Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது:

மனித உரிமை மீறல்:

நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையமும், உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட சிபிஎஸ்இ அதிகாரிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு வெளிமாநிலத்திற்குத் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை மாரடைப்பில் இறந்துள்ளார். இப்படி தொடர்ந்து உயிர்பலி கேட்கும் நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களை குட்டிச்சுவராக்கி இருக்கிறது மத்திய அரசு.

இங்குள்ள மருத்துவ இடங்களில் தமிழர் அல்லாதோர்தான் அதிகளவில் படிக்கின்றனர். ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என தமிழக நலன்களையும், உரிமைகளையும் இழந்து விட்டோம். நீட் பிரச்னையில் இருந்து விடுபட மத்திய பட்டியலில் உள்ள கல்வியை, விரைவில் மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்.

இங்குள்ள அடிமை எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ராணுவ பாதுகாப்பு, பணத்தாள் அச்சடிப்பு மட்டும்தான் மத்திய அரசிடம் இருக்கும். மற்ற உரிமைகள் அனைத்தும் மாநில அரசிடம்தான் இருக்கும். அதை முன்னெடுத்து மாபெரும் போராட்டத்தை நடத்தப் போகிறோம்.

மாபெரும் முறைகேடு:

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்ற ஒரே இடத்தில் மட்டும் பத்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் போடப்படுவதாகவும், அதற்காக சிபிஎஸ்இ நிர்வாகத்துடன் மறைமுகமாக சில ‘அண்டர்ஸ்டேண்டிங்’ நடந்து உள்ளது.

இதன் பின்னணியில், தனியார் கோச்சிங் நிறுவனங்கள், சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் லட்சக்கணக்கான ரூபாய் கையூட்டு பேசப்பட்டு உள்ளதாக எனக்கு தகவல்கள்¢ கிடைத்துள்ளன. நீட் தேர்வில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இந்த முறைகேடு குறித்து சிபிஐயும், தமிழக சிபிசிஐடி காவல்துறையினரும் முறையாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

எனக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நக்கீரன் புலனாய்வு இதழும் தெளிவாக எழுதி இருக்கிறது. இதுபற்றி புகார் கொடுத்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும்போது மர்ம நபர்கள் சிலர் என் அறை கதவை தட்டினர். போனிலும் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டால், பேய் ஏதும் கதவுகளைத் தட்டியிருக்கும் என்கின்றனர்.

தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்து கிடக்கிறது. அதனால்தான் கள்ள லாட்டரி சரளமாக விற்பனையாகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு விரைவில் அனுமதி கொடுக்கும் திட்டம் உள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. லாட்டரி அதிபர்கள் எடப்பாடி அரசுடன் பல கோடி ரூபாய் இதற்காக பேரம் பேசியுள்ளனர்.

சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலங்களை எடப்பாடி பழனிசாமி அரசு கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியபுரம் ஆகிய பகுதி மக்கள் எடப்பாடி கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்பதை மனதில் வைத்துக்கொண்டு இரண்டு சமூகத்தினரை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு செயல்படுகிறார்.

அவர் ஒரு சட்ட விரோத முதலமைச்சர். மைனாரிட்டி முதலமைச்சர். முதல்வர் பதவி எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அதன்பிறகு நீ வாழ்வதற்கு சேலத்திற்குதான் வர வேண்டும் எடப்பாடி… அப்போது பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கண்ணன், ராஜலிங்கம், யுவராஜ், செல்வம், ஜெயமோகன், தாரை செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

– பேனாக்காரன்.