Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

”அரசியல் சதுரங்கத்தில் சில நேரம், நல்ல அதிகாரிகளின் தலைகள் உருட்டப்படுவது சகஜம்தான்,” என்றபடியே நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.

 

”என்ன பேனாக்காரரே…

வந்ததும் வராததுமா புதிர் போடுறீரு…?”

என கேட்டபடியே, சூடான தேநீரை

எடுத்து வந்தார் நக்கல் நல்லசாமி.

”அது ஒண்ணுமில்ல…

ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி,

மாங்கனி மாவட்டத்துல

ஆளுங்கட்சியைச் சேர்ந்த

மூத்த நிர்வாகியான ‘நேதாஜி’

பெயர் கொண்ட ஒருத்தரு,

மாவட்டத்தைக் கட்டி ஆளும்

கருமேக அதிகாரியும், மாநகராட்சியின்

முக்கிய அதிகாரியான ‘இயக்குநர் சிகரம்’

பெயர் கொண்ட அதிகாரியும்

இலைக்கட்சிக்கு ஆதரவாக

செயல்படுவதாக ஒரு குண்டைத்

தூக்கிப் போட்டார். அவருடைய

குரல் பதிவுதான், சமூக ஊடகங்களில்

வைரல் ஆகிட்டு இருக்கு.

 

அவரை இப்படி பேசச்சொல்லி

தூண்டி விட்டதும் கூட

ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளியான,

‘கடாரம் கொண்டான்’ பிரமுகர்தானாம்.

கொஞ்ச காலமாகவே கடாரம் கொண்டான்

பிரமுகர் சொல்லும் வேலைகள் எதையும்

கருமேக அதிகாரியும், இயக்குநர் சிகர

அதிகாரியும் கண்டுக்கறதே

இல்லைனு சொல்றாங்கப்பா.

 

வ.உ.சி. மார்க்கெட்டை ஒப்பந்தம் எடுத்தவருக்கிட்ட, ஒப்பந்தத் தொகையை முழுமையாகக் கட்டச்சொல்லி மாநகராட்சி அதிகாரி அழுத்தம் கொடுக்கிறாராம். இது கடாரம் கொண்டான் பிரமுகரின் காதுக்கு எட்டவே, அவரும் இயக்குநர் சிகரத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணும்படி சொல்லிருக்காரு,” எனச் சொன்னபடியே, தேநீரை ஒரு மிடறு உறிஞ்சினார் பேனாக்காரர்.

 

”ம்… அப்புறம் என்னாச்சு?” எனக் கேட்டபடியே, காதுகளை தீட்டிக்கொண்டார் நக்கல் நல்லசாமி.

 

”மாநகராட்சியில் செயல்திறன் உதவியாளராக 6 பேரை பணி நியமனம் செய்ததுல பணம் புகுந்து விளையாடியிருந்தது. இதில், அமைச்சரைவிட கடாரம் கொண்டான் பிரமுகருக்கு பெரிய அளவில் கட்டிங் போயிருந்தது. அரசாணைக்குப் புறம்பாக அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டதால 6 பேரிடம் இருந்தும் இயக்குநர் சிகரம் அதிகாரி ராஜிநாமா கடிதம் வாங்கிட்டாரு.

 

கடாரம் கொண்டான் பிரமுகருக்கு நெருக்கமான ஆளுங்கட்சியைச் சேர்ந்த ‘பழக்கடை பிள்ளையார்’ புள்ளிதான், அவரிடம் இயக்குநர் சிகரம் அதிகாரி பற்றி ஏகத்துக்கும் போட்டுக் கொடுத்துள்ளார். ஏன்னா… அந்தப் பழக்கடை பிள்ளையார் புள்ளிதான் 6 பேரிடம் இருந்தும் தலா 40 லகரங்களை வசூல் செய்து கொடுத்த புரோக்கராம்.

