Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

– சிறப்பு கட்டுரை –

 

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதய சிகிச்சை டாக்டர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த துறையையே இழுத்து மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

 

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள இருதய நோய் சிகிச்சைத்துறையில், டாக்டர் கண்ணன் துறைத்தலைவராக உள்ளார். இவர் உள்பட டாக்டர்கள் குணசேகரன், முனுசாமி, தங்கராஜ், பச்சையப்பன், ஞானவேல், சுரேஷ்பிரபு ஆகிய ஏழு பேர் பணியாற்றுகின்றனர்.

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

இவர்களில் டாக்டர் முனுசாமி மீது துறைத்தலைவர் கண்ணன் உள்பட ஆறு டாக்டர்களும் மருத்துவமனை டீன், மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் வரை புகார் மேல் புகார் தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

 

ஒருகட்டத்தில், கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறும் பிற துறை மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் இப்போது கார்டியாலஜி டாக்டர்கள்தான் நிர்வாகத்தின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

 

டாக்டர் முனுசாமி, தனியார் இருதய அறுவை சிகிச்சை டாக்டர் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வைத்தார் என்பதுதான் அவர் மீதான முதன்மை குற்றச்சாட்டு.

 

இதுதவிர அரசு மருத்துவமனையில் இருந்து செயற்கை சுவாசம் அளிக்க உதவும் பேஸ்மேக்கர் (Pacemaker), ரத்தக்கட்டிகளை உறிஞ்சி எடுக்கப் பயன்படும் த்ராம்பஸ் சக்ஸன் கதீட்டர் (Thrombus Suction Catheter) ஆகிய உபகரணங்களை சொந்த கிளினிக்கிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தியதாகவும் டாக்டர் முனுசாமி மீது புகார் புஸ்தகம் வாசிக்கின்றனர்.

 

இதுபற்றி இருதயவியல் துறை டாக்டர் ஒருவரிடம் பேசினோம்.

 

தனியார் டாக்டர் சிகிச்சை:

 

”சார்… தினமும் 350க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். இதுவரைக்கும் ஒருநாள்கூட மருத்துவர் முனுசாமி, புறநோயாளிகள் பிரிவில் வேலை பார்த்தது கிடையாது. எதற்கெடுத்தாலும் நான்தான் இங்கே சீஃப் என்று சொல்லிவிட்டு, ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன்களில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்.

 

அவர் ஆபரேஷன் செய்த நோயாளிகளில் 50 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். இதற்கெல்லாம் உரிய ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த ஜூன் 13ம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஞானசேகர் (47) என்பவரை இருதயக் குழாயில் அடைப்பு என்று கூறி அட்மிஷன் செய்தார். அவருக்கு அடுத்த நாளே ஆபரேஷன் செய்தார். அப்போது ரத்தக்குழாயில் செலுத்த வேண்டிய ஒரு வயரை சரிவர உள்ளே செலுத்த முடியாமல் போனதால், நோயாளி மூர்ச்சையாகிவிட்டார்.

டாக்டர் முனுசாமி

அந்த நேரத்தில் இருதயவியல் துறை டாக்டர்கள் அனைவரும் அருகில் இருந்தும், எங்களை உதவிக்கு அழைக்காமல் எங்கேயோ இருக்கும் தனியார் இருதய அறுவை சிகிச்சை டாக்டர் பாரதிதாசன் என்பவரை, அரசு மருத்துவமனைக்கு வரவழைத்தார். அவர் வந்து சிகிச்சை அளித்த பிறகுதான் ஞானசேகர் என்ற நோயாளி உயிர் பிழைத்தார்.

 

டாக்டர் பாரதிதாசன் இங்கு வந்து சேர 45 நிமிடங்கள் ஆச்சு. துரதிர்ஷ்டவசமாக அந்த நோயாளி இறந்து போயிருந்தால் யார் பதில் சொல்வது? ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைக்கும்தானே கெட்டப்பெயர் ஏற்படும்? இதைப்பற்றி கொஞ்சமும் அக்கறையே இல்லாமல் ஞானசேகர் என்பவருக்கு பாரதிதாசன் சிகிச்சை அளித்தது பற்றி இருதய டாக்டர்களுக்கென்று உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு பெருமை பீற்றிக்கொண்டார்.

 

அவருடைய சொந்த கிளினிக்கிற்கு வரக்கூடிய நோயாளிகளையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துவிட்டு, பணம் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து முன்பு இருந்த டீன் கனகராஜிடமும் புகார் அளித்தோம். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம் என்னவென்று தெரியாது,” என்றார் அந்த மருத்துவர்.

