Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar

– சிறப்புக் கட்டுரை –

 

உலகம் கொண்டாடிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், இன்று (மார்ச் 14, 2018) தனது 76வது வயதில் மரணம் அடைந்தார். கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கோட்பாடுகளில் பெரியார் சிந்தனைகளுடன், ஸ்டீபன் ஹாக்கிங் பல இடங்களில் ஒத்துப்போகிறார்.

 

ரகசியங்கள் இல்லை:

 

ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி இந்த சமூகத்திற்கு தன்னையே உதாரண மனிதராக நிரூபித்துக் காட்டிச்சென்றிருக்கிறார். அவருக்கென தனித்த ரகசியங்கள் எதுவுமே இல்லை. அதனால்தான், ‘நான் சுயசரிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை’ என்று அவரால் துணிவுடன் சொல்ல முடிந்திருக்கிறது.

 

 

முதலாளித்துவ சிந்தனை மேலோங்கிக் கிடக்கும் பிரிட்டனில் ஒரு குக்கிராமத்தில் 1942ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதி பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்பா ஆசைப்பட்டதற்கிணங்க தான் ஒரு மருத்துவராகி விட வேண்டும் என்ற ஆசை, இளம் பிராயத்தில் அவருக்கு இருந்தது. கல்லூரிக்காலம் வரை அவருடைய வாழ்வில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.

 

தசை உருக்கி நோய்:

 

அவருடைய 21ம் வயதில்தான் அந்த பேரிடி இறங்கியது. நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிளீரோசிஸ் (ஏஎல்எஸ்) (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்ற நோய் தாக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். தசை உருக்கி நோய் என்கிறார்கள். கழுத்துக்குக் கீழ் உடலின் எந்த பாகமும் அசையாது. அதுதான் இந்த நோயின் தன்மை.

 

அவ்வளவுதான். மருத்துவ உலகம் அவருடைய வாழ்நாளுக்கு கெடு விதித்து விட்டது. 23 வயதுக்குப் பிறகு அவர் உயிருடனே இருக்க மாட்டார் என்றார்கள். அந்த வியாதியின் வீரியம் அப்படிப்பட்டது.

 

மனவலிமையும், தன்னம்பிக்கையும் ஒருவரை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு ஸ்டீபன் ஹாக்கிங், ஆகச்சிறந்த உதாரணம். அதனால்தான், அவர் தன்னையே இந்த சமூகத்திற்கு உதாரணமாகக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.

 

 

விழி அசைவுகள்:

 

நம்பிக்கை இழக்காத ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். கன்னத்தசைகள் மற்றும் விழி அசைவுகள் மூலமே பேசினார். அதை புரிந்து கொண்டு செயல்படுத்தும் வகையில் அவருக்கென ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டது.

 

மூக்குக்கண்ணாடியில் சென்சாரும் பொருத்தப்பட்டது. கணிப்பொறியுடன் கூடிய சக்கர நாற்காலியே அவரின் சிம்மாசனமாக மாறிப்போனது. அந்த சக்கர நாற்காலியிலேயே அரை நூற்றாண்டுகள் பயணித்த அரிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.

 

இன்றளவில் அண்டவெளி குறித்த ஆராய்ச்சிகள் பற்றி பெரிய அளவில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சியே அடித்தளம் எனலாம்.

 

ருந்துளைகள் ஆராய்ச்சி:

 

உலகமே பெருவெடிப்பு (பிக் பேங்) பற்றி பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அதைக்கடந்து, ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளைகள் (Black Holes) ஆராய்ச்சி பற்றி பேசினார். பிரபஞ்சத்தின் முடிவு, கருந்துளைகளில்தான் முடியும் என்றார்.

 

பிளாக் ஹோல்ஸ் மட்டுமின்றி ஏலியன், டைம் மெஷின் குறித்தும் ஆராய்ச்சிகளை முன்னெடுத்தார். ஹாலிவுட்டில் வெளியான பல அறிவியல் புனைவுப்படங்கள் இவரின் கண்டுபிடிப்புகளை பின்பற்றியே தயாரிக்கப்பட்டவை.

