Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

ஸ்ரீதேவி: 13-08-1963 – 24-02-2018

விருதுநகர் மாவட்டம்
சிவகாசி அருகே உள்ள
மீனம்பட்டியை சேர்ந்த
அய்யப்பன் – ராஜேஸ்வரி தம்பதி,
தங்கள் மகள், எதிர்காலத்தில்
இந்தியாவில் உள்ள
கோடிக்கணக்கான இதயங்களை
கொள்ளையடிப்பாள் என
ஒருபோதும் யோசித்திருக்க
மாட்டார்கள். அந்த
தம்பதியின் மகள்,
ஸ்ரீதேவி.

 

பட்டாசு தொழிற்சாலைகள்
நிறைந்த சிவகாசி ஒரு
கந்தக பூமி. அந்த மண்ணில்
இருந்து ஒரு கனவுக்கன்னி,
ஏறக்குறைய அரை நூற்றாண்டு
காலம் இந்திய சினிமாவை
ஆட்சி செய்திருக்கிறார்
என்பதும்கூட நமக்கான
அடையாளம்தான். அவர்
மரித்துப்போனார் என்பதைக் கூட
நம்ப முடியாத வகையில்
கோடிக்கணக்கான மனங்களில்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

பால் மனம் மாறாத
வயதிலேயே ஸ்ரீதேவி
வெள்ளித்திரைக்குள் காலடி
எடுத்து வைத்துவிட்டார்.
நான்கு வயதிலேயே,
‘துணைவன்’ படத்தில்
முருகன் வேடம். எல்லாமே
விளையும் பயிர் கணக்குதான்.
‘களத்தூர் கண்ணம்மா’வில்
களமிறங்கிய கமல்ஹாசன் என்ற
சிறுவனிடம் தென்பட்ட அதே
துருதுருப்பு, குழந்தை
ஸ்ரீதேவியிடமும் இருப்பதை
திரைத்துறை முன்னோடிகள்
அறிந்தே வைத்திருந்தனர்.

குழந்தை நட்சத்திரமாகவே
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட
60களின் உச்சத்தில் இருந்த
மூத்த கலைஞர்களின் மடியில்
தவழ்ந்து விட்ட ஸ்ரீதேவி,
80களில் தமிழ் ரசிகர்களின்
உள்ளங்களை ஒட்டுமொத்தமாக
கொள்ளை அடித்துவிட்டார்
என்றே சொல்ல வேண்டும்.

1960களில் சிவாஜி – பத்மினி
இணை ஏகப்பொருத்தம் என்பார்கள்.
அந்தப் பெயரை கமல் – ஸ்ரீதேவி
இணை பெற்றது. கிட்டத்தட்ட
27 படங்கள் இணைந்து நடித்தனர்.
ஏறக்குறைய எல்லா படங்களுமே
வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.

கமலை மானசீகமாக காதலிக்கும்
பெண் ரசிகர்கள் தமிழ்நாட்டில்
அதிகம். அப்படியே, தனக்கான
மணப்பெண் ஸ்ரீதேவி போல
இருக்க வேண்டும் என்று
லட்சணங்களின் குறியீடாக
அவரை ஆராதித்த ஆண்களும்
இங்கே அதிகம்.

கமலின் பெண் உருவம்,
ஸ்ரீதேவி. அப்படித்தான்
சொல்ல வேண்டும்.
படைப்பாளியின் எழுத்துக்கு
உயிர் கொடுப்பவர்கள்
கலைஞர்கள். அதை
தன்னுடைய மிகையற்ற,
யதார்த்த முகபாவங்களுடன்
அத்தனை ரசங்களையும்
கொட்டி உயிர் கொடுத்தவர்
ஸ்ரீதேவி.

தமிழில்,
‘மூன்று முடிச்சு’, ‘மூன்றாம்பிறை’,
’16 வயதினிலே’, ‘குரு’,
‘வறுமையின் நிறம் சிவப்பு’,
‘ஜானி’ ஆகிய படங்களை
புறந்தள்ளிவிட்டு அவருடைய
திரைத்துறை வாழ்க்கையை
நாம் பேசிவிட முடியாது.
இன்னும் சில படங்கள்
இருக்கலாம்.

