Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மார்வாரிகளால் போலீசார் காட்டில் மழை… எடப்பாடி மாவட்டத்தில் சக்கப்போடு போடும் போதைப்பொருள் வர்த்தகம்!

– சிறப்பு செய்தி –

 

சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக மார்வாரி சமூகத்தினர் இந்த வணிகத்தில் ஏகபோகமாக திளைத்து வருவதோடு, அவர்களைக் கண்டும் காணாமலும் இருக்க காவல்துறையினர் காட்டிலும் பண மழை கொட்டி வருகிறது.

 

 

குட்கா, ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு நடுவண் அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ள நிலையில், சேலம் மாநகரில் மட்டும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலம் மாவட்டத்திலேயே இந்தப் பொருள்கள் தடையில்லாமல் கிடைப்பது பல மட்டத்திலும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

 

மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி ரெய்டுகள் நடத்தி, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தாலும், அடுத்த ஓரிரு வாரங்களில் மீண்டும் இதன் விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்து விடுகிறது.

 

 

இந்நிலையில் கடந்த 21-6-2018ம் தேதி நள்ளிரவில், அன்னதானப்பட்டி புத்தூர் இட்டேரி சாலையில் உள்ள ஒரு கிடங்கில் மாநகர காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஒரு கிடங்கில் இருந்து 50 மூட்டைகள் அளவுக்கு பெட்டி பெட்டியாக பான்மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

 

அந்தக் கிடங்கிற்கு அருகில் இருந்த மற்ற இரண்டு கிடங்குகளிலும் சோதனை நடத்தியதில், அவற்றில் இருந்தும் 250 மூட்டைகள் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இவற்றின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் என்கின்றனர் காவல்துறையினர். இந்த வழக்கில் மோகன்குமார் (24), சுரேஷ் (27), பீமாராம் (35) ஆகிய மூன்று பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டாலும், கிடங்கை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த மகேந்திரகுமார் (32) மட்டும்  தலைமறைவாகிவிட்டார்.

 

 

மறுநாள் இதுகுறித்த விசாரணையில் உணவுப்பாதுகாப்புத்துறையும் களமிறங்கியது. போதைப்பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக் கூட ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரிடம் இருந்து எப்ஐஆர் நகல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் அந்த கிடங்குகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

 

 

உணவுப்பாதுகாப்புத்துறையிடம் விசாரித்தபோது போதைப்பொருள் கும்பல் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

”குட்கா போன்ற போதை வஸ்து வணிகத்தில் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்வாரிகள்தான் ஈடுபடுகின்றனர். இப்போது தலைமறைவாக உள்ள மகேந்திரகுமார்கூட ஏற்கனவே எங்களது கண்காணிப்பில் இருந்தவர்தான். செவ்வாய்பேட்டையில் அவருடைய கடையில் முன்பே ஓரிரு முறை ரெய்டு நடத்தியிருக்கிறோம்.

 

 

அங்கு கெடுபிடிகள் அதிகமானதால்தான் அவர் அன்னதானப்பட்டிக்கு ஜாகையை மாற்றி உள்ளார். மாவட்ட எஸ்.பி. அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், அன்னதானப்பட்டி காவல் நிலையம் என காக்கிகள் சூழ்ந்துள்ள பகுதியிலேயே துணிச்சலாக தொழில் செய்து வந்துள்ளதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது,” என்கிறார் உணவுப்பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.

 

 

”சார்…இதெல்லாமே போலீசுக்கு தெரியாமலா நடக்குது? இங்கே யார் யார் சந்துக்கடையில் சாராயம் விற்கிறார்? எங்கெங்கே ‘பிராத்தல்’ நடக்குது? என எல்லாமே டீடெய்லாக நோட் போட்டு கப்பம் வசூலிக்கத் தெரிஞ்ச போலீசாருக்கு போதைப்பொருள் விற்பனை மட்டும் தெரியாமல் இருக்குமா? போலீசாரின் ‘மாமூலான’ நடவடிக்கையால்தான் மார்வாரிகள் இன்றைக்கும் போதைப்பொருள் வணிகத்தில் றெக்கை கட்டிப் பறக்கின்றனர்.

