Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது.

கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.

செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்காக
மத்திய, மாநில அரசுகள் வழங்கிய
பல கோடி ரூபாய் ஊக்கத்தொகையை
ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க
செயலாளர் சிவக்குமார் போலி
உறுப்பினர்களின் பெயர்களில்
வரவு வைத்து ஏப்பம் விட்டுவிட்டதாக
புகார்கள் கிளம்பின.

இது தொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு செப். 30ம் தேதி நமது ‘புதிய அகராதி’ இணையத்தில் விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

அதன்பிறகுதான், இந்த விவகாரத்தில் சிபிஐ போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது இப்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊழலுக்கான தொடக்கப்புள்ளி குறித்து அதன் ஊழியர்களிடம் விசாரித்தோம்.

”கிராமப்புற கைத்தறி நெசவாளர்கள்
மற்றும் கைவினைஞர்களின் உற்பத்திகளை
சந்தைப்படுத்துவதற்காக சர்வோதய
சங்கங்கள் தொடங்கப்பட்டன.
இவற்றின் மூலம் கதர் துணிகள்,
கைத்தறி பட்டுச்சேலைகள் உற்பத்தி
செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சங்கங்களை, கேவிஐசி எனப்படும்
மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள்
ஆணையம் நேரடியாக கண்காணிக்கிறது.

பட்டுச் சேலைகளை நெய்து கொடுக்கும்
நெசவாளர்களுக்கு கூலித்தொகை
பட்டுவாடா செய்யப்படுகிறது.
மேலும், நெசவாளர்கள் பெறும் கூலி
அடிப்படையில் காலாண்டிற்கு ஒருமுறை
எம்எம்டிஏ (மாடிஃபைடு மார்க்கெட்டிங் டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்)
எனப்படும் 30 சதவீத ஊக்கத்தொகை
அவர்களின் வங்கிக் கணக்கில்
நேரடியாக செலுத்தப்படுகிறது.

சிவக்குமார்

இந்த ஊக்கத்தொகையில் 20 சதவீதம் மத்திய அரசின் கேவிஐசி துறையும், 10 சதவீதம் தமிழக அரசும் பங்களிக்கின்றன.

 

  • கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இந்த எம்எம்டிஏ ஊக்கத்தொகை வழங்குவது நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகுதான் சர்வோதய சங்கங்களும், கேவிஐசி துறை அதிகாரிகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு, கல்லா கட்டத் தொடங்கினர்.

 

ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்கம்தான் இந்த ஊழலுக்கு
முதன்முதலில் பிள்ளையார்சுழி போட்டது.
ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின்
ஜக்கம்பட்டி கிளையில் 160 கைத்தறி
நெசவாளர்கள் மூலம் பட்டுச்சேலைகள்
உற்பத்தி செய்யப்படுவதாக அலுவலக
கோப்புகளில் பதிவு செய்துள்ளனர்.
உண்மையில், இவர்கள் அனைவருமே
போலி நெசவாளர்கள்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்தராம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான சதாசிவம், கவுதமன், இளையராஜா ஆகிய மூன்று பேரும் விசைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுச்சேலைகளை வாங்கி சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்தனர்.

சதாசிவம் – இளையராஜா – கவுதமன்

தொழில் ரீதியாக அவர்களுக்கும், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிவக்குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் சதாசிவம் சகோதரர்கள் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் அனைத்து கிளைகளிலும் போலி நெசவாளர்களை உறுப்பினர்களாக சேர்த்து விட்டுள்ளனர்,” என்கிறார்கள் ஊழியர்கள்.

இந்த புகார் குறித்து, ஆரம்பத்தில் சிபிஐ தரப்பில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு விசாரித்தது. அடுத்தக்கட்டமாக இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல், எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுக்கும் மேலாக நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாம் சிபிஐ போலீசார் வட்டாரங்களில் விசாரித்தோம்.

”ஜக்கம்பட்டி கிளையில் கைத்தறி
நெசவாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள
160 பேரின் பட்டியலை முதலில்
கையிலெடுத்தோம். இவர்கள்
அனைவருமே சதாசிவம் சகோதரர்கள்
வசிக்கும் சுற்றுவட்டார கிராமங்களைச்
சேர்ந்தவர்கள்தான். இந்த பட்டியலில்
உள்ள ஒவ்வொருவரின் வீடுகளுக்கும்
நேரில் சென்று விசாரித்தோம்.
ஒருவர் வீட்டில்கூட கைத்தறி
நெசவுக்கூடம் இல்லை.

