Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

தமிழனாக இருந்தால்
ஷேர் செய்யவும் என்ற
கோரிக்கையுடன் வாட்ஸ் அப்பில்
தகவல் வந்தால் போதும்.
என்ன ஏது என்று கூட
முழுவதும் படித்துப் பார்ப்பதில்லை.
உடனடியாக அடுத்தடுத்த
வாட்ஸ் அப் குழுக்களுக்கு அதை
பகிர்ந்துவிட்டுத்தான் மறுவேலை.
தமிழன் என்ற உணர்வைக்
காட்டிக்கொள்ள அதுவே
ஆகச்சிறந்த மற்றும்
எளிமையான வழிமுறையாகப்
பழகிவிட்டோம்.

நீங்கள் மட்டுமல்ல.
அப்படிச் செய்து வந்தவர்களில்
நானும் ஒருவன்.
பிறகு அப்படி செய்வதில்லை.
வெகுசன வாட்ஸ் அப்
பயனர்கள், பகிர்வதன் மூலமே
தமிழர் என்ற உணர்வில்
உச்சி குளிர்ந்து கிடக்கும்
சக தோழர்களுக்காக
இந்தக் கட்டுரை.

கடந்த பதினைந்து நாள்களாக
வாட்ஸ் அப்பில், ”தமிழ்நாட்டின்
மிகப்பெரிய பொக்கிஷம்
தமிழர்களிடம் இருந்து
பறிக்கப்படப் போகிற
விஷயம் நம்மில் எத்தனை
பேருக்கு தெரியும்?” என்ற
தலைப்பிலான ஒரு பதிவு
உலா வருகிறது.

அந்தப் பதிவில், பின்வருமாறு சில விவரணைகள் இருந்தன…

”சென்னை பனகல் பார்க்கில்
முகம் முழுக்க தாடி மண்டிய
நிலையில் ஒருவர் தனக்குத்தானே
பேசிக்கொண்டு இருந்தார்.
அவரை பலரும் பைத்தியம்
என்று கருதினர். ஆனால்
அவர் பைத்தியம் இல்லை.
இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி
மையத்தில் முக்கிய
பதவியில் இருந்தவர்.

தமிழகத்தில் பூமிக்கடியில்
ஸ்தோத்திரியம் என்ற மிக
அரிதான, எடைக்குறைவான
தனிமம் டன் கணக்கில்
புதைந்து கிடக்கிறது.

இந்த ஸ்தோத்திரியத்தில்
இருந்துதான் அணு குண்டுகளை
மடக்கி, குறி தவறாமல் சுடும்
வல்லமை படைத்த துப்பாக்கிகளை
செய்கிறார்கள். இந்த துப்பாக்கிகள்
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன்,
பிரான்ஸ் நாடுகள், அரபு நாடுகள்
ஆகியவை வைத்திருப்பதாக
பாகிஸ்தான் உளவு அமைப்புகள்
தெரிவிக்கின்றன.

இந்த ஸ்தோத்திரியத்தை
ஆராய்வதற்குதான் இந்தியா
செயற்கைக்கோள்களை அதிகளவில்
அனுப்பி வருகிறது. அமாவாசை
இரவில் பார்த்தால்,
செயற்கைக்கோள்களில் இருந்து
கேமராக்களின் ஃபிளாஷ்
வெளிச்சம் தெரியும்.

அனைத்து வீடுகளிலும்
கழிப்பறை கட்டுவதன் நோக்கம்
தூய்மையைக் காப்பது அல்ல.
அதற்காக தோண்டப்படும்
மண்ணை பரிசோதனை செய்து,
அதில் ஸ்தோத்திரியம்
கலந்திருக்கிறதா என்பதை
அறியத்தான்.

சேலம் – சென்னை இடையே
விமானம் இயக்கப்படும்போது
விமான சக்கரத்தில்
பொருத்தப்பட்டிருக்கும் உணர்விகள்
மூலம் மலைப்பகுதியில்
புதைந்திருக்கும் ஸ்தோத்திரியத்தை
கணக்கிட முடியும்.
அதற்காகத்தான் சாலைகள்
விரிவாக்கம் செய்யப்படுகின்றன…”

இப்படி நீள்கிறது அந்தப் பதிவு.

முழுக்க முழுக்க தமிழர்களை
முட்டாளாக்கும் பதிவு இது.
எப்படி எனச் சொல்கிறேன்.
உண்மையிலேயே ஸ்தோத்திரியம்
என்ற தனிமமே உலகில் கிடையாது.
உலகில் மிகவும் எடை
குறைவான தனிமம் என்றால்
அது, டெக்னீஸியம் மட்டும்தான்.
அதன் அணு எண் 43.
முதல்முதலில் உருவாக்கப்பட்ட
செயற்கைத் தனிமமும்கூட.

