Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!; மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

இன்று (மார்ச் 15, 2018) நடந்த சிபிஎஸ்இ பிளஸ்2 மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு வினாத்தாள் நேற்று மாலையில் முன்கூட்டியே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதால் மாணவர்களும், பெற்றோர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்வு நடந்து வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று கணக்குப்பதிவியல் தேர்வு நடந்தது.

இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று மாலையிலேயே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதாகக் கூறப்படுகிறது. வினாத்தாளின் சில பகுதிகள் மட்டும் வெளியாகி இருந்தன. பொருத்துக விடையளிக்கும் வினாவிற்கான விடைகள் தரப்பட்டிருந்தன. ஒருவேளை, விஷமிகள் யாராவது போலியாக அவ்வாறு பரப்பியிருக்கலாம் என மாணவர்கள் கருதினர்.

எனினும், தேர்வுக்காக தயாராகி வருவதால் வாட்ஸ் அப்-ல் வெளியான வினாத்தாளில் உள்ள வினாக்களையும் படித்துக் கொண்டனர். இந்நிலையில், இன்று நடந்த தேர்வில் நேற்று வாட்ஸ் அப்-ல் கசிந்த அதே வினாத்தாளே கொடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று வெளியான வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினா-விடை பகுதியில் உள்ள வினா எண்களும், இன்று தேர்வுக்கூடத்தில் வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள வினா எண்களின் வரிசையும் மாறி மாறி இருந்ததே தவிர, முன்கூட்டியே வெளியானதாகச் சொல்லப்படும் வினாத்தாளில் இருந்த வினாக்களே இடம் பெற்றிருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிபிஎஸ்இ-க்கு கடும் கண்டனங்களை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் சிலர், ”கடந்த 9ம் தேதி நடந்த வேதியியல் தேர்வு நடந்தது. தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே வேதியியல் தேர்வு வினாத்தாள் வெளியானது. இதில் ஏதோ சதி உள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டு, ஏப்ரல் மாதம் புதிதாக தேர்வுகளை நடத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பிஸினஸ் ஸ்டடீஸ் தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. திட்டமிட்டு இதுபோன்ற சதியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ”அக்கவுண்டன்சி வினாத்தாள் கசிந்தது குறித்த புகார்கள் வந்தன. இதுகுறித்து கல்வித்துறை இயக்குநர்களிடம் விசாரிக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சிபிஎஸ்இ மூலமாக புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.