 

நான் போட்ட பிச்சை:

 

இருதயவியல் துறையில் பணியாற்றும் மற்றொரு டாக்டரும் நம்மிடம் பேசினார்.

 

”கார்டியாலஜி டாக்டர் முனுசாமி தொடர்ந்து தான்றித்தனமாகத்தான் செயல்படுகிறார். இதுபற்றி கேட்டால், நான்தான் இந்தத் துறையை உருவாக்கினேன்…. நான்தான் அதிகமான ஆபரேஷன்கள் செய்கிறேன்… என்னால்தான் உங்களுக்கெல்லாம் இன்சூரன்ஸ் மூலம் வருமானம் வருகிறது… இதெல்லாம் நான் போட்ட பிச்சை…யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லிக்குங்க…என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது….என்று பல மருத்துவர்களும் இருக்கும்போதே திமிராக பேசுகிறார்.

 

இதுபற்றியும், அரசு மருத்துவமனையில் இருந்து உபகரணங்களை திருடிச் செல்வது குறித்தும் டாக்டர் முனுசாமி மீது முன்பு இருந்த டீன் கனகராஜிடம் புகார் அளித்தோம். மருத்துவர்கள் சம்பத்குமார், ராஜசேகர் ஆகியோர் விசாரித்தனர். ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரை வைத்து முனுசாமி இந்தப் பிரச்னையை சரிக்கட்டி விட்டார்.

 

அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளை, இங்கே போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை எனக்கூறி அவரோட சொந்த கிளினிக்கிற்கு கடத்திச் சென்று விடுகிறார்.  இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஃபார்மசிஸ்ட் திலகவதி என்பவருக்கு ஆபரேஷன் செய்தார். அவரும் இறந்து விட்டார்.

 

இங்கிருந்து நோயாளிகளை அவருடைய கிளினிக்கிற்கு ரெஃபர் செய்யவும், வெளி நோயாளிகளை இங்கே அழைத்து வந்து இலவச சிகிச்சை அளித்துவிட்டு பணம் வசூலிக்கவும் முஸ்லிம் ஆள் ஒருவர், நர்ஸ் கோகிலா, ‘எக்ஸ்ரே’ பாலு ஆகியோரை ஏஜண்டாக பயன்படுத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேல் வெளி மருத்துவரை அழைத்து வந்து நோயாளிக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். இதையெல்லாம் புகாராக கலெக்டர் முதல் சுகாதாரத்துறை செயலர் வரை அனுப்பி இருக்கிறோம்,” என்றார்.

 

தொழில் தெரியாத ஆளுங்க…

 

ஒட்டுமொத்த இருதய சிகிச்சை துறையும் டாக்டர் முனுசாமிக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், அவர் மீது சொல்லப்படும் அடுக்கடுக்கான புகார்கள் குறித்து டாக்டர் முனுசாமியிடமே அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். (டாக்டர் முனுசாமி சக டாக்டர்கள் எல்லோரையுமே ஏக வசனத்தில்தான் குறிப்பிட்டுப் பேசினார். நாகரிகம் கருதி, அவை தவிர்க்கப்பட்டுள்ளது).

 

”சேலம் அரசு மருத்துவமனையில் நான்தான் இரண்டாவது யூனிட் சீஃப் டாக்டர். எனக்குக் கீழே 5 அசிஸ்டன்ட் இருக்கின்றனர். யாரும் டைமுக்கு வர்றதில்ல. எல்லாரும் இங்கே இருந்து கேஸை கடத்திட்டு போயிட்டு இருந்தனர். ஒரு சீஃப் டாக்டராக இதையெல்லாம் தட்டிக்கேட்டதால் அவங்களுக்கு என்மீது ஒருவித வெறுப்பு இருந்துட்டு இருந்திருக்கு.

 

இதுநாள் வரைக்கும் நான்தான் அதிகளவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் செய்திருக்கிறேன். எனக்குக் கிடைத்த புகழை அவங்களால தாங்கிக்க முடியல.

 

கேத் லேப் (Cath lab) போனீங்கனா… அங்கே குடிக்கிற தண்ணீர், பீரோ, கதீட்டர், பீ.பி. அபாரடஸ் வரைக்கும் எல்லாமே என்னோட ஸ்பான்ஸரில் கிடைச்சதுதான்.