தன்னுடைய 14 வயதில்
ஸ்ரீதேவி ‘மூன்று முடிச்சு’
படத்தில் நாயகியாக புரமோஷன்
அடைந்துவிட்டார். அப்படி
உயர்த்தியவர் கே.பாலசந்தர்.
படத்தில் அவருக்கு 18 வயது
இளம்பெண் வேடம்.

கதைப்படி, தன் காதலை பிரித்த, காதலனைக் கொன்ற ஒருவனை திருமணம் செய்து கொள்ளும் நிலை வருகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக அவனுடைய தந்தைக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறார் செல்வி. அதாவது, ஸ்ரீதேவி.

அந்தக் கொலையாளி, பிரசாத். அதாவது ரஜினிகாந்த். இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு ரஜினியின் நடிப்பு ஆளுமையை மெச்சாமல் இருக்க முடியாது.

நீண்ட காலம் கழித்து வெளியூரில் இருந்து தன் வீட்டிற்கு தந்தையைப் பார்க்க வருகிறார் பிரசாத். தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக ஸ்ரீதேவி, பிரசாத்தின் தந்தையை திருமணம் செய்ய நேரிடுகிறது. இந்த நிகழ்வு குறித்து ரஜினிகாந்திற்கு தகவல் ஏதும் சொல்லப்படாத நிலை.

இப்படிப்பட்ட நிலையில், ஸ்ரீதேவியை அடைந்தே தீர வேண்டும் என்ற உள்ளார்ந்த வெறியுணர்வுடன் ரஜினிகாந்த் தந்தையைப் பார்க்க தன் வீட்டிற்கு வருகிறார்.

வாசல் படியில் காலடி வைக்கும்போதே, ‘‘மனவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்… விதிவகைகள் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்…” என்று உள்ளுக்குள் வன்மம் பொங்க பாடுவார்.

இப்போது அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டிய தருணம். நடிப்பு ராட்சஷி ஸ்ரீதேவி விடுவாரா? மயிரிழை இடறினாலும் வலுவான ரஜினியின் பாத்திரம் முன்பு ஸ்ரீதேவி பாத்திரம் சறுக்கி விடும்.

அந்தப் பாத்திரத்தின் தன்மையை அவர் அந்த பதின்பருவ வயதில் நன்றாகவே உணர்ந்து இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரஜினிகாந்த் பாடி முடித்து, வரவேற்பறையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருப்பார். வீட்டு மாடியில் இருந்து பாடும் குரல் மட்டும் முதலில் அவருக்கு கேட்கிறது. அதுவும் அவர் பாடிய பாடலுக்கு எசப்பாட்டாக. குரல் வந்த திசையை நோக்கி சற்றே கழுத்தை உயர்த்திப் பார்க்கிறார் ரஜினிகாந்த்.

”நீரலையில் முடிந்ததெல்லாம் நெஞ்சில் வந்த நினைவலைகள்… நினைவலைகள் முடிந்த இடம் தாய் மகனாம் சூழ்நிலைகள்…” என பாடியபடி, மாடியில் அவருக்கு நேரெதிரில் புடவையை தோளோடு இழுத்துப் போர்த்தியபடி வந்து நிற்பார் ஸ்ரீதேவி.

மாடியில் வைக்கப்பட்ட கேமரா கோணம், அப்படியே சற்றே கீழிறங்கி வரும். அங்கே தன் தந்தையின் புகைப்படத்திற்கு அருகில் ஒருபுறத்தில் இறந்து போன தன் தாயின் படமும், மற்றொரு புறத்தில் ஸ்ரீதேவியின் படமும் மாட்டப்பட்டிருக்கும்.

அந்தப் பதிலடி பாடலும், இந்த புகைப்படங்களும் ஸ்ரீதேவிக்கும், ரஜினிகாந்திற்கும் என்ன மாதிரியான உறவுமுறை என்பதை அந்தக் காட்சியை மட்டும் பார்ப்பவர்களுக்கும்கூட எளிமையாக புரிய வைத்திருப்பார் கே.பாலசந்தர்.

அதைப் பார்த்த மாத்திரத்தில் ரஜினியின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கும். பத்தாயிரம் வாலா சரவெடியை கொளுத்தி அவர் மீது போட்ட மாதிரியான எதிர்வினையை முகத்தில் காட்டுவார்.