விஷமிகள் யாரோ திட்டமிட்டு,
தமிழர்களின் மூளையை
மழுங்கடிக்கச் செய்யும் நோக்கில்,
கிறித்தவர்கள் ஏசுவுக்கு
நன்றி செலுத்தப் பயன்படுத்தும்
‘ஸ்தோத்திரம்’ என்ற சொல்லை
உல்டா செய்து, ஸ்தோத்திரியம்
தனிமம் என்று நாமகரணம்
சூட்டியுள்ளனர்.

இதுபற்றி அறிவியல் ஆர்வலர்கள்,
விஞ்ஞானிகளிடம் கேட்டால்
குட்டு வெளிப்பட்டு விடும்
என்பதை அறிந்த விஷமிகள்,
‘இதுபற்றி தயவு செய்து யாரும்
அறிவியல் ஆர்வலர்களிடம்
விவாதிக்க வேண்டாம்’ என்றும்
அந்த பதிவில் கோரியுள்ளனர்.

அடுத்து, இந்திய ஆராய்ச்சித்
துறையில் முதன்மைப் பொறுப்பில்
இருந்த ஒரு விஞ்ஞானி
மனநலம் பாதித்தால் அப்படியே
விட்டு விடுவார்களா என்ன?
அதுவும் அவர் மனநலம்
பாதித்தவர் போல நடித்து,
அங்கிருந்து தப்பி வந்து விட்டாராம்.
அவரைக் கண்டுபிடிக்கவே முடியாத
நிலைமையிலா இந்திய உளவு
அமைப்புகள் இருக்கின்றன?
அதையும் அந்த விஷமி,
விஞ்ஞானியை, விஞ்சாணி என்று
சாணி அடித்திருக்கிறார்.

அமாவாசை இரவில் வானை
உற்று ‘நோக்கியாபடி’ (நோக்கியபடி
இல்லையாம். எல்லாமே இங்கு
நோக்கியாதான்) இருந்தால்,
செயற்கைக்கோள்களின் கேமராக்களில்
இருந்து ஃபிளாஷ் வெளிச்சம் தெரியும்
என்றும் காதுகளில் பூ சுற்றி
இருக்கிறார். அதை அறியாத
தமிழர்கள், சகட்டுமேனிக்கு
நாட்டுக்கு நல்லது செய்கிறேன்
என்ற உணர்வில் தங்களுக்குத்
தெரிந்த வாட்ஸ் ஆப்
குழுக்களுக்கெல்லாம் இந்தப்
பதிவை பரப்பத் தொடங்கி
விட்டனர்.

அடுத்த காமெடி என்னவெனில்,
ஸ்தோத்திரியம் தனிமம் (?)
குறித்து ஆண்ட்ராய்டு மண்ணியல்
ஆய்வாளரான அலெக்சாண்ட்ரியோ
காவாஸாகி பெட்ரோஷ்வஸ்கி
என்பவரிடம் கருத்து கேட்டுள்ளனர்.
அவரும் அந்த தனிமம்
குறித்து விளக்கம்
அளித்துள்ளது வேறு கதை.

பெயர் குறிப்பிடாத அந்த
விஷமப் பதிவர், ஸ்தோத்திரியம்
குறித்து அறிவியல் நிபுணர்
ஒருவரிடம் ஆலோசனை
செய்தாராம். அவர் பெயரைக்
கேட்டால், சிரிக்காமல்
இருக்க முடியாது.

தமிழ்ப்படத்தில் நடிகர் விவேக்
ஒருவருக்கு வணக்கம் சொல்ல,
‘மிட்ஸூபிஷி’ என்றும்,
அதற்கு பதில் வணக்கம் சொல்ல
‘ஹிட்டாச்சி ஹிட்டாச்சி’ என்றும்
சொல்வார். அந்தப் பாணியில்
அமைந்ததுதான் அலெக்சாண்ட்ரியோ
காவாஸாகி பெட்ரோஷ்வஸ்கியின்
பெயரும். பெயரை மறுவாசிப்பு
செய்தால், காவாஸாகி என்ற
வாகனத்தின் பெயரும்,
விஸ்கி போன்ற மது
வகையின் பெயரும்
இருப்பதை அறியலாம்.

உச்சக்கட்ட காமெடியும்
செய்திருக்கிறார் அந்த
விஷமப் பதிவர். இந்தப் பதிவை
பிறருக்கு பகிர்ந்தால் ஒரு
பகிர்வுக்கு ஒரு ரூபாய்
தருவதாக ஒரு பெருவணிகர்
சொல்லி இருக்கிறாராம்.
அவரும் லேசுப்பட்ட ஆளில்லை.
அவர் 150 நாடுகளுக்கு எண்ணெய்
விபாயாரம் செய்கிறாராம்.