 

இப்போதுகூட ரெய்டு நடத்தியிருக்க மாட்டோம். தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் பிரச்னை செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால்தான் மேலிடத்திற்கு விஷயம் செல்வதற்குள் நாமே ரெய்டு நடத்திடுவோம் என்று களத்தில் இறங்கிவிட்டோம்,” என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

 

 

போதைப்பொருள்கள் எப்படி சேலத்திற்குள் ஊடுருவுகிறது? மார்வாரிகளின் பங்களிப்பு? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மருத்துவர் மாரியப்பனிடம் அணுகினோம்.

 

 

”குட்கா ஒரு போதைப்பொருள் என்பதால் இங்குள்ள வியாபாரிகள் நேரடியாக குட்காவாக விற்பதில்லை. பான்மசாலாவுடன் நிகோடின் சேரும்போது குட்காவாக மாறி விடுகிறது. அதனால் வணிகர்கள், ரெய்டில் இருந்து தப்பிக்க வசதியாக பான்மசாலாவையும், நிகோடினையும் தனித்தனியாக விற்று வருகின்றனர். பான் மசாலா என்பது உணவுப்பொருள் பட்டியலுக்குள் வந்து விடுவதால் அதை விற்பதற்கு தடையேதும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் சோதனையின்போது பான்மசாலாவையும், நிகோடினையும் சேர்த்தே பறிமுதல் செய்து வருகிறோம்.

 

 

இப்போது தலைமறைவாக உள்ள மகேந்திரகுமார், பால் பொருள்கள், ஜூஸ், காபி, டீத்தூள் உள்ளிட்ட பொருள்களை விற்பதாகச் சொல்லித்தான் உரிமம் பெற்றுள்ளார். அந்தப் பெயரில் குட்கா, பான்பராக் போன்ற பொருள்களும் விற்பனை செய்து வருவது சோதனையில் தெரிய வந்துள்ளது.

 

நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது என்றாலும் தமிழ்நாடு அளவுக்கு பிற மாநிலங்களில் கெடுபிடிகள் கிடையாது. குறிப்பாக சேலத்திற்கு கொண்டு வரப்படும் இதுபோன்ற போதைப்பொருள்கள் அனைத்தும் பெங்களூரில் இருந்து கொள்முதல் செய்து இங்கே கடத்திக் கொண்டு வரப்படுபவை. சேலத்தில் சரக்குகள் இறங்கியது, அவற்றை இருசக்கர வாகனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் சந்தேகம் வராதபடி கடைகளுக்குக் கொண்டுபோய் சேர்த்து விடுகின்றனர்.

 

 

இந்தத் தொழிலில் பெரும்பாலும் வட இந்திய மார்வாரிகள்தான் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பிடிபட்டுள்ள மார்மாரிகள் மட்டுமின்றி கடந்த ஓராண்டில், போதைப் பொருள்கள் விற்றதாக மனோகர்சிங் (3 வழக்குகள்), சேட்டாராம் (செவ்வாய்பேட்டை), மற்றொரு சேட்டாராம் (சின்னக்கடை வீதி), ஈஸ்வர்லால், உக்கம்சிங் (2 வழக்குகள்), ராஜேந்திரகுமார் மனைவி ஜெயந்தி (2 வழக்குகள்), சம்பத்சிங், பிரதாப்சிங், துங்கர்சிங் (ஓமலூர்), மகேந்திரசிங் (ஆத்தூர்) என 10 மார்வாரிகள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 

 

இவர்கள் தவிர, ஜெயமுருகன் (ஓமலூர்), பாலகிருஷ்ணன் (புதிய பேருந்து நிலையம்), இதாயதுல்லா (ஜங்ஷன்), வசந்தி (ஆத்தூர்), மாணிக்கராஜ், எல்டோஸ் (ரயில்வே) ஆகியோர் மீதும் போதைப்பொருள்கள் விற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

 

அன்னதானப்பட்டியில் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்களுக்கு உரிமையாளரான மகேந்திர்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உரிமமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது,” என்றார் உணவுப்பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் மாரியப்பன்.

 

 

எல்லாவற்றிலும் குற்றங்கள் நீங்கி முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமும், மாநகரமுமான சேலம் போதையில் தள்ளாடுவது சரியாகுமா?

 

– பேனாக்காரன்.