உண்மையில்,
நாங்கள் விசாரணைக்குச் செல்லும் வரை,
அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு
தொடங்கப்பட்டு, சர்வோதய சங்கத்தின்
மூலமாக பல கோடி ரூபாய் வரவு, செலவு
நடந்திருக்கும் விவரம்கூட
அவர்களுக்குத் தெரியாது.

இந்த 160 கைத்தறி நெசவாளர்களில் இருந்து,
‘ரேண்டம்’ ஆக 10 பேரை தேர்வு செய்து,
அவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தோம்.
இவர்களுக்கு கேவிஐசி துறை
3 கோடி ரூபாய் எம்எம்டிஏ ஊக்கத்தொகை
செலுத்தி இருப்பதும், இந்தத் தொகையை
சதாசிவம் மூலமாக ஆவாரம்பாளையம்
சிவக்குமாரே நேரடியாக எடுத்துக்
கொண்டதையும் ஆதாரப்பூர்வமாக
உறுதி செய்திருக்கிறோம்.
2014 – 2021ம் ஆண்டு வரையிலான
காலக்கட்டத்தில் இந்த
மோசடி நடந்துள்ளது.

 

  • ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் நூற்போர், நெய்வோர் பெயரில் உள்ள 1000 பேருமே போலி உறுப்பினர்கள்தான். இவர்கள் அனைவருமே சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த சதாசிவம் சகோதரர்கள் மூலம் சேர்க்கப்பட்டவர்கள்.

 

இவர்கள், தங்கள் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சாமானிய மக்களை அணுகி, அவர்களிடம் இருந்து பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை திரட்டியுள்ளனர்.

உள்ளூரில் பிரபலமானவர்கள் என்பதால் அவர்களை நம்பி ஆவணங்களை கொடுத்து உள்ளனர். இந்த ஆவணங்களைக் கொண்டு, கரூர் வைஸ்யா வங்கியில் ஒவ்வொருவர் பெயரிலும் கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டுகளை இவர்களே வாங்கிக் கொண்டனர். கட்டடத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், சுடுகாட்டில் வேலை செய்யும் ஊழியரைக்கூட நெசவாளராக சேர்த்துள்ள அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது.

அவர்களின் கணக்கில் கேவிஐசி துறை செலுத்தும் ஊக்கத்தொகையை சதாசிவம் சகோதரர்களே பல ஆண்டாக எடுத்து வந்துள்ளனர். இவ்வாறு சுருட்டப்படும் தொகையை அவர்கள், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.

இதற்குக் கைம்மாறாக, சதாசிவம் சகோதரர்களிடம்தான் அனைத்துக் கிளைச் சங்கங்களும் பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என ஆவாரம்பாளையம் சிவக்குமார் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இவர்களோ
மில்களிலும், ஷோரூம்களிலும்
கழித்துக் கட்டப்பட்ட பழைய
பட்டுச்சேலைகளை மொத்தமாக வாங்கி,
அதை பாலீஷ், ஷைனிங் செய்து
சர்வோதய சங்கங்களுக்கு தள்ளிவிட்டு,
கொள்ளை லாபம் பார்த்துள்ளனர்.
அவர்கள் சப்ளை செய்த சேலைகள்
அனைத்துமே விசைத்தறியில் நெய்யப்பட்ட
போலி பட்டுச்சேலைகள் என்பதையும்
தரப் பரிசோதனை மூலம்
உறுதி செய்திருக்கிறோம்.

ஜக்கம்பட்டி கிளையில் பட்டுக்கூடு மற்றும் பட்டுநூல் ஆகியவை கொள்முதல் செய்ததிலும் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருக்கிறோம்.

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார்தான் இந்த மோசடியை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார். ஜக்கம்பட்டி கிளையின் முன்னாள் மேலாளர் பாலாஜி, கேவிஐசி துறை அதிகாரிகள், சதாசிவம் சகோதரர்கள் ஆகியோர் மோசடி குற்றத்தில் உடந்தையாக இருந்துள்ளனர்.

