Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

காலங்காலமாக சித்திரை முதல் நாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி பழக்கப்பட்டு விட்ட தமிழர்களிடம், திடீரென்று அன்றைய நாளில் புத்தாண்டு இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்?. வெகுசன மக்களிடம் அதிர்ச்சியும், குழப்பங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுமல்லவா? அத்தனையும் எழுந்தன முந்தைய திமுக ஆட்சியின் மீது.

 

புரையோடிப் போன நம்பிக்கை:

 

கடந்த 2008ல் ஆட்சியில் இருந்த திமுக, ‘நித்திரையில் இருக்கும் தமிழா உனக்கு சித்திரை அல்ல புத்தாண்டு’ என்று புரட்சிக்கவியின் வரிகளை மேற்கோள் காட்டி, ‘தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு’ என்று ஆணையிட்டது. சரியோ தவறோ… புரையோடிப் போன ஒரு நம்பிக்கையை, அரசாணை வாயிலாக தடுத்து அணை போட்டு விட முடியுமா?. இது ஹர்ஷவர்த்தனர் காலம் இல்லை.

 

 

இந்த அரசாணைக்கு முன்பே, திரு.வி.க., தைதான் ஆண்டின் தொடக்கம் என்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போன்றோரும் இப்படி பேசியிருக்கின்றனர்.

 

வணிக சமரசம்

 

திமுகவினரே கூட தை முதல் நாளை பொங்கல் திருநாளாகத்தான் கொண்டாடினரே தவிர, புத்தாண்டாக கருதவில்லை. சித்திரை பிறப்பன்று,  கலைஞர் டிவியும் கூட, ‘விடுமுறை தின’ என்ற முன்னொட்டுடன் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிகிறது. வணிக சமரசங்களால்தான், சித்தாந்தங்கள் மீது சாமானியர்களுக்கு இயல்பாகவே அய்யம் ஏற்பட்டு விடுகிறது.

 

தமிழ்ப்புத்தாண்டு மட்டுமின்றி, ஆங்கிலப் புத்தாண்டும்கூட காலப்போக்கில் மாற்றப்பட்டதுதான். அதற்கு முன் ஜூலியன் நாள்காட்டிதான் நடைமுறையில் இருந்து வந்தது. பிறகு, கிரிகோரியன் முறை நடைமுறைக்கு வந்தது.

 

தைத் திங்களில்தான்…

 

தமிழ்ப்புத்தாண்டு தைத் திங்களில்தான் என்பதை எதன் அடிப்படையில் நிருவினார்கள் என்பதை இதுபோன்ற நாளில் பதிவு செய்ய வேண்டியது கடமை என்பதால் சொல்கிறேன்.

 

தொல்தமிழ் குடிகளும், அப்படித்தான் தைத்திங்கள் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆவணித் திங்களும் ஆண்டின் தொடக்கமாக இருந்தது ஒரு காலம். ஆரியர் வருகையால், ஆட்சியில் இருந்தோரின் துணை கொண்டு அவர்களின் மாய்மாலங்கள் அம்பலம் ஏறின. தை முதல் நாள் மறைந்து சித்திரையில்தான் தமிழ்ப்புத்தாண்டு என நிருவினர்.

 

 

ஆரியக் கூட்டம்

 

இன்று விளம்பி ஆண்டு பிறந்ததாக ஆரிய சாத்திரங்கள் கூறுகின்றன. விளம்பி என்பது தமிழ்ச் சொல்லா? என்பதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்கிறோமே தவிர, ப்ரபவ முதல் அக்ஷய வரையிலான 60 ஆண்டுகளில் ஒன்றுகூட தமிழ்ப் பெயராக இல்லையே. எல்லா ஆண்டுகளின் பெயருமே சமஸ்கிருத மொழியில்தான் அமைந்துள்ளன. பிறகு எப்படி ‘விளம்பி’ ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு ஆகும்?

