நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீரென்று நேற்று இரவு (பிப்ரவரி 24, 2018) மரணம் அடைந்தது, அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. உடன் நடித்த நடிகர்கள் உள்பட திரையுலகைச் சார்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன்:
”மூன்றாம் பிறை பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்” என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது இரங்கல் செய்தியை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”கடந்த மாதம்கூட ஸ்ரீதேவியை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை வாஞ்சையுடன் பார்த்ததை கண்களில் கண்டேன். என் கண்களிலும் அத்தகைய உணர்வு இருந்ததை அவரும் பார்த்திருக்கலாம்.
திரைத்துறையில் அவரைவிட கொஞ்சம் மூத்தவன் என்பதால் அவரிடம் ஒரு சட்டாம்பிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்வேன். ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்தபோது அவருக்கு நடன அசைவுகள், வசனங்கள் சொல்லித்தருவேன். நானும் அவரும் 27 படங்கள் சேர்ந்து நடித்தோம். வாழ்வின் ஒரு பகுதி அது.
அவரிடம் எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும். ஒருவேளை எங்கள் இருவரின் நட்புக்கும் அந்த எண்ணம்கூட காரணமாக இருக்கலாம். மூன்றாம் பிறையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் என் நினைவில் வந்து போகிறது,” என உருக்கமாக பேசியுள்ளார்.
ரஜினிகாந்த்:
தன் வீட்டில் இன்று காலை ஊடகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ”என்னுடைய ரெண்டாவது படத்திலிருந்தே அவருடன் நடிக்கத் தொடங்கிவிட்டேன். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால நண்பர். என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவரான ஸ்ரீதேவியை இழந்துவிட்டேன். அவர் இறந்து விட்டார் என்பதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.
கேமராவுக்கு முன், கேமராவுக்கு பின் என அவருக்கு இரண்டு முகம் உண்டு. கேமரா முன்பு போய் நின்றுவிட்டால் போதும். அப்படி ஒரு நெருப்பு. அந்த ஒரு மின்சாரம் அவர் உடம்புக்குள் வந்து விடும். அபாரமாக நடிப்புத் திறமை கொண்டவர். அவருடைய இறப்பு எனக்கு வருத்தம் அளிக்கிறது,” என்றார்.
இளையராஜா, இசையமைப்பாளர்:
இந்தியாவிலேயே மிகவும் திறமையான நடிகையாக விளங்கியவர் ஸ்ரீதேவி. அவரது மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு, சினிமா உலகிற்கு பெரும் இழப்பு.
தனது நடிப்புத் திறமையை பல விதங்களில் வெளிப்ப டுத்தியவர். அவர் நடிப்பில் வெளிவந்த அதிக படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன். மூன்றாம் பிறை படத்தில் பாடல் பதிவின்போது இசைக்கு ஏற்ப வசனங்களைப் பேச அவருக்கு கற்றுக் கொடுத்தேன்.
நடிகர் பாக்யராஜ்:
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கூறுகையில், ”ஸ்ரீதேவியின் மரணம் உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. பதினாறு வயதினிலே படத்தில் நடித்தபோது அவருக்கு நான்தான் வசனம் சொல்லித்தருவேன். காட்சிகளின் தொடர்ச்சி பாதிக்கப்பட க்கூடாது என்பதற்காக நடிகர், நடிகைகள் ஒப்பனைகளை கலைக்க வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லி இருப்போம்.
ஆனால் ஸ்ரீதேவி கலர் கலராக பொட்டு வைத்துக்கொண்டு, ரிப்பன் கட்டிக்கொண்டு வந்து நிற்பார். இது தொடர்பாக என க்கும் அவருக்கும் அப்போது அடிக்கடி படப்பிடிப்பில் சின்னச்சின்ன சண்டைகள் வரும். அது அவர் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
ஆனாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடம் இருக்கும். அதுபோன்றவர்களின் ஆத்மா அத்தனை சீக்கிரத்தில் சாந்தி அடைந்து விடாது. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்தில் அவருடைய மகளுக்கு ஒரு குழந்தை பிறந்து, அதன் மூலமாக ஸ்ரீதேவி மீண்டும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வருவார்.
நடிகர் விவேக்:
நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்திய சினிமாவின் ஒப்பற்ற கனவு தேவதை மறைந்து விட்டது. ஒரு வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பேன். மருத்துவமனை, தீவிர சிகிச்சை, ஐசியூ பிரிவு என்று துன்பப்படாமல் இறந்து விட்டார். ஒரு மலர் துயில் கொள்கிறது.
கவிஞர் வைரமுத்து:
”ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது.
ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளைப் பிம்பப்படுத்துகிறார். பலகோடிப் பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர்முகம்.
‘மூன்றாம் பிறை’யில் நான் எழுதிய நரிக்கதை பாடலைப் பாட வந்தபோது அவரை முதல்முறை பார்த்தேன். நானெழுதி அவர் கடைசியாகப் பாடி நடித்த புலி படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாகப் பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது.
அரை நூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலைப் பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்தியக் கலையுலகம் மறக்காது. ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரைக்கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.