாக பேசினார். அவர் சொல்கிறார்…
என் கணவர், பாஷா. ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.

எனக்கு சபீனாஸ், ஷாமீனாஸ்னு இரண்டு மகள்கள். பொருளாதாரம் படித்துவிட்டு, வீட்டில் சும்மா இருக்க மனமில்லாததால், சின்னதாக துணிக்கடை தொடங்கலாம் என முடிவு செய்தோம். அதன்பின், கடந்த 2011ம் ஆண்டு சேலம் முதல் அக்ரஹாரத்தில் ‘பிரின்சஸ் அன்டு குயின்ஸ்’ என்ற பெயரில் துணிக்கடையை தொடங்கினோம். முன்னாள் மேயரான என் தோழி ரேகா பிரியதர்ஷினிதான் தொடங்கி வைத்தார்.

தொழிலில் இல்லாத மனநிறைவு எனக்கு சமூக சேவையில்தான் கிடைக்கிறது. முஸ்லிம் பெண்கள் மேம்பாட்டுக்காக 1972-ம் ஆண்டிலேயே ஒரு சொஸைட்டியை அரசு தொடங்கியது. என்ன காரணத்தாலோ அந்த சொஸைட்டி பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவே இல்லை.
இந்த நிலையில், 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போதுதான் மீண்டும் அந்த சொஸைட்டிக்கு புத்துயிர் கிடைத்தது. அப்போது அந்த அமைப்பை முனைப்புடன் செயல்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுமுதல், இன்று வரை சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறேன். இது, தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு. தவிர, அல்.அமாநாத் சோஷியல் அன்டு சாரிட்டபுள் டிரஸ்டும் தனியாக நடத்தி வருகிறேன்.

இந்த இரு அமைப்புகள் மூலமாகவும் பொருளாதாரத்தில் நலிவுற்ற, கணவனை இழந்த முஸ்லிம் பெண்களுக்கு தையல் கலை, ஆடை வடிவமைப்பு, எம்பிராய்டரிங், காகித கப், பாக்குமட்டை தட்டுகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை கட்டணமின்றி வழங்கி வருகிறோம்.
ஜங்ஷனை சேர்ந்த ஹாஸீரா பானுவுக்கு வெளி உலகமே தெரியாது. ஏழைக்குடும்பம். அவரும் தொழில்திறன் பயிற்சியில் கலந்து கொண்டு, இன்றைக்கு சொந்தமாக பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர், இப்போது 10 பேருக்கு வேலை வழங்கும் நிலையில் வளர்ந்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி மற்ற மத பெண்களுக்கும் சுயதொழில் பயிற்சி அளிக்கிறோம். கணவரை இழந்த தீபா என்பவர், பயிற்சியின் மூலம் இப்போது சொந்தமாக கார்மென்ட் தொழில் செய்து வருகிறார். எங்கள் டிரஸ்ட் மூலம் அவருக்கு மலேஷியாவுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள்கூட பெற்றுக் கொடுத்து வருகிறோம்.

ஜாஸ்மின் என்பவர், பள்ளி சீருடைகளை தைத்துக் கொடுத்து வருகிறார். காகித கப், பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் பயிற்சி முடித்த பல பெண்கள், தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். சரியான வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் முன்னேறிவிடுவார்கள். மற்றவர்களையும் முன்னேற்றுவார்கள் என்பதற்கு இவர்களே உதாரணம்.

நாங்கள் சுயதொழில் பயிற்சிகள் மட்டுமின்றி, தொழில் தொடங்குவதற்கு தேவையான கடன் உதவிகளையும் மானியத்துடன் பெற்றுத் தருகிறோம். எங்கள் சேவைகளை பாராட்டி, தமிழக அரசு எங்கள் அமைப்பின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இதுமட்டுமின்றி 5 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி, பி.இ., படிக்க வைத்து வருகிறோம். இதற்காக அரசு கொடுக்கும் உதவித்தொகையுடன், வெளியிலும் நன்கொடை திரட்டுகிறோம்.

மேலும், பெண்களுக்கு குடும்ப நல ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி வருகிறோம். முதியோர், ஆதரவற்ற பெண்களுக்காக காப்பகம் தொடங்கவும் திட்டம் இருக்கு.

இஸ்லாத்தில் பெண்களுக்குதான் எதிலும் முக்கியத்துவம். முன்னுரிமை. இதை, 1400 ஆண்டுக்கு முன்பே இறை தூதர் முகமது நபி அவர்கள் சொல்லி இருக்கிறார். ஆனால், யதார்த்தத்தில் முஸ்லிம் சமுதாய பெண்கள் அரசியல் போன்ற பொதுவெளிக்கு வர கடும் கட்டுப்பாடுகள் இன்றும் உள்ளன. அரசியலுக்கு வந்தால், ஒருவேளை அவர்கள் முன்னேறி விடுவார்களோ என்ற ‘ஈகோ’ ஆண்களிடம் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இந்த நிலை மாறும் என நினைக்கிறேன்.

சேலத்தில் முஸ்லிம் சமுதாய பெண்களுக்கென இஸ்லாமிக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்பது என் ஆசை. சிலர், இந்த கல்லூரி தொடங்க நிதி உதவி அளிப்பதாக சொல்லி இருக்கின்றனர். ஆனால், கல்லூரிக்கு தேவையான இடம்தான் இல்லை. சேலத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலம் நிறையவே இருக்கிறது. வக்பு வாரியம் நிலம் ஒதுக்கித் தந்தால் என் லட்சியமும் நிறைவேறும்.

”சரியான வாய்ப்பு கிடைத்தால்
பெண்கள் முன்னேறிவிடுவார்கள்.
மற்றவர்களையும்
முன்னேற்றுவார்கள்”

பதிவு: மார்ச்-2016

சந்திப்பு : இளையராஜா சுப்ரமணியம்

…………..