 

ஆரியக் கூட்டம் வகுத்தளித்த 60 ஆண்டுகளில், மூன்றாவது ஆண்டான ‘சுக்ல’ என்பதற்கு ‘ஆணின் உயிரணு’ என்பது பொருள். 23வது ஆண்டாக வரும் ‘வ்ரோதி’ என்பதற்கு ‘எதிரி’ என்று பொருள் என நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 33வது ஆண்டான ‘விகாரி’ என்பதற்கு ‘அழகற்றவன்’ என்றும், 38வது ஆண்டான ‘க்ரோதி’ என்பதற்கு ‘பழிவாங்குபவன்’ என்பதும், 55வது ஆண்டான ‘துன்மதி’ என்பதற்கு ‘கெட்ட புத்தி’ என்பதும் பொருளாகும்.

 

சாலி வாகனன்

 

இந்த ஆண்டு நடைமுறைகளும் கூட கி.பி. 78 முதலே நடைமுறைக்கு வந்ததாகவும், அப்போது வட இந்தியாவில் ஆட்சி புரிந்த சாலி வாகனன் மூலமாக நாடு முழுவதும் பரப்பப்பட்டதாகவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். அதனால்தான், 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு சஷ்டி பூர்த்தி விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இது எதுவுமே தமிழர்களின் வழக்கில் இல்லாதது.

 

ப்ரபவ முதல் அக்ஷய வரையிலான புத்தாண்டு பிறந்ததற்கு ஒரு புராண கதையும் சொல்லப்படுவது உண்டு. அதாவது…

 

கிருஷ்ணரும் நாரதரும் புணர்ந்த கதை

 

கிருஷ்ணர், அறுபதாயிரம் கோபியர்களுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார். அதையெல்லாம் பார்த்து காம நோயில் தடுமாறிய நாரதர், 60 ஆயிரம் கோபியரில் ஒருவரை விட்டுக்கொடுக்கலாமே என்று கிருஷ்ணரிடமே நேரடியாக கேட்டுவிட்டார்.

 

‘பிறன்மனை நோக்காமை பேராண்மை’ என்று வள்ளுவர் போல, கிருஷ்ணர் தத்துவம் எல்லாம் பேசவில்லை. சினமும் கொள்ளவில்லை. ‘யாருடைய மனதில் நான் இல்லையோ அந்த கோபியரை நீ புணர்ந்து கொள்’ என்று நாரதருக்கு யோசனை சொல்லி அனுப்பி விட்டார் கிருஷ்ணர்.

 

 

நாரதரும் சளைக்காமல் ஒவ்வொரு கோபியரின் வீட்டிற்கும் சென்று பார்க்கிறார். எல்லா கோபியரின் மனதிலும் கிருஷ்ணரே இருப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி விடுகிறார். மீண்டும் கிருஷ்ணரிடம் வந்த அவர், ‘என்னை பெண்ணாக மாற்றி, நீயே என்னுடன் உறவு கொண்டு, என் இச்சையைத் தணித்து விடு’ என முறையிடுகிறார். ‘சரி அப்படியே ஆகட்டும்!’ என்று கிருஷ்ணர் இசைவு தெரிவித்ததுடன், ‘நீ யமுனையில் குளித்தால் பெண்ணாகி விடுவாய்’ என்று இன்னொரு யோசனையும் சொல்கிறார்.

 

60 ஆண் குழந்தைகள்

 

அதன்படியே நாரதர் யமுனை நதியில் மூழ்கி எழ, பெண்ணாக வடிவம் கொண்டார். அந்தப் பெண்ணுடன் கிருஷ்ணர் உறவு கொண்டார். அந்த உறவில் 60 ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளின் பெயர்கள்தான் ப்ரபவ முதல் அக்ஷய வரையில் அமைந்துள்ள ஆண்டுகள். ஏன் அத்தனையும் ஆண் குழந்தைகளாகவே பிறந்த என்பதற்கு புராணத்தில் விடையில்லை.

 

தமிழ் புத்தாண்டின் பெயர்களின் பின்னணியில் இப்படியும் ஒரு புராண ஆபாசக் கதை சொல்லப்படுகிறது.