பாலாஜி

ஜக்கம்பட்டி கிளையில் ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி ரூபாய்க்கு கைத்தறி பட்டுச்சேலை வியாபாரம் நடந்து வந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு ஆண்டில் திடீரென்று 16 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக போலி கணக்கு காட்டியுள்ளனர். இந்த விற்பனைக்கு ஏற்ப ஊக்கத்தொகை பெற்றும் மோசடி செய்துள்ளனர்,” என்கிறது சிபிஐ வட்டாரம்.

 

  • கேவிஐசி துறை அதிகாரிகளைப் பொருத்தவரை, ஆவாரம்பாளையம் சிவக்குமார் என்பவர் பொன் முட்டையிடும் வாத்து. அங்கு ஊழல் நடப்பதாக சாட்டையைச் சுழற்றினால், தங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் கையூட்டும், ‘பலான’ மேட்டர்களும் அடியோடு முடங்கி விடும் என்பதாலேயே அவர்கள் இதுவரை ஊழல் முறைகேடுகளை கண்டுகொள்ளவில்லை என்கிறது ஒரு தரப்பு.

 

சிபிஐ விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் ஆவாரம்பாளையம் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் எனத்தெரிகிறது. கேவிஐசி தரப்பிலும் சில தலைகள் உருளலாம் என்கிறார்கள்.

சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து, ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க நெசவாளர்களுக்கு எம்எம்டிஏ ஊக்கத்தொகை பட்டுவாடா செய்வதை நிறுத்தி வைத்து மும்பையில் உள்ள கேவிஐசி தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சங்கம் புதிதாக வங்கியில் கடன் பெறவும் தடை விதித்திருக்கிறது.

இந்த ஊழல் புகார் குறித்து கேவிஐசி துறையின் கோவை உள்கோட்ட உதவி இயக்குநர் சித்தார்த்தன் ஏற்கனவே விசாரித்து இருந்தார். அதனால் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”ஊழல் புகாரில் உண்மை இருக்கிறதா இல்லையா? எவ்வளவு தொகை முறைகேடு நடந்துள்ளது? என ரிப்போர்ட் செய்வது மட்டும்தான் என்னுடைய வேலை. இது தொடர்பாக நீங்கள் மாநில இயக்குநரைதான் கேட்க வேண்டும்,” என்றார்.

சென்னை சர்க்கிள் உதவி இயக்குநர் சந்தர்பால், ”மீட்டிங்கில் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்,” என்று சொல்லிவிட்டு பேச்சை துண்டித்தார்.

பி.என்.சுரேஷ், கே.வி.ஐ.சி. மாநில இயக்குநர்

இதையடுத்து, கேவிஐசி துறையின் தமிழ்நாடு மாநில இயக்குநர் பி.என்.சுரேஷிடம் கேட்டபோது, ”ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை இன்னும் முடியவில்லை. இதற்கிடையே எங்கள் தரப்பிலும் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் தணிக்கை செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. முறைகேடு செய்யப்பட்ட தொகை எவ்வளவாக இருந்தாலும் முழுமையாக வசூலிக்கப்படும். இதற்குமேல் விரிவாக எதையும் சொல்ல முடியாது,” என்றார்.

இந்த புகார் குறித்து ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டோம்.

”சிபிஐ போலீசார் எங்கள் அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை எடுத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே கேவிஐசி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி விட்டனர்.

சிபிஐ விசாரணை காரணமாக ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டபோதும் கூட நடப்பு ஆண்டில் 37 கோடி ரூபாய்க்கு கைத்தறி பட்டுச்சேலைகளை விற்பனை செய்திருக்கிறோம். எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பொய் புகார் அளிக்கின்றனர்,” என ஜாலியாக சிரித்துக் கொண்டே சொன்னார் சிவக்குமார்.

ஆவாரம்பாளையம் மட்டுமின்றி தமிழகம், புதுவையில் உள்ள 70 சர்வோதய சங்கங்களிலும் சிபிஐ போலீசார் விரிவான விசாரணை நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகும் என்கிறார்கள் உண்மையான ஊழியர்கள்.

 

நன்றி: நக்கீரன் இதழ் (2022 டிச. 12-15).

Read Previous Story: http://puthiyaagarathi.com/multi-billion-rupee-corruption-in-sarvodhaya-societies-gang-exploiting-weavers-exposed-with-evidence/ 

 

– பேனாக்காரன்

Leave a Reply