Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்; ரயில்வே திட்டம்

ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த ஒருவர், தவிர்க்க இயலாத நிலையில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், அந்த டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக்கொள்ளும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவில் அமல்படுத்த உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வரும் ரயில்வே, காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தி வருகிறது. ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது என்பது இதுவரை குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அதை நிர்வாகமே அனுமதிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.

இவ்வாறு மாற்றித்தரப்படும் டிக்கெட்டுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரே ஒப்புதல் வழங்கலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கூடுதலாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் திட்டமிட்டபடி பயணம் செய்ய இயலாமல், பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், பயண நேரத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் வேறு நபருக்கு அந்த முன்பதிவு டிக்கெட்டை மாற்றித்தர முடியும்.

இதை சம்பந்தப்பட்ட அரசு ஊழியரும் செய்யலாம் அல்லது அவருடைய உயரதிகாரியோ இதர ஊழியரோ கூட ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டு மாற்றம் செய்துகொள்ளலாம்.

தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தனது பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், அவர் தான் முன்பதிவு செய்த டிக்கெட்டை அவருடைய குடும்ப உறுப்பினர்களான பெற்றோர், சகோதர – சகோதரிகள், மகன், மகள், கணவன், மனைவி என யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித் தரலாம். இதற்கும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருந்தால் அவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில்வே அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட வேண்டும். அவர்கள் தங்களது டிக்கெட்டை சக மாணவருக்கு மட்டுமே மாற்றித்தர முடியும். இதற்கான முறையீட்டை அந்த மாணவர் மட்டுமின்றி கல்வி நிறுவனம் சார்பிலும் மேற்கொள்ளலாம்.

திருமணம், திருவிழா போன்ற விழாக்களுக்கு குழுவாகச் செல்ல விரும்புவோரில் யாரேனும் சிலர், இதுபோல பயணத்தை ரத்து செய்ய நேர்கையில், அந்தப் பயணக்குழுவின் தலைவர் பிறக்கு முன்பதிவு டிக்கெட்டை மாற்றித்தருவது குறித்த கோரிக்கை ரயில்வேயிடம் முன்வைக்கலாம். அவரும் இதுபற்றி 48 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில்வேயிடம் தெரிவிப்பது அவசியம்.

குழு பயணத்தின்போது அதிகபட்சமாக 10 சதவீதம் பேர் மட்டுமே இதுபோல் தங்களது முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றித்தர அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஒட்டுமொத்த குழுவுமே பயணத்தை ரத்து செய்கிறதெனில், அவர்களுக்கு இந்த வசதி பொருந்தாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.