இதுபோன்ற தகவலை
தாங்கி வரும் பதிவுகளை
நாம் பகிர்ந்தால், பெருவணிகர்
யாருடைய வங்கிக் கணக்கில்
அந்த ஒரு ரூபாயை போடுவார்?
அப்படி எத்தனை கோடி போடுவார்?
எத்தனை ஆண்டுக்கு இந்த பதிவு
உலா வரும்? என்று கொஞ்சமும்
யோசிக்காமலேயே நாமும்
அடித்து விடுகிறோம். அதுதான் தமிழன்.

அந்தப் பெருவணிகர் கொடுக்கும்
பணத்தை வைத்து, பைத்தியமாகி
கிடக்கும் விஞ்ஞானியை குணப்படுத்தி
விடலாம் என்கிறார் அந்தப் பதிவர்.
அவர், பைத்தியம்போல் நடித்தார்
என்று முன்பே ஒரு பத்தியில்
சொல்லி இருப்பதையும், தமிழனாக
இருப்பவர்கள் பிறருக்கு பகிரும்
முன்பு சிந்திக்க வேண்டும்.

இன்னொரு நகைச்சுவையும் உண்டு.

இந்தப் பதிவு கடைக்கோடி
தமிழர்க்கும் சென்றடைய
வேண்டுமானால் 2019ம் ஆண்டு
மே மாதம் வரை எந்த
செய்தித்தாளையும் படிக்கக்
கூடாதாம். அப்படியே படித்தேதான்
தீருவேன் என்றால் ஆங்கில
செய்தித்தாளை படியுங்கள் என
பரிந்துரை செய்துள்ளதுடன்,
ஆங்கிலம் புரியும் என்றால்
தயவு செய்து அதை விடுத்து,
ஹிந்தி செய்தித்தாளை படியுங்கள்
என்றும் சொல்லி இருக்கின்றனர்.

இறுதியாக, வழக்கம்போல்
தமிழனாக இருந்தால்
சேர் செய்யுங்கள் என்ற
கோரிக்கையுடன் பதிவை
நிறைவு செய்துள்ளனர்.

உலகளவில் இந்தியர்களிடம்தான்
வாசிப்புப் பழக்கம் குறைந்து
இருக்கிறது. அமெரிக்கர்கள்
ஆண்டுக்கு சராசரியாக
800 பக்கங்கள் வாசிக்கின்றனர்.
ஆனால், இந்தியர்களோ வெறும்
33 பக்கங்கள்தான் படிக்கின்றனர்.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற
சமூக ஊடகங்களில் வாசிக்கும்
பழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
ஆனாலும், ஒருவர் சராசரியாக
3 நிமிடங்களுக்கு மேல் குறிப்பிட்ட
ஒரு பதிவை பார்ப்பதில்லை
என்கிறது ஓர் ஆய்வு.

அப்படித்தான் வாட்ஸ்அப்பில்
பதிவிடும் சில விஷமிகளின் பதிவும்,
முழுவதும் படித்துப் பார்க்காமலேயே,
பிறருக்கு வேகவேகமாக பகிரப்படுகிறது.
சமூக ஊடகங்களில் கவனம்
செலுத்தத் தொடங்கியதன்
விளைவுதான் தமிழர்கள் போராட
தெருவுக்கு வராமல்,
சமூக ஊடகங்களில் மட்டுமே
போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால்தான்,
காவிரிக்காக பிரதமர் மோடிக்கு
எதிராக கருப்புக்கொடி காட்டிய
வழக்கில் 3000 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,
மோடி தொடங்கி வைத்த
ராணுவக் கண்காட்சியை 3 லட்சம்
தமிழர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
எனில், தமிழன் என்ற
உணர்வு எங்கே? எதிலே இருக்கிறது?
என்பதே ஆய்வுக்கு உட்படுத்த
வேண்டிய ஒன்றுதான்.

அந்தப் பதிவில் ஓரிடத்தில்
நாளை ஏப்ரல் 2ம் தேதி.
நாளை முதல் இந்தப் பதிவை
வேகமாக பகிருங்கள் என்றும்
கோரப்பட்டுள்ளது. அதை
கவனித்திருந்தால் கூட,
இது நம்மை ஏமாற்றும் மோசடியான
பதிவு என்பதை உணர்ந்திருக்க முடியும்.
அதற்கெல்லாம் தமிழனுக்கு
எங்கே நேரம் இருக்கிறது?

தமிழனாக இருந்தால்
ஷேர் செய்தே ஆக வேண்டும்
என்று துடிப்பவர்கள், அதே உணர்வுடன்
பகிரும் முன்பு சம்பந்தப்பட்ட
தரவுகளை படித்துப்பார்த்து,
தீர ஆராய்ந்த பிறகு பகிர வேண்டும்.
அப்போதுதான், சமூக ஊடக
தமிழனாக இல்லாமல் பண்டைய
தமிழர்கள் போல் அறிவார்ந்த
சமூகத்தை உருவாக்க முடியும்.

 

– பேனாக்காரன்.