கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? – அஜயன் பாலா
சென்னைக்கு வந்த இந்த பத்து வருடங்களில் சென்னை என்றால் மாம்பலம், அடையார், அண்ணா நகர், பெசன்ட் நகர், கேகே நகர், அசோக் நகர் ஆகிய நகரங்களைத்தான் நினைத்திருந்தேன். மீடியாக்கள் எனக்குள் அப்படித்தான் உருவாக்கி வைத்திருந்தன.
உண்மையான சென்னை என்றால் அதாவது பலகாலமாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னை எதுவென்றால், இன்று வட சென்னை என குறிப்பிடப்படும் ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, மூலக்கொத்தளம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், கொண்டித்தோப்பு, புரசைவாக்கம், எழும்பூர் பகுதிகள்தான்.
ஒரு படத்தின் கள ஆய்வுக்காக முதன்முறையாக வட சென்னை செல்ல நேர்ந்த போதுதான் அதிர்ந்து போனேன். சென்னையின் அசலான முகங்களையும் இருண்ட தெருக்களையும் அப்போதுதான் பார்க்கிறேன்.
மூன்று சக்கர பளுதூக்கும் வண்டியிலேயே குடும்பம் நடத்தும் மகிழ்ச்சியான குடும்பங்களையும், மீனவர் வசிக்கும் சகதி ந...