 

ஆரியர்கள் தலையெடுத்து, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான பிறகு, தமிழ் மொழி நிறையவே சிதைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்ப்பண்பாடும் சிதிலமடைந்து இருக்கிறது. நாம் பேசும் பல சொற்கள் சமஸ்கிருத கலப்புடன் இருப்பதும், பல சடங்குகள் ஆரிய மாயைக்குள் சிக்குண்டு கிடப்பதும் அவர்களின் ஆதிக்கத்தால் விளைந்தவை. அதை பிற ஆதிக்க இடைநிலைச்சாதியினர் அப்படியே உள்வாங்கிக் கொண்டனர்.

 

சரி. தமிழ் இலக்கியங்களில் தைத் திங்கள் குறித்து என்ன சொல்லி இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

 

சங்க இலக்கியங்கள் பேசுகின்றன

 

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்கிறது நற்றிணை. ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்கிறது குறுந்தொகை. ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ எனப்பாடுகிறது புறநானூறு. கலித்தொகையோ, ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ என்கிறது. ‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்கிறது ஐங்குறுநூறு. இப்படி சங்க இலக்கியங்கள், தைத்திங்களின் பெருமை பேசுகின்றன.

 

இந்தப் பாடல்களின் முழு பொருளும் வேறானவை. அவற்றில், தமிழ்ப் புத்தாண்டு பற்றி குறிப்பிடப்படவில்லை. சொல்லப்போனால் சங்க இலக்கியங்களில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த தரவுகளே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், சங்க இலக்கியங்களில் குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றால் அது தை மாதம் மட்டுமே. அதற்காகவே இங்கே குறிப்பிடுகிறேன்.

 

இன்னொரு தர்க்கத்தின் அடிப்படையிலும் தை மாதமே புத்தாண்டாக இருக்கும் என்பதை அறிஞர்கள் நிருவுகின்றனர்.

 

பெரும்பொழுது 

 

திங்களின் வளர்பிறை, தேய்பிறைகளைக் கொண்டே தமிழர்கள் ஆண்டைக் கணக்கிட்டுள்ளனர். அதனால்தான், மாதத்தைத் திங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். திங்கள், ஞாயிற்றை சுற்றி வர 27 நாள்கள், 7 மணி, 43 மணித்துளிகள் எடுத்துக்கொள்கிறது.

 

காலத்தையும் தமிழர்கள், பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என இரண்டாக பிரித்தனர். பெரும்பொழுதுகளாக

இளவேனில் (சித்திரை, வைகாசி),

முதுவேனில் (ஆனி, ஆடி),

கார் (ஆவணி, புரட்டாசி),

கூதிர் (அய்ப்பசி, கார்த்திகை),

முன்பனி (மார்கழி, தை),

பின்பனி (மாசி, பங்குனி) எனவும் வகுத்தனர்.

 

சிறுபொழுது

 

தவிர, ஒரு நாளையும்கூட

வைகறை (அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை),

காலை (6 முதல் 10 மணி வரை),

நண்பகல் (10 முதல் 2 வரை),

எற்பாடு (2 முதல் 6 வரை),

மாலை (6 முதல் 10 வரை)

யாமம் (10 மணி முதல் 2 மணி வரை)

என வகைப்படுத்தினர்.

 

ஒரு நாள் என்பது 60 நாழிகை

 

இன்னும் துல்லியமாக ஒரு நாள் என்பது 60 நாழிகை எனவும், ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 2.5 நாழிகை எனவும் கணக்கிட்டனர். 60 நாழிகையையும், 24 நிமிடங்களையும் பெருக்கக் கிடைக்கும் 1440 நிமிடங்களை 60 நாழிகையால் வகுத்தால் இப்போதுள்ள 24 மணி நேரம் என்பது துல்லியமாகப் பொருந்தும்.

