Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்; 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

வரும் 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு, ரூ.8000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும், 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக வெளிநடப்பு:

 

2018&2019ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15, 2018) தாக்கல் செய்தார். காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்தும், இது தொடர்பாக சந்தித்துப் பேச தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்காததைக் கண்டித்தும் திமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சீருடையில் வந்திருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதுமே, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

காலை 10.35 மணியளவில் பட்ஜெட் உரை வாசிக்கத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், 12.55க்கு நிறைவு செய்தார். சுமார் 2.30 மணி நேரம் பட்ஜெட் உரை வாசித்தார். மத்திய அரசுக்கு எதிரான சில கருத்துகளும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் பற்றாக்குறை பட்ஜெட்டே தாக்கலானது. மொத்தம் ரூ.44480 கோடி பற்றாக்குறை என சொல்லப்பட்டுள்ளது.

14வது நிதிக்குழுவில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 89 சதவீதம் நிதி வழங்கியுள்ளது. அதேநேரம், கர்நாடகா மாநிலத்திற்கு 155.14%, மஹாராஷ்டிராவிற்கு 148.82%, குஜராத் மாநிலத்திற்கு 137.70%, கேரளாவிற்கு 149.82% நிதியைப் பெற்றுள்ளன. மத்திய அரசு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைத்துள்ளது.

 

பட்ஜெட் துளிகள்…

 

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ரூ.1789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும். மேலும், தமி-ழகத்தில் பல இடங்களில் புதிதாக ரூ.250 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும். சேலம், ஈரோடு உள்பட 10 மாவட்டங்களில் உணவுப்பதப்படுத்தப்படும் பூங்கா அமைக்கப்படும்.

உயர்கல்வித்துறைக்கு ரூ.4620 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும். பிரசிடென்ஸி, ராணி நேரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பாரம்பரியமான கல்லூரிகளை புதுப்பிக்கவும் ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலின் 107.55 கி.மீ. நீள வழித்தடம் அமைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநிலத்தின் இதர இடங்களில் ரயில்வே பணிகளை நிறைவேற்ற ரூ.513.66 கோடி ஒதுக்கப்படும். கோவையில் டைசல் உயிர்ப்பூங்கா, பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழில் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை சுற்றுவட்டச் சாலை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.12301 கோடியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும்.

சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.3881.66 கோடி ஒதுக்கீடு.

அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி ஒதுக்கீடு. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.12000ல் இருந்து ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

தானிய கொள்முதல்:

 

விவசாயம், இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியத்திற்காக ரூ.7537.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் போலவே துவரை, உளுந்து, பச்சைப் பயறு உள்ளிட்ட தானியங்களையும் இனி அரசே நேரடியாக கொள்முதல் செய்யும்.

கடந்த 2017-18ம் ஆண்டுக்கு உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு ரூ.5500 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது, 2018-19ம் ஆண்டுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.500 கோடி அதிகம்.

விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு. காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் விடுதி கட்டப்படும்.

பிரதமர் கிராமப்புற சாலைத் திட்டப்பணிகள் ரூ.1244.35 கோடி மேற்கொள்ளப்படும்.

சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.2146.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

உலக முதலீட்டாளர் மாநாடு:

 

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டு மானியம் ரூ.2000 கோடியாக உயர்த்தப்படும்.

இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு. விளையாட்டு பல்கலையில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்திற்கு ரூ.13.12 கோடி ஒதுக்கப்படுகிறது.

உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் தமிழக மின்வாரியத்திற்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.

வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும்.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும்.

 

‘உழவன்’ செயலி:

 

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்ததில் நாட்டிலேயே 2வது மாநிலம் தமிழகம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1361.60 கோடி நிதி ஒதுக்கீடு

புற்றுநோய் சிகிச்சைக்கென ரூ.34 கோடியில் புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும். மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் ரூ.48 கோடியில் தரம் உயர்த்தப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும். மீன்வளத்துறைக்கு ரூ.1016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.

 

இலங்கை அகதிகள்:

 

ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும்.

தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். 3 லட்சம் வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்த வருவாய் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.2894.63 கோடியில் 20095 வீடுகள் கட்டப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளின் நலன்களுக்காக ரூ.109.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

வெள்ளத்தடுப்பு மேலாண்மைத் திட்டம்:

 

குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகம், மீன் பதப்படுத்தப்படும் பூங்கா அமைக்கப்படும்.

தென் சென்னையில் ரூ.1245 கோடியில் வெள்ளத்தடுப்பு மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு. திருமண உதவித் திட்டத்திற்கு 724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.