Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் மீது குண்டாஸ் பாய்ந்தது!

 

தொடர்ந்து சில ஆண்டுகளாக போலீசுக்கு போக்குக் காட்டி வந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனை, சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் இன்று (ஆகஸ்ட் 13, 2018) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 17.7.2018ம் தேதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஸ்வராஜ் மஸ்தா வேனையும், காரையும் தடுத்து சோதனையிட்டனர். வேனில் இருந்து 25 மூட்டைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசியும், காருக்குள் 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரிய வந்தது.

டேவிட்

போலீசாரை கண்டதும் வேன் டிரைவர் கீழே எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த சித்திரை பாண்டியன் மகன் டேவிட் (43) என்பதும், ரேஷன் அரிசியை அவர்தான் கர்நாடகாவுக்கு கடத்திச் சென்று கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

 

பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை கள்ளச்சந்தையில் கடத்தி விற்பது குற்றம் ஆகும். இந்நிலையில் ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு இதேபோல் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதாக டேவிட் மீது நான்கு வ-ழக்குகள் சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோவை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும் நடப்பு ஆண்டில் அவர் மீது இரண்டு முறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலும் சில வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன.

 

டேவிட் மீது மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே போலீசாரிடம் சிக்காமல் போக்குக் காட்டி வந்துள்ளார்.

 

ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து விலையில்லா அரிசியை கிலோ 4 ரூபாய்க்கு வாங்கும் டேவிட் அதை கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

 

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜின் பரிந்துரையின்பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், அரிசி கடத்தல் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த டேவிட்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, இன்று டேவிட் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.