 

தொடக்கத்தில், தமிழர்கள் தை மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடி வந்துள்ளனர். அதாவது முன்பனிக் காலத்தில். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், மஞ்சூரியர்கள், ஸ்காட்லாந்து, மெசிடோனியர்கள், பல்கேரியர்கள், செர்பியர்கள், உக்ரைனியர்கள் மற்றும் பிற தொல் பண்பாட்டுக் குடிகளும் முன்பனிக் காலத்தில்தான் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

 

தொல்காப்பியம்

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சி குறித்து விள க்குகையில், ‘திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன’ என்று குறிப்பிடுகிறது. எல்லா திங்களின் பெயர்களும் ஐ, இ ஆகிய இரு எழுத்துகளின் ஓசையில் முடிவடைவதைக் காணலாம்.

 

இப்படி இலக்கிய சான்றுகள் மட்டுமின்றி, தை முதல்நாள்தான் ஆண்டின் தொடக்கம் என்பதை வானவியல் அடிப்படையிலும் ஒத்துப்போவதை தரவுகளாக முன்வைப்போரும் உண்டு.

 

வடசெலவு – தென்செலவு

 

பூமி சூரியனைச் சுற்றிவர ஓர் ஆண்டாகிறது. இந்தச் சுழற்சியில் சூரியன் ஒரு பகுதிக்காலம் வடதிசை நோக்கியும், மறுபாதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்கிறது. வடதிசை நோக்கிச் செல்வதை வடசெலவு (உத்ராயனம்) என்றும், தென்திசையில் செல்வதை தென்செலவு (தட்சனாயனம்) என்றும் சொல்கின்றனர்.

 

தை முதல் ஆனி வரை வடசெலவு; ஆடி முதல் மார்கழி வரை தென்செலவு. அதன்படி சூரியன் வடசெலவுக்காலம் தைத் திங்களில்தான் தொடங்குகிறது. இந்த வானவியல் உண்மைகளை அறிந்ததால்தான் தமிழர்கள், தை முதல் நாளை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடி வந்தனர்.

 

இதைத்தான் புரட்சிக்கவி பாரதிதாசன்,

 

”பத்தன்று நூறன்று பன்னூறன்று
பல்லாயி ரத்தாண்டன்று தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்”

 

என்று பாடினார்.

 

500 தமிழறிஞர்கள்

 

தமிழ்ப்புத்தாண்டு தையிலா, சித்திரையிலா என்ற குழப்பத்தைத் தீர்க்க 1921ம் ஆண்டு, மறைமலை அடிகளார் தலைமையில் 500 தமிழறிஞர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி விவாதங்களை முன்வைத்தனர்.

 

தர்க்க ரீதியிலும், சான்றுகள் அடிப்படையிலும் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிருவினர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் வேறுபாடின்றி அந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.

 

அரசியல் வன்மத்திற்காக…

 

ஆனால், கடந்த 2008ம் ஆண்டில் திமுக தலைவர் கருணாநிதி, தை முதல் நாளில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொன்னதாலேயே, அடுத்து 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, உடனடியாக அந்த உத்தரவை ரத்து செய்து, பழையபடி சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தது.

 

அரசியல் வன்மத்திற்காக எவ்வித தர்க்க நியாயமும் இல்லாமல் ஒருவர் கூற்றை ஒருவர் மறுதலிக்கின்றனர். தமிழர்கள் வழக்கத்தில் தமிழ்ப்புத்தாண்டு என்று தனியே ஒரு கொண்டாட்டம் இருந்ததற்கான தரவுகள் இல்லை என்பது என்னளவிலான புரிதல்.

 

தைத்திங்களுக்கே முக்கியத்துவம்

 

கார் காலமான ஆவணித் திங்களையும், பனி முடங்கல் காலமான தைத் திங்களையும் போற்றி வந்துள்ளனர். சங்க இலக்கியங்களில், தைத்திங்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு உள்ள தரவுகளின்படி, தைத்திங்களே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளலாம்.

 

சித்திரைதான் வேண்டும் என்போர் ஹிந்து புத்தாண்டு என்று வேண்டுமானால் கொண்டாடிக் கொள்ளலாமே தவிர, தமிழ்ப்புத்தாண்டு என வாதிடல் முறைமை ஆகாது.

 

– பேனாக்காரன்.