அப்போது மாடியில் ஸ்ரீதேவி, ”என்னடா பார்க்குற…” என்பதுபோல் ஓர் அலட்சியமான பார்வையை அனாயசமாக வீசுவார். அந்த வீட்டில் அவர்தான் ராணி என்பதை முகத்தில் மின்னும் மூக்குத்தியும், காதில் அணிந்த கம்மலும் சொல்லாமல் சொல்லும்.

அதற்கு அடுத்தடுத்த காட்சிகள் ஸ்ரீதேவியின் நடிப்பு ஆளுமையை அபாரமாக வெளிப்படுத்தக் கூடியவை. மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவர், ”வா பிரசாத்… நீ வர்றதா லெட்டர் போட்டுருந்தா காரை சேலத்துக்கே அனுப்பியிருப்போமே…” என படு காஷூவலாக பேசுவார்.

உள் அறையில் இருக்கும் கணவரை அதாவது ரஜினியின் தந்தையை நோக்கி, ”என்னங்க… யார் வந்துருக்கான்னு கொஞ்சம் வந்து பாருங்க” என்பார். அதற்கு அவர் உள்ளே இருந்தபடியே, ”யார் வந்திருக்கா…?” என வினவுவார்.

அதற்கு ஸ்ரீதேவி, ”என் பிள்ள வந்திருக்கான்…” என்பார் எந்த சலனமுமின்றி. அங்கே ரஜினி, நிராயுதபாணியாக நிற்பதை ரசிகர்களால் உணர முடியும். அடுத்த நொடியில் ஸ்ரீதேவி, ”போடா கண்ணா… போயி குளிச்சிட்டு வா… சாப்பிடலாம். உனக்கு பாயசம் செஞ்சி கொடுக்கணும்” என்பார்.

அவ்வளவுதான். சிதறிப் போயிருப்பார் ரஜினி. தான் ஒரு பணக்கார வீட்டுப் பையன்; தனக்கு மனைவியாக வந்திருக்க வேண்டிய ஒரு பெண், தன்னை ஒரு பள்ளிக்கூட சிறுவன் போல் நடத்துவதை ‘ஈகோ’ பிடித்த எந்த ஆணால்தான் ஒத்துக்கொள்ள முடியும்?. சுக்குநூறாக நொறுங்கி கிடப்பார் ரஜினி. அபார நடிப்பால் எல்லா பாத்திரங்களையும் தூக்கி விழுங்கியிருப்பார் செல்வியான ஸ்ரீதேவி.

பதினான்கு வயது சிறுமியின் மீது ரொம்பவே சிக்கலான கதையை, கனமான பாத்திரத்தை ஏற்றி வைத்திருப்பார் கே.பி. அதை, அனாயசமாக அடித்து துவம்சம் செய்திருப்பார் ஸ்ரீதேவி. அது, பாலசந்தரேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினியை தெறிக்கவிட்ட இதே ஸ்ரீதேவிதான், ‘மூன்றாம் பிறை’ படத்தில் கமல்ஹாசன் என்ற நடிப்பு அரக்கனையும் எந்த இடத்திலும் ரன் எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டிருப்பார்.

மனநலம் குன்றிய பெண்ணாக படம் நெடுக ஆதிக்கம் செலுத்திய அவரை, கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பந்து ஆறு ரன் இலக்கு என்ற நிலையில், சிக்ஸர் அடித்து கமல்ஹாசன் வெற்றி வாகை சூடியிருப்பார்.

அதனால்தானோ என்னவோ, அந்தப்படத்திற்கு தேசிய விருது பெற்ற கமல்ஹாசன், ஸ்ரீதேவி மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என பகிரங்கமாக அப்போது குறிப்பிட்டார்.

90களில் புது முகமாக தமிழ்த் திரையுலகில் காலடி வைக்கும் பல நடிகைகள், ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி போல ஒரு படத்திலாவது நடிக்க ஆசை என்று நிரந்தரமாக தன்னை ரெஃபரன்ஸ் ஆக குறிப்பிடும்படி ஆளுமையை பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியை ஒரு தேவதையாகவே நான் ஆராதித்து வந்திருக்கிறேன். அந்த கருஞ்சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, அவருடைய அகன்ற நெற்றிக்கு அத்தனை அழகு. ஸ்ரீதேவியின் கண்கள், சொற்களுக்கு அப்பாலும் உள்ள மொழிகளை பேசும். கவிஞனை உருவாக்குபவர் அவர்.

பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில், அவர் தன் அழகான மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அப்போது முதல் என் அம்மா, ”இப்போலாம் ஸ்ரீதேவி நல்லாவே இல்ல. நல்லா இருந்த மூக்க இப்படி பண்ணிக்கிட்டாளே…” என்பார். என்னளவில், படைப்பின் முழுமை என்றால் அது ஸ்ரீதேவிதான் என்பேன். அவரிடம் எதுவும் கூடவும் இல்லை; குறைச்சலும் இல்லை. அதுதான் ஸ்ரீதேவி.

‘பகலில் ஓர் இரவு’ என்றொரு படம். அதில், ”இளமை எனும் பூங்காற்று…” என்ற பாடல். அந்தப் பாடலை பார்க்கும் எந்த ஓர் ஆணும் அவரை கொண்டாடாமல் இருக்க முடியாது. தலைவனுடன் கூடலில் லயித்திருக்கும் ஒரு பெண்ணின் பாவனைகள் அத்தனை கச்சிதம். ரசிகர்களை சுண்டி இழுத்திருப்பார்.

அதேபோல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற படத்தில், தேவி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீதேவி. ரங்கனாக, கமல். ”தந்தன தத்தன தையென தத்தன தனன தத்தன தானத் தையன தந்தானா…” என ஸ்ரீதேவி தன் தொடை மீது தாளம் தட்டியபடியே ஆலாபனை செய்வார். அதற்கேற்ப கவிதை பாடுவார் கமல்.

ஒரு நீண்ட புல்வெளியில் நடந்தபடியே பாடிச்செல்லும் அவர்கள், ஒருகட்டத்தில் அவர்கள் தங்களை அறியாமலேயே இருவரின் கரங்களும் ஒன்று கோத்தபடி பயணிப்பார்கள். தன்னுடைய காதலை மிக மென்மையாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி. கமல்ஹாசனும்கூட. இந்தப் படத்தில் ஆரவாரமற்ற எளிமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருப்பார் ஸ்ரீதேவி.

அதேநேரம், ‘குரு’ படத்தில் போதையில் தள்ளாடியபடி பாடும் காட்சி அது. ”எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா…நானின்று நானில்லை… என் நெஞ்சில் நாணம் இல்லை….” என்று பாடும்போது, ஸ்ரீதேவியை ரசிக்காத ஆண் ரசிகர்களே இருக்க முடியாது. பெண் ரசிகர்களும்கூட.

அந்தப் பாடலில், தேங்கியிருக்கும் சின்ன நீரோடையில் குதித்து எழுவார்.

போதாததற்கு கொட்டும் மழை…
ஈரமான வெள்ளை சேலை…
மழையில் நனைந்தபடி ஆடும்
சிலை அழகும், கிறங்கடிக்கும்
ஜானகியின் குரலும், மனதை
வருடும் இளையராஜாவின்
இசையும் ஒரு சேர இணைய,
அந்தப் பாடல் முடியும் வரை
ரசிகர்களின் கண்கள்
ஸ்ரீதேவியின் மீதே
நிலைகுத்தி இருந்த
காலம் அது.

உலகின் உன்னதங்களை
இயற்கை ஏன் வாழ்வில்
ஒருமுறை மட்டுமே
கொடுத்துவிட்டுப் போகிறது?
மனிதர்கள் மீது இயற்கைக்கு
ஏன் அத்தனை வன்மம்?
ஸ்ரீதேவியின் இழப்பின்போது
என் மனதில் எழும்
வினாக்கள் இவை.

‘மூன்றாம் பிறை’ படத்தில் இடம்பெறும் கண்ணதாசனின் வரிகளில் சொல்வதெனில்,

நதி எங்கு செல்லும்
கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி…

ரசிகனின் அஞ்சலி!

 

– இளையராஜா சுப்ரமணியம்.