 

அறிவியல் மீது ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள் என நம்புகிறேன். நான் சொல்ல விழைவது அதையல்ல.

 

 

எளிய மனிதர்களின் பிரதிநிதி:

 

திரும்பவும் சொல்கிறேன். ஸ்டீபன் ஹாக்கிங்கை வெறுமனே அறிவியலாளர் என்ற சட்டகத்திற்குள் மட்டுமே அடைத்துவிட முடியாது. அவர், எளிய மனிதர்களின் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

 

அவரால் நம்மைப்போல் வாய்விட்டு பேச முடியாது. ஆனால், பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக அசைவுகளால் குரல் கொடுத்தார். ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார்.

 

பின்நவீன பெரியார்:

 

அது மட்டுமா…? அவரை பின்நவீனப் பெரியாராக பார்க்கிறேன். முதலாளித்துவம் பேசும் லண்டனில் தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவே வாழ்ந்து வந்தார்.

 

மதம், மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் குறித்தெல்லாம் துணிச்சலான பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறியதால் மதவாதிகளிடம் இருந்து சகட்டுமேனிக்கு வாங்கிக்கட்டிக்கொண்ட நிகழ்வுகளும் ஏராளம்.

 

சில ஒற்றுமைகளின் அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்நவீன பெரியார் என்கிறேன். ஆத்மா, சொர்க்கம், நரகம் குறித்து பெரியார் தனது ‘குடிஅரசு’ நாளேட்டில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…

 

”ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது. அது உடல், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்கின்றனர். உடல், உருவம் இல்லாத ஒன்றுக்காக நாம் பார்ப்பனர்களிடம் தரும் அரிசி, பருப்பு, செருப்பு, துடைப்பம் ஆகியவை எப்படிப் போய்சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

 

இறந்தவர்களின் ஆத்மாவிற்கு திதி கொடுக்க வேண்டும் என்பவர்கள், ஆத்மா பற்றி மூன்று விதமாகச் சொல்கின்றனர்.

 

 

முதலாவது, இறந்த ஜீவனின் ஆத்மா மற்றொரு உடலை பற்றிக்கொண்டு விடும் என்பது. இரண்டாவது, இறந்த ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதுர்லோகத்தை அடைந்துவிடும் என்பது. மூன்றாவது, இறந்த ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்கு தக்கபடி மோட்சத்திலோ (சொர்க்கம்), நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த மூன்றில் எது உண்மை?. எதனை உத்தேசித்து திதி கொடுப்பது?

 

ஆத்மா எனும் பூச்சுற்றல்:

 

மனிதன் மரித்த பிறகு ஆத்மா என்பது ஒன்று பிரிந்து சென்று தண்டனை அனுபவிக்கிறது என்பது பெரும் பித்தலாட்டம். ஆத்மா என்பது பார்ப்பனர்கள் கட்டிவிட்டது. ஆத்மா என்பது வடமொழிச்சொல். தமிழில் அதற்கு சொல்லே இல்லை. வேறு மொழியிலும் ஆத்மா என்பதற்கு சொல் இல்லை.

 

ஆத்மா என்பதே பொய். அது, மதக்கற்பனைக்கு ஒரு பொய் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலைநாட்ட பல பொய்யை பேச வேண்டியிருப்பதுபோல, மதத்தத்துவம் என்ற பொய்யை நிலைநிறுத்தவே, ஆத்மா, தர்மம் என்ற பொய்க்களஞ்சியங்களை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று,” என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

 

பெரியார் வாழ்ந்த காலக்கட்டம் என்பது பொதுவில் நாம் அறிந்ததுதான். சமூக விஞ்ஞானியான பெரியாருக்கு 63 வயதாகும்போதுதான் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறக்கிறார். உலகம் அறிந்த விஞ்ஞானியாக உருவெடுத்த பிறகு, கடவுள் மறுப்பு, மத நம்பிக்கைக்கு எதிரான பல கருத்துகளை அவர் பேசினார். அவற்றில் முக்கியமானது சொர்க்கம், நரகம் பற்றியது.

 

ஒருமுறை, ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த பேட்டியில், ”மனித மூளை ஒரு கணினி போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால், எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும்.