 

இது மட்டுமில்லாம… சேலம் மாநகராட்சியில தமிழுக்கு மணி அடிக்கிற அந்த அதிகாரி உள்பட 15 பேரை இயக்குநர் சிகரம் அதிகாரி திடீர்னு வெவ்வேறு மண்டலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்திருந்தார்.

 

தமிழுக்கு மணி அடிக்கிற அதிகாரிதான் வ.உ.சி. மார்க்கெட் டெண்டர் விவகாரத்தில் முறையாக வசூல் செய்து ஆளுங்கட்சிப் புள்ளிகளுக்கு பட்டுவாடா செய்து வந்தார். அவருக் ‘செக்’ வைத்ததால் ‘கடாரம் கொண்டான்’ பிரமுகர் ரொம்பவே அப்செட்டாம். அப்புறம் அவர் கேட்டுக்கிட்டதற்கு இணங்க, இயக்குநர் சிகரம் தான் போட்ட டிரான்ஸ்பர் ஆர்டரை அப்படியே வாபஸ் வாங்கினது வேறு கதை.

 

இவர் இப்படினா… மாவட்டத்தைக் கட்டி ஆளக்கூடிய கருமேக அதிகாரி, கடாரம் கொண்டான் பிரமுகரை சுத்தமாக மதிப்பதே இல்லையாம். முதன்மையானவர் செல்பி எடுத்துக் கொண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பில் சமூக நீதித் தலைவருக்கு சிலை வைக்கணும்னு கருமேக அதிகாரிதான் நிலத்தோட ஓனருக்கு ரொம்பவே பிரஷ்ஷர் போட்டாராம். அந்த விவகாரம், உலகளவில் சர்ச்சையாகிப் போனது.

 

அதில் ஆளுங்கட்சிக்கு கெட்டப் பெயரை உண்டாக்கி விட்டதாக கருமேக அதிகாரி மீது கடாரம் கொண்டான் பிரமுகர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தாராம். இந்தக் கடுப்புலதான் நேதாஜி பெயர் கொண்ட மூத்த உடன்பிறப்பு மூலம் அந்த ரெண்டு அதிகாரிகளும் இலைக்கட்சி ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த முனைவதாகவும் சொல்லி வாட்ஸ்ஆப்பில் தட்டி விட்டாராம்,” என புட்டு புட்டு வைத்தார் பேனாக்காரர்.

 

குறுக்கிட்ட நக்கல் நல்லசாமி,

 

”இது தொடர்பாக எனக்கும் ஒரு தகவல் கிடைச்சது. அதையும் சொல்லிடறேன்… வாடஸ்ஆப் குரல் பதிவு விவகாரம் தொடர்பாக, மாநகராட்சியின் இயக்குநர் சிகரம் அதிகாரி, ஜன. 11ம் தேதி மாவட்ட பொறுப்பு அமைச்சரை நேருக்கு நேராகச் சந்தித்து விளக்கம் அளித்தாராம். அதுக்கு அந்த அமைச்சரோ, இதையெல்லாம் பெரிசா எடுத்துக்க வேணாம்… நான் பார்த்துக்கறேன்னு தைரியம் சொல்லி அனுப்பினாராம்,” என்றார் நக்கலார்.

 

”அதுசரி… ஆளுங்கட்சியைச் சேர்ந்த கடாரம் கொண்டான் பிரமுகர் யார்னு சொல்லிடுங்க. இதுக்காக நான் வரலாறை எல்லாம் புரட்டிக்கிட்டு இருக்க முடியாது,” என அலுத்துக் கொண்டார் நக்கல் நல்லசாமி.

 

”ம்… எல்லாத்தையும் உடைச்சு சொல்லிட்டா அப்புறம் பேச்சுல சுவாரஸ்யம் இல்லாம போயிடுமே,”

 

நமட்டுச் சிரிப்புடன் நக்கலாரின் வீட்டுத் திண்ணையைக் காலி செய்தார் பேனாக்காரர்.

 

– பேனாக்காரன்.