 

அடுத்தது, ஞானசேகர் பேஷன்ட் விவகாரத்துக்கு வர்றேன். அந்த பேஷன்டை இந்த கும்பலில் ஒருத்தர்தான் பார்த்தார். ஹார்ட் அட்டாக்னு சொல்லிட்டு ஒதுக்கி விட்டுட்டானுங்க. அதன்பிறகு என்னிடம் அந்த கேஸ் வந்தது. அந்த பேஷன்டுக்கு முதலில் என்னுடைய அசிஸ்டன்ட் சுரேஷ்பிரபுதான் சிகிச்சை அளித்தார்.

எம்.கே. ராஜேந்திரன், முதல்வர்

அந்த பேஷன்டுக்கு ரத்தக்குழாய் வளைந்து வளைந்து இருந்ததால் அதனுள் ஒரு வயரை செலுத்த முடியாமல் தடுமாறினார். அதனால் ரத்தக்குழாய் அடைச்சிகிட்டதால், பேஷன்ட் ஸ்பாட்லயே காலி. அப்புறம் மருந்து கிருந்து கொடுத்து, கும்மு கும்முனு கும்மி பொழைக்க வெச்சோம்.

 

ஆனால் அடைச்சிட்டு இருக்கற ரத்தக்குழாயை என்ன செய்வது என்று யோசித்தோம். அதன்பிறகு, டாக்டர் பாரதிதாசனிடம் ஃபோன் மூலம் டிஸ்கஸ் பண்ணினேன். உடனடியாக வருமாறு கூப்பிட்டேன். வந்தாரு… பத்தே நிமிஷத்துல முடிச்சிட்டாரு. பேஷன்ட் பொழச்சிக்கிட்டான்.

 

இதை கார்டியாலஜி டாக்டர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் போட்டுவிட்டேன். ஒரு கவுர்ன்மென்ட் டாக்டராக சொல்லணும்னா… அந்த பேஷன்டை காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில்தான் பாரதிதாசனை வரவழைத்து சிகிச்சை அளித்தோம்.

 

இந்த பசங்கள்லாம் 11.30 மணிக்கே ஓடற பசங்க. அவங்க என்கிட்ட தொழில் கத்துக்கிட்டவங்க. அவங்ககிட்ட எப்படி ஹெல்ப் கேட்க முடியும்? அந்த நாளில் ஹெச்ஓடி டாக்டர் கண்ணன் விடுப்பில் இருந்தார். அப்படியே இருந்தாலும் அவருக்கு தொழில் தெரியாது. அவங்க எல்லாம் என்னை ஒழிக்கணும்னு பார்க்கின்றனர்.

 

எனக்குப் போட்டியாக டாக்டர் கண்ணன், முதன்முதலில் ஒருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் சிகிச்சை அளித்தார். அப்போது அவர் தனியார் மருத்துவமனை நர்சிங் பசங்களை உதவிக்கு வைத்துக்கொண்டு சிகிச்சை அளித்தார். இதற்காக அவர் யாரிடம் முன்அனுமதி பெற்றார்?. சார்… நான் ஹானஸ்டா வேலை பார்க்கிறேன். ஒரு பைசாகூட லஞ்சம் வாங்கினது இல்ல. உண்மை எதுவோ அதை விசாரிச்சு எழுதுங்க,” என்றார் டாக்டர் முனுசாமி.

 

டீன் சொல்வது என்ன?

 

இதுகுறித்து சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) எம்.கே.ராஜேந்திரனிடம் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம்.

 

”அரசு மருத்துவமனை சாராத, தனியார் டாக்டரை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வைப்பது என்பது அரசு மருத்துவமனை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. அவ்வாறு அரசு மருத்துவமனைக்கு தனியார் டாக்டரை அழைப்பதாக இருந்தால் அதற்கு மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவமனை டீன ஆகியோரிடம் முன்அனுமதி பெற வேண்டும். டாக்டர் முனுசாமி யாரிடமும் முன்அனுமதி பெறவில்லை. இதுபற்றி இருதயவியல் துறை டாக்டர்கள், முனுசாமி மீது எழுத்து மூலம் புகார் அளித்துள்ளனர்.

 

இதுகுறித்து விசாரிக்க வழக்கம்போல் இதே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களை விசாரணை அதிகாரிகளாக போடாமல், இந்த முறை வெளி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

 

தனியார் டாக்டரை அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வைத்தார் என்று டாக்டர் முனுசாமி மீது புகார் கிளம்பியுள்ள நிலையில், அவரோ தனியார் நர்சிங் மாணவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்ததாக சக மருத்துவர் மீது புகார் சொல்கிறார். தவறின் தீவிரத்தன்மையை உணராமல், ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

 

– பேனாக்காரன்.