Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

‘பெண்ணென்றால் பேயும் இரங்கும்’ என்பது எங்கு, யாருக்கு பொருந்திப் போயிருக்கிறதோ இல்லையோ… அந்தப் பழமொழி, திருச்சியில் இளம்பெண் ஒருவருக்கு பலித்திருக்கிறது.

திருச்சி மாவட்டம்
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்
இலஞ்சியம். இவருடைய
மகள் கார்குழலி (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
குஜராத் மாநிலத்தில்
குடும்பத்துடன் வசிக்கிறார்.
அண்மையில் சொந்த
ஊருக்கு வந்திருக்கிறார்.

 

சில நாள்களுக்கு முன்பு,
எடமலைப்பட்டிபுதூரில் உள்ள
தன் தோழியைப் பார்ப்பதற்காக
தாயாரை அழைத்துக் கொண்டு
இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார்.
கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம்
அருகே சென்றபோது,
கிட்டத்தட்ட இருட்ட
தொடங்கி இருந்த நேரம் அது.

 

எதிரில் மோட்டார் சைக்கிளில்
வந்த மர்ம நபர் ஒருவர்,
இலஞ்சியம் கையில் வைத்திருந்த
மகளின் கைப்பையை
‘லபக்’கென்று பறித்துக்கொண்டு
மின்னல் வேகத்தில்
பறந்துவிட்டார்.

 

ரிஸ்க் எடுக்க நினைத்த
கார்குழலியோ, மர்ம நபரை
பின்தொடர்ந்து விரட்டிச்
சென்றார். ஊஹூம்.
வேலைக்கு ஆகவில்லை.
கைப்பையில் 15 ஆயிரம்
ரூபாய் ரொக்கமாக
வைத்திருந்திருக்கிறார்.
அதுபோக, 2 ஏடிஎம் கார்டுகளும்,
இரண்டு ஆன்ட்ராய்டு
செல்போன்களும் அந்தக்
கைப்பையில்தான் வைத்திருந்தார்.
அதுதான், திருடனை விரட்டிச்
செல்ல காரணமாய்
இருந்திருக்கிறது.

 

இதுபற்றி அந்த இளம்பெண், எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கம்போல் சம்பவ இடம், பறிபோன பொருள்கள் குறித்த விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட காக்கிகள், மறுநாள் வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பி விட்டனர்.

 

வீடு திரும்பிய இலஞ்சியத்தின் மகளுக்கு ஒரு யோசனை உதித்தது. ஒருவேளை, கைப்பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட பிறகு, பையை சாலையில் தூக்கிப் போட்டிருந்தால், அதை யாராவது எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது எனக்கருதினார். அதனால் பையில் வைத்திருந்த தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

 

எடுத்துப் பேசியது வேறு யாருமல்ல… சாட்சாத்… அவரிடம் வழிப்பறி செய்த அதே திருடன்தான்.

 

அப்புறம் என்ன… சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதுதானே சமயோசிதம்? அதனால் அவனிடமே தன் குடும்பச் சூழ்நிலையைச் சொல்லி அழுது புலம்பியுள்ளனர்.

 

பணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்; பையில் இருந்த செல்போனும், ஏடிஎம் கார்டுகளும்தான் முக்கியம். அவை இல்லாவிட்டால் வாழ்க்கையே பறிபோய்விடும் என அழுதிருக்கிறார் கார்குழலி.

 

திருடனின் மனமும் இளகியது.

 

இதையடுத்து, சென்னை – திருச்சி புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூம் பக்கத்தில் வருமாறும், அங்கு வந்தால் செல்போன், ஏடிஎம் கார்டுகள், கைப்பையை தந்து விடுவதாகவும் திருடன் சொல்லியிருக்கிறான்.

 

கார்குழலி,
திருடன் குறிப்பிட்ட
இடத்திற்கு தன் தம்பியை
தனியாக அனுப்பி வைப்பதாகவும்,
பொருள்களை கொடுத்து
விடும்படியும் கூறியுள்ளார்.
அதற்கும் திருடன்
ஒப்புக்கொள்ளவே,
குறிப்பிட்ட இடத்திற்குச்
சென்றிருக்கிறார்.
அங்கு முகத்தில் மாஸ்க்,
ஹெல்மெட் அணிந்தபடி வந்த
திருடன் அந்தப் பெண்ணிடம்
வழிப்பறி செய்த கைப்பையை
தூக்கிப்போட்டு விட்டு மின்னல்
வேகத்தில் மறைந்தான்.
அந்த இளம்பெண் கேட்டபடியே
அதில், செல்போன்களும்,
ஏடிஎம் கார்டுகளும் இருந்தன.

 

வழிப்பறி செய்த திருடனே,
திடீரென்று உத்தம வில்லன்போல்
மாறிய ருசிகரமான சம்பவம்
எடமலைப்பட்டி புதூர் பகுதியில்
பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.

 

– பேனாக்காரன்