
பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் மீது குண்டாஸ் பாய்ந்தது!
தொடர்ந்து சில ஆண்டுகளாக போலீசுக்கு போக்குக் காட்டி வந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனை, சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் இன்று (ஆகஸ்ட் 13, 2018) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 17.7.2018ம் தேதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஸ்வராஜ் மஸ்தா வேனையும், காரையும் தடுத்து சோதனையிட்டனர். வேனில் இருந்து 25 மூட்டைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசியும், காருக்குள் 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் வேன் டிரைவர் கீழே எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த சித்திரை பாண்டியன் மகன் டேவிட் (43...