சொர்க்கம், நரகம் கற்பனைக் கதை:

 

மனிதனின் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப் போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்திற்கும் செல்வதில்லை; நரகத்திற்கும் செல்வதில்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாமே வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொன்ன கதை,” என்றார்.

 

அத்துடன் அவர் நின்று விடவில்லை. 2010ம் ஆண்டில் ‘தி கிராண்ட் டிசைன்’ என்ற நூலை எழுதி, வெளியிட்டார். அதில், ‘அண்டம் உருவான விதத்தையும், அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்தப் படைப்பாளியும் (கடவுள்) தேவையில்லை,’ எனக் குறிப்பிட்டார். இதுபோல நிறைய இடங்களில் பகுத்தறிவு சித்தாந்தம் பேசியிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

 

ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் தந்தை பெரியார் பற்றி அறிந்திடாதவர். ஓர் அறிவியலாளராக கடவுள் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறார்.

 

வித்தியாசமான ஒற்றுமை:

 

ஸ்டீபன் ஹாக்கிங் – தந்தை பெரியார் – ஐன்ஸ்டீன் ஆகியோரிடையே வேறு சில வித்தியாசமான ஒற்றுமைகளையும் நான் காண்கிறேன். ஐன்ஸ்டீன் பிறந்த நாளான மார்ச் 14ம் தேதியன்று, ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் அடைந்துள்ளார்.

 

 

”நான் சொல்வதை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எதையும் தங்களின் பகுத்தறிவுக்கு உட்படுத்துங்கள். எதையும் கேள்விக்கு உட்படுத்துங்கள்,” என்பார் பெரியார். இயற்பியலாளர் ஐன்ஸ்டீன், ”கேள்வி கேட்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். நாம் கற்றுக்கொள்வதற்கு அதுதான் சிறந்த வழிமுறை’ என்கிறார்.

 

ஐன்ஸ்டீன் பிறந்தது 1879ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி. பெரியார் பிறந்ததும் அதே 1879ம் ஆண்டுதான். செப்டம்பர் 17ல் ஈ.வெ.ரா பிறந்தார். ஐன்ஸ்டீன், 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி மறைந்தார். அதாவது, ஐன்ஸ்டீன் இறக்கும்போது அவருக்கு வயது 76. ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்த போது அவருடைய வயதும் 76தான்.

 

மூவருக்கும் மற்றோர் ஒற்றுமையும் உண்டு. மூன்று பேருமே இரண்டு திருமணங்களைச் செய்தவர்கள். தோழர் பெரியார், நாகம்மையை மணம் முடித்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு, தனது உதவியாளராக இருந்து, உடல்நலனைக் கவனித்துக் கொண்ட மணியம்மையை சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார் பெரியார். உடல் இச்சை தவிர்த்த, அன்பின் உச்சமாக இருந்தது அவர்களின் திருமண வாழ்வு.

 

 

ஸ்டீபன் ஹாக்கிங், தன்னுடன் கல்லூரியில் படித்த தோழி ஜேன் வைல்டை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் மறைவுக்குப் பிறகு, சக்கர நாற்காலியில் நகர்ந்து கொண்டிருந்த தன்னை பராமரித்து வந்த செவிலியர் எலைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

ஐன்ஸ்டீனும், முதலில் மில்வா மேரிக் என்பவரை காதல் திருமணம் செய்தார். அவர் மறைந்த பிறகு, எல்சா என்பவரை கரம் பிடித்தார்.

 

அரிய விந்தை:

 

ஒரு விஞ்ஞானியாக ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை, ஸ்டீபன் ஹாக்கிங் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் பெரிதாக ஆச்சர்யம் இருக்க முடியாதுதான். ஆனால், எதையும் கேள்விக்கு உட்படுத்துங்கள் என்ற கோட்பாட்டில் ஈரோட்டுப் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சிந்தனைகளுடன் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கும் ஒத்துப்போவதுதான் அறிவுலகில் நிகழும் அரிய விந்தை.

 

அது, ஒரே நேர்க்கோட்டில் எல்லா கிரகங்களும் வரிசை கட்டி நிற்பதைப்போல.

 

– பேனாக்காரன்
பேச: 9840961947.